• தீபம் - ஆன்மீகம்

ஆழ்வார் பாசுரங்களும் அழகிய உவமைகளும் : 15 - திராவிட வேத சாகரம்!


- லதானந்த்

நம்மாழ்வாருக்கு சடகோபன், மாறன், பராங்குசன் உள்ளிட்ட 35 திரு நாமங்கள் உண்டு. நம்மாழ்வாரின் சீடரான மதுரகவியாழ்வார், ‘கண்ணி நுண் சிறுத்தாம்பு’ என்ற நூலில், பதினொரு தனியன்களைக் கொண்ட பாடல்களால் நம்மாழ்வாரைப் போற்றியிருக்கிறார்.

பெரும் தகுதி பெற்றவர்களையே, ‘நம்’ என்ற அடைமொழியுடன் சேர்த்து அழைப்பார்கள். அப்படிப்பட்ட பெருமை கொண்ட ஆழ்வார்தான் நம்மாழ்வார். மேலும், இந்த அடைமொழியை அவருக்குத் திருவரங்கனே அளித்ததாக அடியவர் போற்றுவர். இவர் வாழ்ந்தது 35 ஆண்டுகள். திருவாய்மொழியைப் பாடியவுடன் இறைவனின் திருவடிகளை அடைந்து பரமபதப் பேற்றினைப் பெற்றதாகக் கூறுகின்றனர். இவர் இயற்றிய திருவாய்மொழி, ‘மனிதக் காதல்’ என்ற நிலை மாறி, ‘இறைக் காதல்’ என்ற இலக்கை எட்டியது. அதிலிருக்கும் நூறு பதிகங்களில் தலைவியின் எண்ணவோட்டங்களுடன், தாயின் கூற்றாகவும், தோழியின் கூற்றாகவும் பல அமையப்பெற்றுள்ளன.

இவரது திருவாய்மொழியை நாதமுனிகள், ‘திராவிட வேத சாகரம்’ எனப் போற்றிக் கொண்டாடுகிறார். பல பாடல்களில் உவமைகள் ஒளியேற்றி மிளிர்கின்றன; உவப்பை அள்ளித் தருகின்றன.

இவரது திருவாசிரியத்தில் பாக்கள் ஆசிரியப்பா வகையில் அமைந்துள் ளன. முதல் பாடலிலேயே உவமைகள் வரிசைக்கட்டி நிற்கின்றன. இறைவனின் பள்ளிகொண்டிருக் கும் கோலமானது, பச்சை வண்ணம் கொண்ட மலை ஒன்று சமுத்திர ராஜனின் கைகளிலே உறங்குவது போலிருக்கிறதாம். அந்த மலை, பவளவாய் இதழ்களைக் கொண்டிருக்கிற தாம். மலையும் இடையிலே ஆடை உடுத்தியிருக்கிறது. அந்த ஆடை என்ன தெரியுமா? சிவந்த மேகத்தை அணிந்திருப்பதால், அது செஞ்சூரியன்போல ஒளி விடுகிறதாம். திருமுடியில் சூடியிருப்பதும் கதிரவனை! சுதர்ஸனம், பாஞ்சஜன்யம், நாதகம், கௌமோதகி, சார்ங்கம் ஆகிய இறைவனின் ஐம்படைகளையும் குளிர்ச்சிமிக்க சந்திரனைப் போலத் தரித்துக்கொண்டிருக்கிறார். மற்றபடி அணிந்திருக்கும் ஆபரணங்கள் அனைத்தும் நட்சத்திரங்கள் போல ஜொலிக்கின்றதாம்.

இதோ அந்தப் பாசுரம் :

‘செக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப்
பரிதிசூடி அஞ்சுடர் மதியம் பூண்டு
பலசுடர் புனைந்த பவளச் செவ்வாய்
திகழ் பசுஞ்சோதி மரகதக் குன்றம்
கடலோன் கைமிசைக் கண் வளர்வதுபோல்
பீதகவாடை முடி பூண் முதலா
மேதகு பல்கலன் அணிந்து சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீதிட்டுப்
பச்சை மேனி மிகப் பகைப்ப
நச்சு வினைக்கவர்தலை அரவினமளி ஏறி
எறிகடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்
தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த
தாமரை உந்தி தனிப் பெரு நாயக!
மூவுலகளந்த சேவடியோயே!’

இறைவனின் மீது நாட்டம் கொண்டவர்கள் தங்களுடைய பக்தி மிகுதியால் தேன் போன்ற இனிய இன்பத்தை அருந்தி மகிழ்கிறார்கள்; பக்தி என்னும் அமுத வெள்ளத்தில் மூழ்குவதைப் பெருமையாக நினைக்கிறார்கள் என்னும்போது தேன் உவமை தித்திக்கிறது.

இதோ அந்தச் சொல்லாடல் :

‘அன்பில் இன்பீன் தேறல் அமுத வெள்ளத்தானாம்
சிறப்பு விட்டு’

படங்களையுடைய பாம்பான வாசுகியை மந்திர மலையில் சுற்றிக் கடையும் காட்சியை விவரிக்கிறார் நம்மாழ்வார். அப்போது பாற்கடலின் அலைகள் மலைகள்போல எழுந்து வீசுகின்றனவாம். பாற்கடலைக் கடையும்போது அங்கே மலைகளும் அஞ்சி நடுங்கும்படி, இடி போன்ற ஓசை கிளம்பக் கடைந்தானாம் எம்பெருமான்!

‘வரைபுரை திரைபொர பெருவரை வெருவர,
உருமுரல் ஒலிமலி நளிர்கடற் படவர
வரசுடல் தடவரை சுழற்றிய, தனிமாத்
தெய்வத் தடியவர்க் கினிநாம் ஆளாகவே
இசையுங்கொல், ஊழிதோ றூழியோ வாதே?’

என்பதே அப்பாடல் வரிகள்.

உலகைத் தோற்றுவிக்க எண்ணிய மஹாவிஷ்ணு, தமது நாபிக்கமலத் தில் இருந்து பிரம்மாவாகிய விதையைத் தோற்றுவித்தார் எனும்போது பிரம்மாவுக்கு உவமையாக விதையைக் கூறுகிறார். ‘தெய்வ நான்முகக் கொழுமுளை ஈன்று’ என்பதே அந்த உவமை நயம் ஜொலிக்கும் வரிகள்!

இன்னொரு பாசுரத்தில் மாலவனின் விழிகளைத் தாமரை மலர் என்றும், உதடுகளைக் கோவைப் பழம் என்றும், திருமுடியோ ஆயிரம் சூரியப் பிரகாசம் கொண்டது என்றும், ஆயிரம் திருத்தோள்களும் பற்பல கற்பகச் சோலைகள் ஒன்றாய்த் திரண்டிருப்பதைப் போலவும் உள்ளது எனவும் உவமையணி கொண்டு உலகளந்த பெருமானை உன்னதமாக வர்ணிக் கிறார் நம்மாழ்வார்.

அந்தப் பாசப் பாசுர வரிகள் :

‘மாமுதல் அடிப்போ தொன்றுகவிழ்த் தலர்த்தி,
மண்முழுதும் அகப்படுத்து, ஒண்சுடர் அடிப்போது
ஒன்றுவிண் செலீஇ, நான்முகப் புத்தேள்
நாடுவியந் துவப்ப, வானவர் முறைமுறை
வழிபட நெறீஇ, தாமரைக் காடு
மலர்க்கண் ணோடு கனிவா யுடையது
மாய்இரு நாயிறா யிரம்மலர்ந் தன்ன
கற்பகக் காவு பற்பல வன்ன
முடிதோ ளாயிரம் தழைத்த
நெடியோய்க் கல்லதும் அடியதோ வுலகே?’

(நிறைந்தது)

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :