• JUST IN | சுட சுட

ஹிட்லரின் நாஜி சின்னத்துக்கு ஆஸ்திரேலியாவில் தடை!





ஜெர்மனியில் சர்வாதிகாரி ஹிட்லர் பயன்படுத்திய ஸ்வஸ்திகா சின்னத்துக்கு ஆஸ்திரேலியாவில் தடை விதிக்கும் மசோதா அந்நாட்டு நாடாளுமனறத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

2-ம் உலகப் போர் சமயத்தில் ஜெர்மனியில் பல லட்சம் யூதர்களை கொன்று குவித்த சர்வாதிகாரி ஹிட்லர் தன் கட்சி சின்னமாக ஸ்வஸ்திகாவைத் தேர்ந்தெடுத்தார். இப்போது ஆஸ்திரேலியாவில் இந்த சின்னத்தையும் ஹிட்லரின் கொள்கைகளையும் பின்பற்றும் நவ நாஜிக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கருதப்படுகிறது. அங்கு இனவெறித் தாக்குதல்கள் அதிகரித்து வருவதற்கும் இதுவே காரணம் என ஆஸ்திரேலிய புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. அங்குள்ள 16 வயதுக்கும் குறைவான சிறுவர்களுக்கு நவ நாஜி கொள்கைகள் போதிக்கப்படுவதாக அந்நாட்டின் தீவிரவாத தடுப்பு புலனாய்வுப் பிரிவு தலைவர் மைக் பர்கஸ் தெரிவித்து உள்ளார்.

குறிப்பாக ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட 2-வது பெரிய மாகாணமான விக்டோரியாவில், நவ நாஜிக்களின் நிறவெறித் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நாஜிக்களின் சின்னங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்ற விசாரணைக்குழு பரிந்துரைத்துள்ளது. இதையடுத்து விக்டோரியா மாகாணத்தில் நாஜிகளின் ஸ்வஸ்திகா போன்ற சின்னங்களை பொதுவெளியில் பயன்படுத்த தடை விதிக்கும் சட்ட மசோதா தயாரிக்கப்பட்டு வருகிறது. கல்வி மற்றும் வரலாறு சார்ந்த பணிகளை தவிர வேறெந்த வகையிலும் இச்சின்னத்தை பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்பதற்கான சட்ட மசோதா அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. எதிர்க்கட்சிகளின் ஆதரவும் இருப்பதால் இந்த மசோதா நிச்சயம் சட்டமாக்கப்படும் என நம்பப்படுகிறது. இது நிறைவேற்றப்பட்டால். உலகிலேயே நாஜிக்களின் சின்னத்துக்கு தடை விதிக்கும் முதல் நாடாக ஆஸ்திரேலியா மாறும் எனத் தெரிகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :