• JUST IN | சுட சுட

ரூ.1,000 ரூபாய் மாத ஊதியம்: அர்ச்சகர்களுக்கு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!





தமிழகத்தில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும், இதற்காக 13 கோடி நிதி ஒதுக்கப்படும் எனவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அந்த வகையில் அவர்களுக்கு மாதம் ரூ 1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:

திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ‘’தமிழில் அர்ச்சனை’’ என்ற திட்டம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்தத் துறைக்கு அமைச்சராக வாய்த்துள்ள சேகர்பாபு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஏராளமான கோயிலுக்கு சொந்தமான நிலங்களை அவர் அதிரடியாக மீட்டு வருகிறார். அவரை சேகர்பாபு என்பதைவிட செயல் பாபு என்றே கூறலாம்.

-இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :