• SPARKLES | மினுமினு

விடுதலைப் போராட்ட தியாகிகள் ஐவர்


பத்மினி பட்டாபிராமன்

நம் நாட்டின் 75-வது சுதந்திரதின விழாவில், விடுதலைப் போராட்ட தியாகிகள் 5 பேரை நினைவு கூர்ந்து போற்றும் நோக்கில் உரத்தசிந்தனை சங்கம்,அண்மையில் இணையவழி பேச்சரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

அதில் கலந்து கொண்டு பாஜக தலைவர் இல.கணேசன் சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா பற்றி சிறப்புரையாற்றினார். சுப்பிரமண்ய சிவாவின் வறுமைமிகு வாழ்க்கை, திண்ணைப் பள்ளிக்கூடப்படிப்பு, ஆன்மிக நாட்டம், பின்னர் தேசவிடுதலையில் பொறிபறக்கும் பேச்சால் மக்கள் கொடுத்த "வீரமுரசு" என்ற புனைபெயரால் சுதந்திரக் கனல் மூட்டியது, இராஜத்துரோகக் குற்றச்சாட்டில் சிறைவாசம் சென்று கொடுமைகள் அனுபவித்தது ஆகியவை பற்றி உருக்கமாகக் கூறினார்.

பாரதியார் மற்றும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி யுடன் இணைந்து ஆங்கிலேயரை எதிர்த்ததையும், கைதியாக இருந்த போது தோல் பதனிடுதல், கயிறு திரித்தல் ஆகிய வேலைகளால் குஷ்டரோகம் என்னும் நோயால் பாதிக்கப் பட்டதையும், ஆனாலும் தன் எழுத்தாற்றல் மூலம் நாட்டு விடுதலைக்காகப் போராடியதையும் எடுத்துரைத்தார்.

வாஞ்சிநாதன் பற்றிப் பேசினார் கலைமகள் ஆசிரியர்.கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன். அவர் பேசுகையில், விடுதலைப் போரில் வாஞ்சிநாதன் ஆற்றிய வீர செயல்கள் பற்றி தினமணிகதிரில் ரஹமி எழுதிய கட்டுரைகள் மூலம்தான் தமிழுலகத்திற்கு தெரியவந்தது என்றார்.

சுப்பிரமணிய சிவா, வ.உ.சி, ஆகியோருக்கு ஆங்கிலேய அரசாங்கம் தந்த கொடுமைகளுக்கு பிரிட்டிஷ் ராணிக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே வாஞ்சிநாதன்ஆஷ் துரையைச் சுடக் காரணமாய் அமைந்தது என்றார். வாஞ்சிநாதன் மனைவியான பொன்னம்மாளை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தனது சகோதரியான இந்திராணி நாச்சியார் இல்லத்தில் 1967-ல் அவர் மறைவு வரை வைத்திருந்து அனைத்து உதவிகளும் கொடுத்துக் காப்பாற்றினார் என்ற தகவல் கூறி சிறப்புரையாற்றினார்.

தில்லையாடி வள்ளியம்மை குறித்து பேராசிரியர் முனைவர் .உலகநாயகி பழநி பேசினார். 1893-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேய அரசு அங்கு குடியேறிய இந்தியர்களை அடிமைகளாக நடத்திய விதம் பற்றி மகாத்மா காந்தியின் எழுச்சிமிகு உரையைக் கேட்டுக் கொதித்துப்போன பதினாறு வயதேயான தில்லையாடி வள்ளியம்மை, சிறைசென்றதைக் குறிப்பிட்டுப் பேசினார்.

சிறையிலிருந்து வெளிவந்து பத்து நாட்களில் வள்ளியம்மை உயிர் பிரிந்தது. இதைக் கேட்ட மகாத்மா காந்தி நேரில் வந்து "விடுதலை உணர்வை தனக்கு ஊட்டிய முதல் இந்தியப் பெண்" என்று கூறி கண்ணீர் அஞ்சலி செலுத்தினாராம்.

1997-ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதியின் விருப்பத்திற்கிணங்க நெல்சன் மண்டேலா, அந்த வள்ளியம்மையின் கல்லறையில், "நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்" மற்றும் "தோன்றில் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று" என்ற இரண்டு திருக்குறளைப் பதித்ததாகக் கூறி நெகிழ்ச்சிமிகு வரலாற்றை எடுத்துரைத்தார்.

பேராசிரியர் முனைவர் .வ.வே.சு. (தன் பெயரைக் கொண்ட) வவே.சு அய்யர் என்றழைக்கப் படும் வ.வே.சுப்ரமணியய அய்யரின் நாட்டுப் பற்றைப் போற்றி உரையாற்றினார்..

இந்திய விடுதலையில் முக்கிய பங்காற்றிய விடுதலை வீரர்வ.வே. சுப்ரமணியம் லண்டனுக்கு பாரிஸ்டர் படிக்கச் சென்றபோது வீரசாவர்க்கரைச் சந்தித்து மேல்நாட்டு நடனக்கலை கற்க வந்ததாகக் கூறினாராம். அவரது மனதை மாற்றி ,இந்திய விடுதலை வேள்வியில் ஈடுபட வைத்தாராம்.

லண்டனிலிருந்து வ.வே.சு., ஆம்ஸ்டரடாம் வரை கப்பலில் வீரவிக்ரம்சிங் என்ற பெயரில் பஞ்சாபியராக சென்றிருக்கிறார். பின்னர் பாரிஸ், அங்கிருந்து இத்தாலியில் உள்ள ரோம் நகருக்குச் சென்று ஆங்கில-இத்தாலிய அகராதி எழுதியிருக்கிறார். பற்பல மொழிகளில் பேசும் வித்தகர் ஆனவர்,, பின்னர் இஸ்லாமியர் வேடமிட்டு இந்தியா திரும்பியுள்ளார். வாழ்வின் முதற்பகுதியில் புரட்சியாளர் ஆக இருந்தவர், பின்னர் அஹிம்சாவாதியாகி தமிழ் இலக்கியத்தை வளர்ப்பதில் பெரும் பங்காற்றியிருக்கிறார்.

திருக்குறள், கம்பராமாயணம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சாதிமதபேதமில்லா குருகுலம் நடத்தியுள்ளார். விடுதலைப் போராட்ட வீரர் தியாகி செண்பக ராமன் பற்றி அவர்களின் பேரரான முனைவர் பொ.சேதுசேஷன் பேசினார். ஜெய்ஹிந்த் செண்பகராமன் அவர்கள் பற்றிப் பேசும் போது, அவரது தந்தை ஆங்கிலேய அரசின் பிடியிலிருந்து தன்மகனைக் காப்பாற்ற பெர்லினுக்கு அனுப்பினார் என்று குறிப்பிட்டார்.

இத்தாலியில் 12 மொழிகளைக்கற்று டாக்டர் பட்டம் பெற்றபின் வீரசாவர்க்கரை அந்தமான் சிறையிலிருந்து விடுவிக்க முற்பட்டு, ஜெர்மன் அரசரான வில்லியம் கெய்சரின் அந்தரங்க ஆலோசகராக ஆகி இருக்கிரார் செண்பக ராமன்.. அமெரிக்காவில் கறுப்பினத்தவரின் விடுதலைக்காக உட்ரோ வில்சனைச் சந்தித்தார்.

நேதாஜிக்கு முன்னோடியாக Indian National Volunteers (INV) படை ஆரம்பித்து "ஜெய் ஹிந்த்" என்ற வீரவசனத்தை விடுதலை வீரர்களுக்குத் தந்தார்.

பின்னர் நேதாஜி இவரைப் பின்பற்றி விடுதலைப் போரில் ஈடுபட்டார்.

இரண்டாம் உலகப் போரில் மக்களுக்கு சேதம் ஏற்படாத வகையில் EMPTON. கப்பலில் இருந்து சென்னை மீது குண்டு போட்ட போது செண்பக ராமன் அந்தக் கப்பலில் தான் இருந்திருக்கிறார்.

ஹிட்லர் ஒரு சமயம் "இந்தியர்களுக்கு ஆளத் தெரியாது" என்று கூறி விட்டார்.

இந்தியர்களை ஹிட்லர் அவமதித்ததைக் கண்டித்து அவரிடம் மன்னிப்புக் கடிதம் எழுதித் தரும்படி செண்பகராமன் கேட்டார்.

அதன்படி மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததைக் கண்டு பொறுக்காத ஹிட்லர் ஆதரவு நாசிக்கள் செண்பகராமனுக்கு விஷம் கொடுத்தனர். விஷம் கலந்த பாலை அருந்திய பின்பும்கூட காப்பாற்றப்பட்டார். பின்னர் மறைவாக ஹிட்லர் ஆதரவாளர்களால் மரக்கட்டைகளால் தாக்கிக் கொல்லப்பட்டார் என்று தனது தாத்தாவின் வீர விடுதலைப் போராட்ட வரலாற்றை எடுத்துரைத்தார்.

Comments

பத்மினி பட்டாபிராமன் says :

விடுதலைப் போராட்ட தியாகிகள் ஐவர் என்னும் எனது கட்டுரைத் தொகுப்பிற்கு, உரத்த சிந்தனை இணைய வழி சந்திப்பில் குறிப்புக்கள் தந்து உதவியவர் திரு .ஜி. சுப்பிரமணியன் அவர்கள்.

Udhayamram says :

சிறப்பான பதிவு " உரத்த சிந்தனையின் முயற்சி தொடரட்டும். பத்மினி பட்டாபிராமனின் தொகுப்பு. சிறப்பு

ரேவதி baalu says :

வெகு அருமை.. சிறப்பான தகவல்கள். அடுத்த தலைமுறைக்கு நம் விடுதலை போராட்ட வீரர்களை அறிமுகப்படுத்த இது ரொம்ப அவசியமான பதிவு. பாராட்டுக்கள்.

முனைவர் தென்காசி கணேசன் says :

அற்புதமான பதிவு. பாராட்டுக்கள் பத்மினி.

M.Manonmani says :

அருமையான பதிவு மேடம்

Vijayan says :

75 வது சுதந்திர வேளையில் விடுதலைக்குப் பாடுபட்ட தியாகிகளை நினைவு கூறத்தக்க வகையில் அமைந்த கட்டுரைகள் எழுதிய சகோதரி திருமதி பத்மினி பட்டாபிராமன் அவர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும், வணக்கங்களும்.

எஸ்.வி.ராஜசேகர் சென்னை says :

சுதந்திர போராட்டத் தியாகிகள் பற்றி நல்ல பல தகவல்களைக் கட்டுரையில் கொடுத்த திருமதி பத்மினி பட்டாபிராமன் திரு ஜி.சுப்பிரமணியன் மற்றும் இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த உரத்த சிந்தனை மற்றும் தியாகிகளைப் பற்றி பேசிய பிரமுகர்களுக்கு எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

Geetha sri says :

அருமையான நிகழ்ச்சி. சுதந்திர தின விழாவில் அனைவரும் அழகாக பேசியதை இங்கு தொகுத்து வழங்கிய பத்மினி மேடத்துக்கும் ஜி.எஸ் அவர்களுக்கும் மனார்ந்த வாழ்த்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :