• JUST IN | சுட சுட

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிகள் இன்று கோலாகல ஆரம்பம்!





சர்வதேச மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான பாராலிம்பிக் ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்குகின்றது.

ஒவ்வொரு முறையும் ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தவுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும். அதன்படி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்ததையடுத்து இன்று பாராலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன.

இன்று தொடங்கும் இப்போட்டிகள், செப்டம்பர் 5-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த பாராலிம்பிக்கில் 163 நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்து 537 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 54 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில், தமிழ்நாட்டின் மாரியப்பன் தங்கவேலு இந்திய மூவர்ணக் கொடியை ஏந்திச் செல்கிறார். மொத்தம் 22 விளையாட்டுகளில் 539போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், வில்வித்தை, பேட்மிண்டன், துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ் உள்பட 9 விளையாட்டுகளில் இந்தியா கலந்து கொள்கிறது.

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற ரியோ பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதலில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கம் வென்றார். ஈட்டி எறிதலில் ஜகாரியாவும் தங்கம் வென்றார். இவர்கள் மீது இந்த முறையும் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. மேலும் உலக சாதனையாளர்கள் சந்தீப் சவுத்ரி, சுமித் ஆகியோரும் தடகள அணியில் இடம்பெற்றுள்ளனர். கொரோனா காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில், ஒவ்வொரு நாடுகளின் சார்பிலும் 6 அதிகாரிகள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்தியா சார்பில் 5 வீரர்கள், 6 அதிகாரிகள் என 11 பேர் மட்டுமே தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

தமிழக வீரர் மாரியப்பன் தொடக்க விழா அணிவகுப்பின் போது தேசிய கொடியை ஏந்தி செல்கிறார். வினோத்குமார், தேக்சந்த், ஜெய்தீப், சகினா ஆகியோரும் தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :