• SPARKLES | மினுமினு

போடுங்கள் தடுப்பூசி.. பிடியுங்கள் பரிசு!


ஜி.எஸ்.எஸ்.





‘’கரும்பு தின்ன கூலி வேண்டுமா?’’ என்ற பழமொழி மாதிரி இப்போது பல நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள பல சலுகைகளை அளித்து வருகிறது.

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டால் இலவச பீட்சா மட்டுமல்ல.. போனஸாக கைச்செலவுக்கு 100 டாலர் பணமும் உண்டு! இப்படி கொரோனா தடுப்பூசி போட வைக்க தன் நாட்டு மக்களுக்கு பல சலுகைகளை பல நாடுகளும் வழங்குகின்றன.

கொரோனா பரவல் கார்ணமாக பல நாடுகளின் பொருளாதரமும் பாதிக்கப் பட்டுள்ளது. கொரோவைக் கட்டுப்படுத்த தற்போது தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என்ற நிலையில், தடுப்பூசி போடத் தயங்குபவர்கள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். இதனால் பிரச்னை அவர்களுக்கு மட்டுமல்ல அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கும்தான். எனவே எப்படியாவது அவர்களை தடுப்பூசி போட்டுக் கொள்ள வைப்பதற்காக பலவித தந்திரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன அந்த நாடுகள்.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பிரிட்டனில் வவுச்சர்களை அளிக்கப் போகிறார்களாம். இவற்றைப் பயன்படுத்தி பல உணவகங்களில் தள்ளுபடி விலையில் உணவு உட்கொள்ள முடியும். இந்த வவுச்சர்களைக் காட்டினால் பேருந்துகளிலும் கட்டணத் தொகை தள்ளுபடியாகும்.

இரு முறை தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழைக் காட்டினால் பெரிய ஹோட்டல்களில் சலுகை விலையில் உணவு கிடைக்கும். அரசு அளிக்கும் மானியத்தை கொண்டு ஊபர், பிட்ஸா பில்க்ரிம்ஸ், போல்ட் போன்ற பல நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி அளிக்கத் தயாராகிவிட்டன.

இந்த விஷயத்தில் ரஷ்யா வேறு லெவல். தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஒவ்வொருவருக்கும் ஒரு எண்ணைக் கொடுத்து லாட்டரி முறையில் சில எண்களை தேர்ந்தெடுத்து வாரத்துக்கு 5 பேருக்கு கார்களைப் பரிசாக அளிக்கிறார்கள். லண்டனில் தடுப்பூசி போடுபவர்களை குலுக்கல் மூலம் தேர்ந்தெடுத்து சர்வதேச கால்பந்து பந்துப் போட்டிகளுக்கு நுழைவுச் சீட்டை அளிக்கிறார்கள்..

தடுப்பூசி போடாதவர்களூக்கு அபராதமோ வேறு விதமான தண்டனையோ விதிக்கலாமே என்ற பேச்சும் பல நாடுகளில் பரவலாக அடிபட்டு கொண்டு வருகிறது.

அமெரிக்கர்களில் கணிசமானவர்களைப் பொருத்தவரை கொரோனாவுக்கு எதிராக மட்டுமல்ல, எந்தவித தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளவுமே ஒரு தயக்கம் இருக்கிறது. உலகில் பருமனானவர்கள் மிக அதிக எண்ணிக்கையில் வாழும் நாடுகளில் ஒன்று அமெரிக்கா. அங்கு இறப்பவர்களில் நாலு பேருக்கு ஒருவர் இதய நோயினால் இறக்கிறார்கள். அங்குள்ளவர்களில் பாதி பேருக்கு ரத்தக் கொதிப்பு இருக்கிறது. பத்தில் ஒருவருக்கு என்கிற அளவில் நீரிழிவு நோயும் உண்டு! அமெரிக்கர்களில் நான்கில் ஒரு பேர் கூட போதிய உடற்பயிற்சி செய்வதில்லை என்றும் பத்தில் ஒருவர்தான் போதிய காய்கறி மற்றும் பழங்களை சாப்பிடுகிறார்கள் என்றும் கூறுகிறது ஒரு கணிப்பு.

கொரோனா தடுப்பூசிகளையும் எதிர்பார்த்த அளவுக்கு அமெரிக்க மக்கள் இன்னமும் போட்டுக் கொள்ளவில்லை. எனவே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தன் நாட்டின் மாநிலத் தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இனி கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஒவ்வொருவருக்கும் 100 டாலர் கொடுக்கலாம் என்பதுதான் அது. இதற்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. குறிப்பாக ‘ஏற்கனவே பொறுப்பாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு சலுகை இல்லை. ஆனால், இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு ஊக்கத் தொகையா?’ என்று கொதிக்கிறார்கள். ‘என்ன செய்வது? இதுபோன்ற ஊக்கங்களை அளித்தாவது வைரஸை ஒழிக்க வேண்டிய நிலையில்நாம் இருக்கிறோம்’ என்கிறார் ஜோ பைடன்.

ஒரு நாட்டின் மிகப் பெரும்பாலான மக்களுக்கு குறிப்பிட்ட வைரசுக்கு எதிரான தடுப்பாற்றல் உருவாகிவிட்டால் அந்த வைரஸ் பரவுவது நிறுத்தப்படும். இந்த நிலையை ‘கூட்ட நோய்த் தடுப்பு’ (ஹெர்டு இம்யூனிடி) என்பார்கள். இதை அடையத்தான் நாடுகள் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன. அதற்காகக்ததான் மேற்படி சலுகைகள்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :