• JUST IN | சுட சுட

ரூ.5 லட்சம் பரிசுடன் கப்பலோட்டிய தமிழன் விருது: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!





தமிழகத்தில் ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசுடன் கப்பலோட்டிய தமிழன் விருது வழங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இதுகுறித்து முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்ததாவது:

தமிழகத்தில் ஆண்டுதோறும் வ.உ.சிதம்பரனார் பெயரில் ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசுடன் கப்பலோட்டிய தமிழன் விருது வழங்கப்படும். கப்பல் தொடர்பான துறைகளில் ஈடுபட்டு சிறந்த பங்காற்றி வரும் தமிழர் ஒருவருக்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி விருது ஆண்டுதோறும் வழங்கப்படும். அதேபோல் வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் திரைப்படம் நவீன டிஜிட்டல் முறையில் வெளியிடப்படும். வ. உ. சிதம்பரனார் எழுதிய அனைத்து புத்தகங்களும் புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் குறைந்த விலையில், மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

மேலும் வ.உ.சி பற்றி மாணவர்கள் விரிவாக அறிந்துக்கொள்ளும் வகையில் போக்குவரத்து துறையின் சார்பில் பேருந்து ஒன்றில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் அனுப்பப்படும். மேலும், தூத்துக்குடியில் உள்ள பெரிய காட்டன் சாலை என்பது வ.உ.சி சாலை என பெயர் மாற்றம் செய்யப்படும். நெல்லையில் ம.சு.பல்கலைக்கழகத்தில் வ.உ.சிதம்பரனார் பெயரில் ஆய்வறிக்கை வெளியிடப்படும்.

-இவ்வாறு முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் கோவை வ.உ.சி பூங்காவில் வ.உ.சிதம்பரனாரின் முழு உருவ சிலை அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :