• தீபம் - ஆன்மீகம்

ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி (30.8.2021)

கண்ணன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்!


- ஆர்.ஜெயலெட்சுமி

கண்ணன் அப்படியொரு அழகாம். கருநீல வண்ண மேனியோடு, சுருண்ட தலைமுடி! தலையில் மயில் தோகைகளால் அழகு கூடி, நெஞ்சை இழுக்குமாம். உதடுகள் அவ்வளவு சிவப்பாம். கண்ணனிடம் நம் கவலைகளைச் சொல்லக்கூட வேண்டாம். அவனது புல்லாங்குழலிடம் சொன்னாலே போதும். குறைகள் எல்லாம் நீங்கிவிடுமாம். அதோ முகத்தில் வெண்ணெயின் வாசனையும் பேச்சில் குறும்பும், கண்களில் பொய்க் கண்ணீரும், பாதம் தூக்கி ஆடும் அழகிய, ‘தத்தை’ நடனமுமாக பளிங்குத் தரையில் விளையாடும் கண்ணனைக் காணுங்களேன். என்ன செய்கிறான். பொய்க்கோபம் கொண்டு செவிலித் தாயோடு சண்டையிடு கிறான். எதற்காகத் தெரியுமா? பளிங்குத் தரையில் இன்னும் அழகாகப் பிரதிபலிக்கும் அவனது உருவத்தைப் பார்த்து அந்தப் பொய் குழந்தையை அவன் வாரியெடுக்க முயற்சி செய்து, தோற்று செவிலித் தாயிடம் அழுகிறான். கண்ணன் அழுகையால் அவனுக்குப் பசி வயிற்றைக் கிள்ளுகிறது. குழந்தை கண்ணன் அன்னை யசோதாவிடம் ஓடுவதைப் பாருங்கள். மழழை மொழியில் அம்மாவிடம் என்ன கேட்கிறான்?

’’ம்மா... பால் வேணும்!"

’’கண்டிப்பாகத் தருகிறேன் கண்ணா... முதலில் சாப்பாடு. ஏனென்றால், இது பகல் பொழுது, இரவு வந்ததும் பால் தருகிறேன். சரியா..."

கண்ணனுக்கு சாப்பாடு வேண்டாம், பால் குடிக்கத்தான் விருப்பம். விருப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டுமே... என்ன செய்வது?

அம்மாவிடம் கேட்டான்.

’’இரவு என்றால்..."

’’இரவு என்றால் பொழுது இருட்டத் துவங்கும். அதுதான் இரவு" பதில் சொல்கிறாள் யசோதா.

கண்ணன் தன் கண்களை இறுக்கமாக மூடுகிறான்.

’’அம்மா, இதோ எல்லாம் இருட்டிவிட்டது. இரவு வந்து விட்டது. உடனே எனக்குப் பால் வேண்டும்."

குறும்போடு கண்ணன் சொல்ல, தன்னையும் மறந்து சிரிக்கிறாள் யசோதா. அவள் மட்டுமா, அவன் குறும்புகளால் கோகுலமேயல்லவா மகிழந்தது. குறும்புக்கு மட்டுமல்ல, திருட்டுக்கும் பெயர்போனவன் கண்ணனாயிற்றே!

கண்ணன் திருடனா? ஆம். அவன் வெண்ணெய்த் திருடன் வெண்ணெ யோடு பக்தர்களின் உள்ளத்தையும் திருடிக்கொள்வான். அங்கே பாருங்கள் ஒரு கோபிகை படும் பாட்டை!

மெல்ல நடந்து, தயிர் உறியைப் பற்றி மேலே எம்பி வெண்ணெய் பானைக்குள் கையை விட்டு எடுப்பதற்கள், வந்துவிட்டாள் அந்த கோபிகை. வசமாய் மாட்டிக் கொண்டான் சின்னக் கண்ணன்.

’’கண்ணா... எங்கே வந்தாய்?"

’’வீடு மாறி வந்து விட்டேன் கோசிதா..."

’என்ன கோசிதாவா...? பெயரைச் சொல்லி அழைக்கிறாயா? உன் வயதென்ன, என் வயதென்ன? சரி போகட்டும். ஏன்டா பானைக்குள் கையை விட்டாய்?"

’’ம், எங்கள் வீட்டு கன்றுக்குட்டியைத் தேடுகிறேன்."

’’பானைக்குள் ஏதுடா கன்றுக்குட்டி?"

’’அதனால்தான் திருப்பிச் செல்கிறேன்."

ஓட்டமெடுக்கும் கண்ணனைப் பிடிக்க முடியாமல் தவிக்கும் கோபிகையைப் பார்த்து, உங்களுக்கும் சிரிப்பு வருகிறதல்லவா? அதுதான் கண்ணன்.

- இப்படியெல்லாம். ’லீலாசகர்’ என்னும் வில்வமங்களர் கண்ணனை ரசித்துப் போற்றுகிறார்.

சின்னச் சின்னப் பதம் வைத்து...

- ரேவதி பாலு

வீட்டு வாசலில் பெரிதாகப் போடப்பட்டிருந்த கோலத்திலிருந்து ஆரம்பித்தது, ஒரு வயதுக் குழந்தை தத்தித் தத்தி நடந்ததுபோல, வரிசையாக வலது பாதமும் இடது பாதமுமாக, பாதச் சுவடுகள். உள்ளேயும், தொடர்ந்த அந்தப் பாதச் சுவடுகள், சுவாமி அறையில் பெரியதாகப் போடப்பட்டிருந்த படிக்கோலத்தில் முடிவடைந்திருந்தன. குட்டி கிருஷ்ணன் வாசல் வழியாக வீட்டுக்குள் நுழைந்து நேரே பூஜை அறையில் வந்து அமர்ந்து விட்டான். எல்லோரும் எட்டு மாதிரி போட்டு அதில் மேற்பக்கத்தில் ஐந்து விரல்களுக்காக புள்ளிகள் வைத்து கிருஷ்ணர் பாதம் போடுவார்கள்.

மாலதியின் அம்மா ஒரு தட்டில் கோலமாவை சற்றே நீர்க்கக் கரைத்து, கீழே வைத்துக்கொண்டு இரண்டு கைகளையும் முஷ்டி பாவத்தில் வைத்துக் கொண்டு, சுண்டு விரலிலிருந்து உள்ளங்கை முடியும் வரை உள்ள வளைவான பாகத்தை மாவில் தோய்த்து இரண்டு கைகளாலும் வலது, இடது என்று மாற்றி மாற்றி கிருஷ்ணர் பாதம் போடுவாள். அதன் மேற்புறத்தில் குட்டிக் குட்டியாக விரல்களுக்காகப் புள்ளிகள். அச்சு அசலாக ஒரு குழந்தை தத்தித் தத்தி நடந்து வந்தது போலவே கொள்ளை அழகாகத் தோற்றமளிக்கும். மாலதியும் அப்படியேதான் போடுவாள்.

கோலத்திற்கு நேரே ஒரு பெரிய தவழும் கிருஷ்ணன் பொம்மை, நீல நிற வஸ்திரம் உடுத்தி, கழுத்தில் மாலையுடன் அழகான அலங்காரத் துடன் காட்சியளித்தது. விட்டலாபுரம் கிருஷ்ணன் கோயில் வாசலில் வாங்கியது. திருமணமாகி நாலு வருடங்கள் மாலதிக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. கிட்டத்தட்ட அறுநூறு ஆண்டுகள் பழைமையான அந்தக் கோயிலுக்கு அவள் அலுவலகத் தோழிதான் அவளை அழைத்துப் போனாள். விட்டலனுக்கு ஒருபுறம் ருக்மாயியும் மறுபுறம் சத்யபாமாவும் சன்னிதியில் அருள்பாலித்துக் கொண்டிருக்க, அங்கே இருக்கும் தவழும் கிருஷ்ணர் உத்ஸவர் விக்ரஹத்தை குழந்தை பாக்கியம் வேண்டி வரும் பெண்களின் மடியில் வைத்துப் பிரார்த்தனை செய்துகொள்ளச் செய்வார்கள். கோயிலுக்குப் போய் வந்த ஒரு வருடத்தில் கண்ணன் பிறந்தான்.

குனிந்து குனிந்து கோலம் முழுவதும் போட்டுவிட்டு நிமிர்ந்தபோது மாலதிக்கு முதுகில் சுளீரென்று வலி. நேற்று அலுவலகத்தில் வேலை அதிகம். அத்துடன், மாலையில் வீட்டுக்குத் திரும்பும்போது பஸ்ஸில் உட்கார இடம் கிடைக்காமல், நின்றுகொண்டே முக்கால் மணி நேரம் பயணித்தது எல்லாம் சேர்ந்து, இன்று காலையில் எழுந்திருக்கவே முடியவில்லை. கோகுலாஷ்டமியாச்சே, எவ்வளவு காரியங்கள் இருக்கின்றன என்று பதறிக்கொண்டு எழுந்த நொடி முதல், வரிசையாக வேலைகள். காலை சமையலை முடித்து விட்டு, மாவு மிஷினுக்குச் சென்று மாவு அரைத்துக் கொண்டு வந்து பட்சணங்கள் செய்ய ஆரம்பித்தவள், அதை ஒரு ஸ்டேஜில் நிறுத்திவிட்டு கோலம் போட வந்தாள்.

ஹாலில் டி.வி எதிரே அமர்ந்து கணவன் ஸ்ரீராமும், எட்டு வயது மகன் கண்ணனும் கிரிக்கெட் மாட்ச்சில் ஆழ்ந்திருந்தனர். என்றோ, எங்கேயோ நடந்த மேட்ச். இப்போ திரும்ப வைக்கும்போதும் சுவாரசியம் குறையா மல் பார்த்துக்கொண்டிருந்தனர். ஸ்ரீராமிடம் ஏதாவது வேலையில் உதவி கேட்டால், ‘உன்னை யாரு இவ்வளவு வேலைகளை இழுத்து விட்டுக் கொண்டு செய்யச் சொல்கிறார்கள்?’ என்பான். வேர்த்து விறுவிறுத்து பட்சணங்கள் செய்வதைப் பார்த்துவிட்டு, ‘கிருஷ்ணா ஸ்வீட்ஸில்தான் எல்லா பட்சணங்களும் கிடைக்கிறதே!’ என்பான். ‘பூஜை அறை எதிரே மட்டும் கோலம் போட்டால் போதாதா? வாசலிலிருந்து போட வேண்டுமா?’ என்பான்.

அவன் சொல்வது ரொம்ப வாஸ்தவமான வார்த்தை என்பது அவளுக்கும் தெரிந்துதான் இருந்தது. அவள் ஒன்றுமே செய்யாமல் இருந்தாலும், பெரியவர்கள் இல்லாத அந்த வீட்டில் யாரும் எதுவும் கேட்கப் போவதில்லை. இருந்தாலும் வழிவழியாக, தலைமுறை தலைமுறை யாகச் செய்யும் பண்டிகை காரியங்களை விட மனமில்லை. வருஷத் துக்கு ஒரு நாள்தானே குட்டி கிருஷ்ணனைக் கொண்டாடும் பண்டிகை என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள்.

திரும்பப்போய், அடுப்பருகே நின்று வெல்லச் சீடைக்கு மாவு உருட்ட ஆரம்பித்தாள். தன் அம்மா செய்வதுபோல, சீடை மாவை தடியாக நீளமாக உருட்டி நாலைந்தை, ‘ஹி’ வடிவத்தில் செய்து வைத்தாள். அதை அம்மா, ‘சீப்பி’ என்று சொல்வாள். குட்டி கிருஷ்ணனால் எப்படி உருண்டையான வெல்லச் சீடையைக் கடித்துச் சாப்பிட முடியும்? அதை முதலில் எண்ணெயில் போட்டு எடுத்து கிருஷ்ணனுக்கெதிரே ஒரு தட்டை வைத்து அதில் வைத்தாள். வீட்டில் பல் முளைக்காத சின்னக் குழந்தை இருந்தால் அதுக்கும், ‘சீப்பி’தான் சப்பிச் சாப்பிடக் கொடுப் பார்கள்.

மாலை மயங்க ஆரம்பித்து விட்டது. பூஜைக்கு எல்லாவற்றையும் வரிசையாக எடுத்து வைக்க குனிந்தபோது, திரும்ப முதுகில் ‘சுளீர்’ வலி. ‘ஆச்சு! ஆச்சு! இதோ குளித்து விட்டு வந்து பூஜை செய்தால் முடிந்தது. கொஞ்சம் பொறுத்துக்கோ மாலதி!’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். சூடாக ஒரு காப்பி குடித்தால் சுறுசுறுப்பாக இருக்கும் என்று பாலை காய்ச்ச எடுத்தபோது, வாசலில் அழைப்பு மணி ஒலித்தது.

கொஞ்சமாகக் கதவைத் திறந்து பார்த்த மாலதி, முன் பின் தெரியாத மனிதரை சந்தேகமாகப் பார்த்தபடி, “உங்களுக்கு யார் வேணும்?” என்றாள். அவர் புன்னகை பூத்தவாறே, “நான் மாடியில் என் நண்பரைப் பார்க்க வந்தேன். வாசல்ல இந்த அசத்தலான கோலத்தையும் சின்னச் சின்னப் பாதங்களையும் பார்த்ததும் ஒரு நிமிடம் அப்படியே நின்று விட்டேன். இந்தக் கோலம் யார் போட்டது?” என்றார்.

“ஏன்? நான்தான்!” என்றாள் மாலதி.

“பிடியுங்கள் என் பாராட்டுகளை! அற்புதமாகப் போட்டிருக்கிறீர்கள்! தேர்ந்த ரசனைமிக்க ஒருவரால்தான் இப்படி நேர்த்தியாகப் போட முடியும்!” அவர் புன்சிரிப்போடு சொல்லிக்கொண்டே படியேற, ஆரம் பித்து விட்டார். முன் பின் தெரியாத ஒரு அன்னிய மனிதரின் பாராட்டு வார்த்தைகளுக்குத்தான் எவ்வளவு சக்தி? உச்சந்தலை முதல் உள்ளங் கால் வரை ஒரு சந்தோஷ மின்னல் சிலிர்ப்பாக ஓடியது மாலதிக்குள். ‘சின்னச் சின்னப் பதம் வைத்து கண்ணா நீ வா! வா! வா!’ என்று மென்குரலில் பாடியபடியே குனிந்து நிமிர்ந்து பூஜை காரியங்களை கவனித்தபோது, முதுகில் வலி இருந்த சுவடே தெரியவில்லை.

கண்ணனைப் பணி மனமே!

- மாலதி சந்திரசேகரன்

ஸ்ரீ சூரியநாராயணரின் மார்புப் பகுதியிலிருந்து தோன்றியவளும், சூரிய புத்திரியுமான யமுனைக்கு, கலிந்தி மலைப் பரப்பினில் இருந்து ஓட்டப் பிரவாகம் தோன்றியதாலும், கருமை நிறம் கொண்டதாலும் `காலிந்தி` என்கிற பெயர் உண்டாயிற்று. யமுனை ஏன் கருமை நிறத்தினைக் கொண்டாள்?

நாகர்களின் இருப்பிடமான, `ரமணத் தீவு` என்னும் இடத்தில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. இந்த ஆலமரத்தின் கீழே ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கருடனுக்கு ஒரு பலி சமர்ப்பிக்கப்படும். அத்துடன் கருடனின் உணவிற்காக ஒரு நாகமும் சமர்ப்பிக்கும் வழக்கம் இருந்து வந்தது. கருடன் அந்த பலியையும், நாகத்தையும் தவிர வேறு எந்த நாகத்தையும் இம்சிக்கக் கூடாது என்பதில் நாகர்களுக்கும் கருடனுக்கும் இடையே உண்டான ஒரு உடன்படிக்கை என்பதுதன் உண்மை.

ஒரு பௌர்ணமியன்று வழக்கம்போல் கருடனுக்கு, பலியும் மற்றும் நாகமும் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தன. ஆனால் எங்கிருந்தோ வந்த காளிங்கன் தன் இனமாகிய அரவத்தை தானே உண்டு விட்டான். இத்தனை ஒரு இழிவான செயலைச் செய்த காளிங்கன் மீது, அப்பொழுது அங்கு பறந்து வந்த கருடனுக்கு அசாத்திய கோபம் வந்தது. காளிங்கனை நோக்கி சர்ரென்று பூமியை நோக்கி கீழே பறந்தார். காளிங்கன் தனது நாறு தலைகளையும் குடை போல் விரித்து, படமெடுத்து ஆடத் தொடங்கினான். காளிங்கனின் சீற்றத்தைக் கண்டு சிறிதும் அஞ்சாத கருடன், தனது சிறகுகளை பெரியதாக விரித்து பலம் கொண்ட மட்டும் காளிங்கனை ஓங்கி அடித்தார்.

அடியைத் தாங்க முடியாத காளிங்கன், ரமணத் தீவிலிருந்து தொலை தூரத்தில் இருந்த ஒரு சமுத்திரத்தில் விழுந்தான். அங்கிருந்து கங்கை யில் புகுந்து, பிருந்தாவனத்தில் தவழ்ந்து கொண்டிருந்த யமுனை நதியை வந்து அடைந்தான். அதனால் அன்று வரை இனிப்பாக இருந்த யமுனை நதியின் நீர், கரிய நிறத்தில் மாறியது. நச்சுத்தன்மை கொண்டதுபோல் ஆனது. காளிங்கன், யமுனை நதிக்கு அருகாமையில் இருந்த ஒரு மேருவில் குடிபுகுந்தான்.

யமுனை நதியின் அருகாமையிலேயே நந்தகோபரின் மாளிகை அமைந்திருந்ததால் கிருஷ்ணர், பலராமர், விஷால், பத்ரன், ரிஷபன், தோக் இவர்கள் புடை சூழ நித்தமும் நதியோரமாக நடக்கலானார்கள். யசோதா மாதாவும், ரோஹிணி மாதாவும் யமுனை நச்சுத்தன்மை கொண்டதாக மாறிவிட்டது என்று கூறி இருந்ததால் அவர்கள் யாரும் யமுனையில் நீராடுவது இல்லை. ஆனால் அவர்களுடன் இருந்த ஆவினங்களும், நண்பர்களும் தாகத்திற்கு அவசரத்தில் யமுனை நீரை சிறிதளவு பருகினர். அவ்வளவுதான் பருகியவர்கள் அனைவருமே உடனே பூமியில் சடலமாக விழுந்து விட்டார்கள்.

இதை கண்ணுற்ற நீலமேக சியாமளன், ஒரு பிடி மணலை கையில் எடுத்துப் பார்த்துவிட்டு, என்ன தோன்றியதோ தெரியவில்லை, அதை வேகமாக வீசி எறிந்தார். காளிங்கன் குடிகொண்டிருந்த மடுவை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினார். பிறகு உயிர் அற்று கிடந்த சடலங் களின் மேல் தன் பார்வையைச் செலுத்தினார். என்ன ஆச்சரியம். எல்லோருமே, "ஏன் இவ்வளவு நேரம் தூங்கி விட்டோம்? பசுக்கள் கூட உறங்கி விட்டதா என்ன?" என்று கேட்டுக்கொண்டே உறக்கம் கலைந்து எழுந்தவர்கள் போல் காணப்பட்டார்கள்.

ஆனால் இதில் எதையுமே அறியாதது போல் அந்த மாயக்கண்ணன்,

"வாருங்கள் எல்லோரும் பந்து வீசி விளையாடுவோம்" என்று கூறிக் கொண்டே அனைவரையும் மடுவின் பக்கம் அழைத்துச் சென்றார். சுவாரசியமாக விறுவிறுப்புடன் பந்து விளையாட்டு நடந்து கொண்டிருந் தது. ஆனால் அந்த பீதாம்பரதாரி வீசிய பந்து மடுவிற்குள் விழுந்தது.

கூட இருந்தவர்கள் அனைவரும், "பந்தை போட்டவன்தான் பந்தை எடுத்துத் தர வேண்டும். நாங்கள் யாரும் போக மாட்டோம்." என்று பிடிவாதமாக நின்று விட்டார்கள். இதைத்தானே அந்த தாமரைக்கண்ணன் எதிர்பார்த்தார். அந்த மடுவிற்குள் போகவேண்டும் என்பதுதானே அவருடைய சித்தமாக இருந்தது.

அவர் எதிர்பார்த்து காத்திருந்த தருணம் வந்தது. அந்த நீரில் மடுவினுள் குதித்து, பந்தினை எடுத்துவர அந்த சுந்தரன் தயாராகிவிட்டார். அவருடைய சகோதரர்கள், "வேண்டாம் கண்ணா. அதில்தான் ஐந்து தலை நாகம் ஒன்று இருப்பதாக மாதாக்கள் கூறியிருக்கிறார்கள். பந்து போனால் போகட்டும். நீ வந்துவிடு. நாங்கள் விளையாட்டிற்காகத்தான் அப்படிச் சொன்னோம்" என்று கூறினாலும், அவர் கேட்பதாக இல்லை.

இந்த செய்தியைக் கேட்ட பெற்றோரும், மற்றோரும் அலறிப்புடைத்துக் கொண்டு ஓடி வந்தார்கள். யசோதா மாதாவிற்கு மூச்சே நின்று விடும் போல ஆனது. மூச்சுக்காற்று பட்டாலே மூர்ச்சையாகி விடும் உயிரினங்களின் முன் அந்த சிறிய பாலகனின் துணிச்சல் எந்த முடிவைத் தருமோ என்று எல்லோரையும் பயம்கொள்ள வைத்தது.

குரு ஸ்தானத்தில் இருந்த மூத்தவர், ஸ்ரீ பலராமர், "யாரும் கவலைப்பட வேண்டாம் .அவனுடைய காரியத்தை அவன் தொடங்கட்டும்" என்று கூறியதுதான் தாமதம். "தொம்" என்று மடுவினிற்குள் குதித்தார். அவர் குதித்த வேகத்தில், நீர் பொங்கத் துவங்கியது.

கோபாலன், நீரில் மூழ்கிய உடன் காளிங்கனின் குடும்பம் அவரைப் பார்த்து, "இத்தனை சிறிய பாலகனாக இருக்கும் நீ, எங்கள் தலைவனைக் கொன்று விடுவாயா? உடனே இங்கிருந்து போய்விடு" என்று அறிவுரை கூறினார்கள்.

நாகர்களின் அறிவுரையை லட்சியம் செய்யாமல் அந்த பாலகன், உறங்கிக்கொண்டிருந்த காளிங்கனின் வால் பகுதியை அழுத்தி மிதித்து விட்டு, நீரின் மேல் மட்டத்திற்கு வந்தார். தன்னுடைய ஐந்து தலைகளை யும் நூறு தலைகளாக மாற்றிக்காட்டும் மாயத்தை அறிந்திருந்த காளிங்கன், கோபத்தோடு நூறு தலைகளையும் படம் விரித்து ஆடலானான். இந்த சந்தர்ப்பத்திற்காகத்தானே காயாம்பூவண்ணன் காத்திருந்தார். வேகமாகத் தாவி ஏறி, அதன் தலைகளின் மேல் நின்று கொண்டு குதித்து குதித்து ஆனந்தமாக நடனம் ஆடத் தொடங்கினார். அவருடைய நடன வேகத்தைக் கண்ட எல்லோரும் தாமாகவே நடனத்தில் சேர்ந்து கொண்டார்கள்.

காளிங்கனின் பலம் சிறிது சிறிதாக குறையத் தொடங்கியது. தங்களின் தலைவன் மேலும் இம்சைகளை பொறுத்துக் கொள்ளும் நிலையில் இல்லை என்பதைப் புரிந்துகொண்ட நாகர் கூட்டம் காளிங்கனை இனியும் துன்புறுத்த வேண்டாம் என்றும் மன்னித்து விட்டு விடும்படியும் கேட்டு, துதித்து நின்றார்கள்.

கேட்டதைக் கொடுப்பவன் அல்லவா ஸ்ரீகருஷ்ணன்? உடனே என்ன சொன்னார் தெரியுமா? "காளிங்கா, நீ உன் குடும்பத்தாருடன் மீண்டும் ரமணத் தீவிற்கே சென்று வாசம் செய்து வா. உன்னுடைய தலையில் என்னுடைய பாதச் சின்னம் நிரந்தரமாக இருக்கும். கருடனால் உனக்கு எந்தவித துன்பமும் ஏற்படாது" என்று கூறி காளிங்கனை தன்யன் ஆக்கினார்.

ஸ்ரீ கிருஷ்ணனின் ஸ்பரிச பாக்கியம் பெற்ற பிறகு யாருக்குத்தான் புண்ணியம் உண்டாகாது? பாவங்களைப் போக்கி சகல க்ஷேமங்களையும், செல்வங்களையும் அளித்து மோட்சப்ராப்தியை அருளும் வல்லமை படைத்தவன் அல்லவா அந்த நந்தகோபன் குமரன்?

பரம்பொருளான புருஷோத்தமனின் புருஷார்த்தங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. கர்நாடக இசை வல்லுநர், ஜி.என்.பி. கூறுவது போல், கண்ணனைப் பணிந்து, துதித்து, அவன் புகழ் பாடி, அவன் அருளைப் பெறுவோம்.

"கண்ணனைப் பணி மனமே தினமே
மண்ணில் யசோதை சேய்
புண்ணிய ஸ்வரூபனை
மாதவனை யாதவ தீபனை,
மாயனை கண்ணனைப் பணி மனமே தினமே!"

எல்லோருக்கும் ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி நல்வாழ்த்துக்கள்.

Comments

மகாலட்சுமி சுப்பிரமணியன் says :

கிருஷ்ணன் பற்றிய செய்திகள் தேனாய் இனிக்கிறது. கிருஷ்ண ஜெயந்தி ஆகிய இன்று கண்ணணை பற்றிபடித்து ,ரசித்து அவன் தாள் பணிகிறோம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :