• SPARKLES | மினுமினு

இட்லி மாவு ஜிலேபி!


சாந்தி கார்த்திகேயன்





வீட்டில் என் குழந்தைகள் ‘’இப்பவே ஸ்வீட் எதாவது பண்ணிக் கொடுங்க’’ என்று ஒரே நச்சரிப்பு! பள்ளி வகுப்புகள் ஆன்லைனில் நடப்பதால், அவர்களூக்கும் படிப்புக்கு நேரம் சரியாக இருக்கிறது. அதனால் பசங்களைப் பார்த்தால் பாவமாக இருந்தது. சட்டென்று என்ன செய்யலாம் என்று ஃபிரிட்ஜைக் குடைந்தபோது, கொஞ்சம் இட்லி மாவு மட்டும் மிச்சமிருந்தது.

ஐடியா… ஜிலேபி பண்ணினால் என்ன?! உடனே களத்தில் இறங்கி விட்டேன். அடுத்த அரைமணியில் சுடச்சுட ஜிலேபி சாப்பிட்ட கையோடு மகனும் மகளும் சுடச்சுட ஸ்வீட் முத்தம் கொடுத்தார்கள்.

இதோ செய்முறை:

தேவையான பொருட்கள்:

இட்லி மாவு – 1 கப்

மைதா மாவு- 1 தேக்கரண்டி.

ஆரஞ்சு ஃபுட் கலர் - ½ டீஸ்பூன்

உப்பு – 2 சிட்டிகை.

பாகு வைக்க:

சர்க்கரை – ½ அரை கப்.

வாணலியில் சர்க்கரை சேர்த்து அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். அத்துடன் ஆரஞ்சு ஃபுட் கலர் சேர்த்து கலக்கவும். வாசனைக்கு வனிலா எசன்ஸ் அல்லது ரோஸ் எசன்ஸ் ஆகியவற்றை அவரவர் விருப்பத்துக்கேற்ப சேர்க்கலாம். ஏலக்காய் தூளும் சேர்த்து இறக்கி ஆற விடவும்.

இப்போது மற்றொரு வாணலியில் எண்ணை வைத்து ஜிலேபிகளைப் பொரிக்க வேண்டும். அதற்கு இட்லி மாவில் மைதா மாவு, ஒரு சிட்டிகை சமையல் சோடா மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து ஒரு பிளாஸ்டிக் பால் கவரில் நிரப்பி இறுகக் கட்டவும். கவரின் ஒரு நுனியில் சிறியதாக கட் பண்ணவும். அதாவது மருதாணி கோன் வடிவிலான பால் கவரினுள் இட்லி மாவை நிரப்பிக் கொள்ளுங்கள்.

வாணலியில் எண்ணெய் சூடேறியதும் ஜிலேபி வடிவில் இட்லி மாவை எண்ணெயில் ஊற்றவும். பொன்னிறத்தில் பொரிந்து வந்ததும் எடுத்து சர்க்கரைப் பாகில் போடவும். 5 நிமிடம் பாகில் ஊறியபின் ஜிலேபிகளை எடுத்து தட்டில் வைத்து பரிமாறுங்கள். சூப்பர் சுவையில் ஜிலேபிகள் ருசிக்கும்.

Comments

SRIVIDHYA V says :

புதிய உத்தி, பாராட்டுக்கள், வட மாநில இனிப்பு பலகாரம், அதிரடியாக செய்ய முடியும் என இனிமேல் சவால் விட்டுச் சொல்லலாம்

ஆா்.நாகராஜன் says :

பாா்க்கும்போதே படிக்கும்போதே சாப்பிடவேண்டும் என ஆசையாய் இருக்கு நன்றி

மகாலட்சுமி சிவக்குமார் says :

இட்லி மாவில் ஜிலேபியா? என்ற ஆச்சரியம், மிக எளிமையான செயல்முறை, உடனடியாக தயாரித்து குடும்பத்தாரோடு சுவைக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது. நன்றி

Shenbakam pandian says :

அருமையாகவும் எளிதாகவும் இருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :