• தீபம் - ஆன்மீகம்

வரம் தரும் விநாயகரின் முப்பத்திரண்டு வடிவங்கள்!


- ஆர்.ஜெயலெட்சுமி

விக்னம் தீர்க்கும் விநாயகப் பெருமானின் 32 வடிவங்களும், பக்தர்கள் வேண்டுவதை வேண்டியபடி கொடுத்து, அருள்புரியக்கூடியவை. ஒவ்வொரு வடிவத்திலும், வெவ்வேறு பலன்களைத் தந்து அருள்பவராக எழுந்தருளி, பக்தர்களைக் காப்பதோடு, கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து அருள்பவர்.

லட்சுமி கணபதி :

எட்டு திருக்கரங்களில் கிளி, மாதுளம் பழம், கலசம், அங்குசம், பாசம், கற்பகக்கொடி, கட்கம், வரதம் இவற்றையுடையவர். அமுதப் பிரவாகம் போன்ற வெண்மை நிறத்தை உடையவர். நீலத்தாமரை பூவை கரங்களில் ஏந்திய சித்தி, புத்தி எனும் இருபெரும் தேவியருடன் காட்சி தருபவர்.

பால கணபதி :

நான்கு திருக்கரங்கள், யானை முகம், இளஞ்சூரியன் போன்ற நிறம், குழந்தைத் திருமேனி, வாழை, மா, பலா, கரும்பு இவற்றை நான்கு திருக்கரங்களில் தாங்கிய கோலத்தில், துதிக்கையில் மோதகம் இருக்கும்.

தருண கணபதி :

எட்டு திருக்கரங்கள், யானை முகம், கைகளில் பாசம், அங்குசம், மோதகம், விளாம்பழம், நாவற்பழம், ஒடிந்த ஒரு கொம்பு, நெற்கதிர், கரும்பின் ஒரு துண்டு இவற்றோடு தரிசிக்க முடியும். நல்ல சிவந்த திருமேனி உடையவர்.

பக்தி கணபதி :

தேங்காய், மாம்பழம், வாழைப்பழம், பாயசப் பாத்திரம் இவற்றை நான்கு திருக்கரங்களில் ஏந்தி, யானை முகத்தோடு வெண்ணிறத்தில் காட்சி தருபவர்.

வீர கணபதி :

வேதாளம், வேல், அம்பு, வில், சக்கரம், கத்தி, கேடயம், சம்மட்டி, கதை, அங்குசம், நாகம், பாசம், சூலம், குந்தாலி, மழு, கொடி ஆகிய பதினாறு ஆயுதங்களைத் தாங்கிய திருக்கரங்களைக் கொண்டவர். சிவந்த திருவுருவம் மற்றும் சினந்த முகம் உடையவர்.

சத்தி கணபதி :

அந்தி வானத்து நிறம், பச்சை நிற தேவியைத் தழுவிக் கொண்டிருப்பவர். ஒருவருக்கொருவர் இடுப்பில் கைகொடுத்துத் தழுவிக் கொண்டிருப்பது தனிப்பட்ட அழகாக அமைந்ததாகும். பாசம், பூமாலை இவற்றைத் தாங்கிய திருக்கரத்தோடு, ’அஞ்சேல்’ எனக் கூறும் அபய கரம் உடையவர்.

துவிஜ கணபதி:

நான்கு திருக்கரங்களில் புஸ்தகம், அட்சமாலை, தண்டம், கமண்டலம் தாங்கி இருப்பவர். நான்கு யானை முகங்களுடன் சந்திரன் போன்ற வெண்மையானவர்.

சித்தி கணபதி :

மாம்பழம், பூங்கொத்து, கரும்புத் துண்டு, எள் உருண்டை, பரசு இவற்றை கைகளில் வைத்திருப்பவர். பொன் கலந்த பசுமை நிறமுடையவர்.

உச்சிஷ்ட கணபதி :

நீலோற்பலம், மாதுளம் பழம், வீணை, நெற்கதிர், அட்சமாலையுடன் காட்சி தருபவர். நீல நிறத்திருமேனி கொண்ட நிலை.

விக்ன கணபதி:

சங்கு, கரும்பு, வில், புஷ்ப பாணம், கோடரி, பாசம், சக்கரம், கொம்பு, மாலை, பூங்கொத்து பாணத்தைக் கைகளில் கொண்டவர். ஆபரணங்களை நிரம்பத் தரித்தவர். பொன்னிற மேனியர்.

க்ஷிப்ர கணபதி :

தந்தம், கற்பகக்கொடி பாகம், ரத்ன கும்பம், அங்குசம் ஆகியன தாங்கியவர். செந்நிறமானவர்.

ஏரம்ப கணபதி :

அபய வரதக் கரங்கள், பாசம், தந்தம், அட்சமாலை, பரசு, சம்மட்டி, மோதகம், பழம் இவற்றைத் தாங்கியவர். சிங்க வாகனம், யானை முகம் ஐந்து கொண்டவர். பசுமை கலந்த கருமை நிற மேனியாளர்.

மஹா கணபதி :

மாதுளம் பழம், கதை, கரும்பு வில், சக்கரம், தாமரை, பாசம், நீலோத்பலம், நெற்கதிர், தந்தம், ரத்னக் கலசம் போன்றவை திருக்கரங்களில் அமைந்திருக்கும். செங்கதிர் போன்ற நிறம், முக்கண் முகத்தவர். பிறையை முடியில் சூடியவர். மடி மீது எழுந்தருளி இருக்கும் தாமரை ஏந்திய தேவியால் தழுவப் பெற்றவர்.

விஜய கணபதி :

அங்குசம், பாசம், தந்தம், மாம்பழத்தை கைகளில் ஏந்தியவர். பெருச்சாளி வாகனத்தில் ஏறியிருப்பவர். செந்நிறத்தவர்.

நிருத்த கணபதி :

கூத்தாடும் நிலையில் இருப்பவர் மோதிரங்கள் அணிந்த விரல்கள் கொண்டவர். கைகளில் பாசம், அங்குசம், கோடரி, தந்தம் ஏந்தியவர். பொன்னிறத்தவர். கற்பக மரத்தடியில் இருப்பவர்.

ஊர்த்துவ கணபதி :

நீல மலர், நெற்கதிர், தாமரை, கரும்பு வில், பாணம், தந்தம் கொண்டு காட்சி தருபவர். பச்சை நிற மேனி கொண்ட தேவியைத் தழுவியர்.

ஏகாட்சர கணபதி :

செம்பட்டாடையும் செம்மலர் மாலையும் பிறை முடியணிந்தும் முக்கண்ணுடன் காட்சி தருபவர். குறுகிய கைகள், மாதுளம் பழம், பாசம், அங்குசம், வரதம் இவற்றைத் தாங்கிய கைகளை உடையவர். யானை முகத்தவர், பத்மாசனத்தில் பெருச்சாளி வாகனமும் கொண்டவர்.

வர கணபதி :

யானை முகம், முக்கண், செவ்வண்ண மேனி, பாசம், அங்குசம் தரித்தவர். தேன் நிறைந்த மண்டையை உடையவர். பிறைமுடி தரித்தவர்.

திரயாக்ஷர கணபதி :

அசைகின்ற செவிகளில் தாமரையணிந்தவர். நாற்கரங்கள் கொண்டவர். பாசம், அங்குசம், தந்தம், மாம்பழத்தைக் கரங்களில் ஏந்தி, துதிக்கை நுனியில் மோதகம் வைத்திருப்பவர். பொன்னிற மேனியர்.

க்ஷிப்ரப்பிரசாதர் :

பாசம், அங்குசம், கற்பகக்கொடி, மாதுளம் பழம், தாமரை, தருப்பை, விஷீட்ரம் இவற்றைத் தரித்தவர். ஆபரணங்கள் அணிந்தவர். பேழை வயிறுடையவர்.

ஹரித்ரா கணபதி :

மஞ்சள் நிறமுடையவர். நான்கு கரத்தவர். அவற்றில் பாசம், அங்குசம், தந்தம், மோதகம் வைத்திருப்பவர்.

ஏக தந்தர் :

பேழை வயிற்றோடு, நீலமேனியாளர். கோடரி, அட்ச மாலை, லட்டு, தந்தம் இவற்றை வைத்திருப்பவர்.

சிருஷ்டி கணபதி :

சிவந்த மேனியர். பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் கரங்களில் விளங்க, இழுக்க பெருச்சாளி வாகனம் கொண்டவர்.

உத்தண்ட கணபதி :

பத்து திருக்கரங்கள் கொண்டவர். அவற்றில் நீலம், தாமரை, மாதுளம் பழம், கதை, தந்தம், கரும்பு வில், ரத்னக் கலசம், பாசம், நெற்கதிர், மாலை ஏந்தியவர் அழகிய தாமரை மலரை ஏந்திய பச்சை நிற தேவியால் தழுவப்பட்டவர்.

ருணமோசனர் :

வெண்பளிங்கு போன்ற மேனியர். சென்னிறப் பட்டாடை உடுத்தியவர். பாசம், அங்குசம், தந்தம், நாவற்பழத்தை கைகளில் கொண்டவர்.

துண்டி விநாயகர்:

அட்சமாலை, கோடரி, ரத்னக் கலசம், தந்தம் இவற்றைக் கரங்களில் ஏந்தியவர்.

துவிமுக கணபதி :

இரு முகத்தவர். தந்தம், பாசம், அங்குசம், ரத்னப் பாத்திரம் இவற்றைக் கையில் ஏந்தியவர். பசுமை கலந்த நீல மேனியர். செம்பட்டாடையும் ரத்ன கிரீடமும் அணிந்தவர்.

மும்முகப் பிள்ளையார் :

பொற்றாமரை ஆசனத்தில் நடுப் பொகுட்டில் மூன்று முகங்களோடு காட்சி தருபவர். சிவந்த நிறத்தவர். வலது கரத்தில் கூரிய அங்குசம், அட்சமாலை, வரதம் உடையவர். இடது கையில் பாசம் அமுத கலசம், அபயம் இவற்றை உடையவர்.

சிங்க கணபதி :

வெண்ணிற மேனியர். சிங்க வாகனர். வீணை, கற்பகக் கொடி, சிங்கம், வரதம் இவற்றை வலது கரங்களிலும், தாமரை, ரத்னக் கலசம், பூங்கொத்து, அபயம் இவற்றை இடது கரங்களிலும் கொண்டவர்.

யோக கணபதி :

யோக நிலையில் இளஞ்சூரிய நிறத்தில் இந்திர நீலம் போன்ற ஆடையுடுத்தி, பாசம், அட்சமாலை, யோக தண்டம், கரும்பு இவற்றை ஏந்தி இருப்பவர்.

துர்கா கணபதி :

சுட்ட பசும் பொன்னிறத்தவர். எட்டுக் கைகள், பெரிய மேனி, அங்குசம், பாணம், அட்சமாலை, தந்தம் இவற்றை வலது கரத்திலும், பாசம், வில், கொடி, நாவற்பழம் ஆகியவற்றை இடது கரத்திலும் ஏந்தியவர். செந்நிற ஆடை அணிந்தவர்.

சங்கடஹரர் :

இளஞ்சூரியர் போன்ற நிறத்தோடு இடப்பாகத் தொடை யில் அம்மையை உடையவர். அம்மை பசும் மேனியளாக நீல மலரை ஏந்தியிருப்பாள். வலது கரத்தில் அங்குசம். வரதம் உடையவர். இடது கரத்தில் பாசம், பாயசப் பாத்திரம் ஏந்தியவர். செந்தாமரைப் பட்டத்தில் இருப்பவர். நீல நிற ஆடை அணிந்திருப்பவர்.

Comments

RVRamanujam says :

நல்ல விவரங்கள் நிறைந்த பதிவு விநாயக சதுர்த்தி காலத்தில் விநாயகர் பற்றிய தகவல் பாராட்டுகள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :