• GLITTERS | பளபள

தீர்மானங்கள் போடுவதே தீர்வாகாது!


ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்).

தமிழக சட்டசபையில் இப்போதைய கூட்டத் தொடரில் முதல்வர் மு க ஸ்டாலின் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் தீர்மானத்தை கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றினார். இதைக் கண்டித்து அதிமுக-வும் அதன் கூட்டணிக் கட்சியான பாஜக-வும் வெளிநடப்பு செய்தது.

மத்திய அரசின் புதிய 3 வேளாண் சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேறி அந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தந்து அந்த சட்டம் அமலுக்கு வந்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிவிட்டது. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்ட ஒரு சட்டத்தை ரத்து செய்ய பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து பெரும்பான்மை ஆதரவுடன் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால்தான் அந்த சட்டம் ரத்து செய்வது அல்லது திரும்பப் பெறுவது என்பது சாத்தியமாகும் இப்போதைக்கு மிகப்பெரிய பெரும்பான்மை பலத்துடன் பாரதிய ஜனதா இருப்பதால் அந்த சட்டம் ரத்து செய்ய வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை நிலவரம்!

தமிழக சட்டசபையில் வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றப் பட்டபோது, ‘’தேர்தல் அறிக்கையில் நாங்கள் சொன்னதைத்தான் செய்கிறோம்’’ என்று குறிப்பிட்டார் முதல்வர் ஸ்டாலின். ஆனால் தேர்தல் அறிக்கையில் வேறு பல வாக்குறுதிகளும்கூடத்தான் திமுக குறிப்பிட்டிருந்தது. ஆனால் அவற்றுக்கு சரியான பதில் சொல்லாமல் அதை திசைதிருப்ப ’’பணம் இல்லை.. கடன்.. வெள்ளை அறிக்கை’’ என்று பிரச்சினையை திசை திருப்புகிறார்கள் எதிர்க்கட்சிகள் கேட்டதற்கு சரியான விளக்கத்தை ஆளும் தரப்பு சொல்லமுடியவில்லை.

இதேபோல் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வு ரத்துபற்றி கேள்வி எழுப்பியபோது, ’’நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதா இந்த கூட்டத்தொடரிலேயே கொண்டு வருவோம்’’ என்று முதல்வர் பதிலளித்தார்.

நீட் தேர்வு ரத்து என்பது சாத்தியமில்லாத ஒன்று என்பதும் ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க வாய்ப்பில்லை என்பதும் எல்லோருக்கும் தெரியும் இது தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் கண்டிப்பாக தெரியும். அதனால்தான் தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். நீட் தேர்வு ரத்து செய்ய வாய்ப்பில்லை என்ற உண்மை நிலை தெரிந்ததால்தான், சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான தமிழக மாணவர்கள் அத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். அப்படியிருக்கையில் பின் எதற்காக இந்த கண்துடைப்புத் தீர்மானம்?!

சட்டசபையில் போடப்படும் இதுபோன்ற தீர்மனங்கள் வெறும் அரசியல் காரணங்களுக்கான திசைதிருப்பல்தானே தவிர உண்மையில் இதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்பதுதான் எதார்த்த நிலை! அதிமுக அரசு கூட நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது. ஆனால் அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படவில்லை சட்டம் இயற்றியதோடு தன் வேலை முடிந்துவிட்டது என்று அன்றைய அதிமுக அரசும் சும்மாதான் இருந்தது இத்தனைக்கும் பாரதிய ஜனதா அவர்கள் தோழமைக் கட்சி! அதற்கே இதுதான் நிலைமை!.

கல்வி விவகாரம் என்பது முதலில் மாநிலப் பட்டியலில்தான் இருந்தது அதை மத்திய பட்டியலுக்கு மாற்றியவர் இந்திராகாந்தி! இப்போதும் மாநிலக் கட்சிகள் நினைத்தால் இந்த பிரச்சினைக்கு எளிதில் தீர்வு காணலாம் தற்போதைய தேசிய கட்சிகள் எதுவுமே மாநில கட்சிகளின் தயவின்றி எந்த மாநிலத்திலும் வெற்றி பெற முடியாது என்பதுதான் உண்மை! எல்லா மாநிலங்களிலும் மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம் ஓங்கி வருகிறது எனவே தேர்தல் நேரத்தில் தங்களுக்கு தேவையான வளமான இலக்காக்களுக்கு மாநிலக் கட்சிகள் பேரம் பேசுவதை விட்டு விட்டு மாநிலங்களின் நலனில் அக்கறை காட்டினால் இந்தப் பிரச்சினைகளெல்லாம் தீர்வு கிடைக்கும்!

குறிப்பாக திமுகவுக்கு இதற்கான வாய்ப்பு நன்றாகவே கிடைத்தது மத்தியில் வாஜ்பாய் ஆட்சியிலும் மன்மோகன் சிங், தேவகவுடா, குஜரால் ஆட்சிகளின்போது திமுக மத்தியில் முக்கிய பங்கு வகித்தது அப்போதெல்லாம் அக்கட்சி மாநில நலன் பற்றி யோசிக்காமல் தங்களுக்கான வளமான இலாகா பற்றி மட்டும் அக்கறை காட்டினார்கள்! அப்போது திமுக நினைத்திருந்தால் மீண்டும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வந்திருக்க முடியும் ஆனால் அதற்கான முயற்சி எதையும் திமுக செய்யவில்லை. தும்பை விட்டு விட்டு வாலை பிடித்த கதையாக, இப்போது தீர்மானம் போட்டு என்ன பலன்? இவை எல்லாம் வெறும் தீர்மானங்கள்! அவ்வளவே அது தீர்வாகாது!

பாராளுமன்ற தேர்தலின்போது தேசிய கட்சியுடன் கூட்டணி பேரம் பேசும்போது தேசிய கட்சிகளிடம் ஸ்டாலின் வேளாண் சட்டம் ரத்து, மற்றும் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர செய்வது போன்ற பயனுள்ள உத்தரவாதங்களை உறுதிமொழியாக கேட்டுப் பெற வேண்டும் அதுதான் இவற்றுக்கு நிரந்தர தீர்வு தீர்மானங்களோ சட்ட முன்வடிவுகளோ அல்ல!

ஏற்கனவே 7 பேர் விடுதலை, இலங்கை பிரச்சனை என்று பலமுறை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு கண்டும் காணாமல்தான் இருக்கிறது. இதை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு ஏற்பட்ட ஒரு அவமானமாக கருதி, பாராளுமன்ற தேர்தலில் திமுக உறுதியாக தேசிய கட்சியுடன் மாநில அக்கறையுடன் பேசினால் பிரச்சனை தீரும். இது திமுக தலைவர் ஸ்டாலின் நினைத்தால் முடியும். மற்றபடி சட்டசபையில் தீர்மானங்கள் போடுவது மட்டுமே தீர்வாகாது!

Comments

Krishnamurthi Balasubramaniam says :

நிதர்சனத்தை பிட்டு வைத்திட்டார் கட்டுரையாளர்.... நடக்கும் மாநில அரசு முடியாத விஷயங்களுக்கு தீர்மானம் நிறைவேற்றி மக்களின் பணம் வீணாக்காது இருப்பின் நலமே. வீணாய் மக்களை திசை திருப்பாமலிருக்கலாம்

ச பாலசுப்ரமணியன் says :

வெறும் கண்துடைப்பு நாடகங்கள். தங்களையே ஏமாற்றிக் கொள்வதை இவர்கள் கை விட்டு, நலம் பயக்கும் உருப்படியான செயல்களில் ஈடுபட்டால் தமிழகம் முன்னேற்றம் பெறும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :