• தீபம் - ஆன்மீகம்

ஆழ்வார் பாசுரங்களும் அழகிய உவமைகளும் : 14 - பனிநஞ்ச மாருதமே!


- லதானந்த்

நம்மாழ்வார் அவதரித்தது திருக்குருகூர் என்னும் பதியில். இந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கிறது. இவரது பாடல்களின் சிறப்பால் இவர், ‘வேதம் செய்த மாறன்’ என்று புகழப்படுகிறார். இவருக்கு, ‘மாறன்’ என்ற பெயர் வந்ததற்கும் காரணம் ஒன்று உண்டு. பிறந்தவுடன் மற்ற குழந்தைகளைப் போல அழாமல், பாலருந்தாமல் இருந்தாராம். இப்படிப் பட்ட மாறுதலான குணங்களைக் கொண்டிருந்ததால் இவரை, ‘மாறன்’ என்று அழைக்கலாயினர்.

இவருக்கு, ‘சடகோபன்’ என்ற பெயரும் உண்டு. ‘சட’ என்னும் நாடிதான் குழந்தைகள் பிறந்தவுடன் அழக் காரணமாகிறது. அந்த சட நாடியை வென்று, மாறாக இருந்தமையால் இவருக்கு, ‘சடகோபன்’ என்ற பெயர் உண்டாயிற்று. இவரைத் தலைவராகப் புகழ்ந்து கம்பர் இயற்றியதுதான். ‘சடகோபர் அந்தாதி’ எனும் நூல்.

இவரை, திருமாலைப்பரன்’ என்றும் சொல்வார்கள். தமது அன்பினால் அந்தப் பரனையே இவர் கட்டிப்போட்டதால், ‘பராங்குசன்’ என்றும் பாசத்தோடு அழைக்கப்பட்டார்.

இவர் நான்கு நூல்களை இயற்றியிருக்கிறார். அவை : திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி ஆகியன வாகும். நான்கிலும் சேர்த்து மொத்தம் 1,296 பாடல்கள். இவரது ஏராளமான பாடல்களில் இயல்பாகவே உவமைகள் நடனம் புரிகின்றன. படிப்போர்க்கு பக்திச் சுவையையும் தமிழ்ச் சுவையையும் ஒருங்கே அளிக்கின்றன.

மேகம் போன்ற நிறத்தையுடைவன் கண்ணன். அவனிடத்தே அன்பு பூண்ட மாறநாயகி, பிரிவுத் துயரால் வடுகிறாள்; கண்கள் கலங்குகின்றன. அப்போது எப்படி இருந்தது தெரியுமா? குளத்தில் மீன்கள் புரளுவதைப் போல இருந்ததாம். இங்கே கண்களின் அழகுக்கு மீன்களை உவமை சொன்னதுடன், கலங்கியிருக்கும் கண்ணீரிலே புரளும் நீர் மல்கிய கண் களுக்கு, குளத்தில் நீந்தும் மீன்களை உவமையாக்கியது எவ்வளவு பொருத்தம்!

‘செழுநீர்த் தடத்துக் கயல்மிளிர்ந் தாலொப்ப சேயரிக்கண்
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ
முழுநீர் முகில்வண்ணன் கண்ணன் விண் நாட்டவர் மூதுவராம்
தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ்குழற்கே’

எம்பெருமான் கருடன் மேலேறிப் போவதைச் சொல்லவந்த நம்மாழ்வாருக்கு, தீயைப் போல சினம் கொண்டவனாய் கருடன் தென்படுகிறான். அதை, ‘தழற்போல் சினத்த அப்புள்ளின்பின் போனதனி நெஞ்சமே’ என்ற வரிகளில் குறிப்பிடுகிறார்.

பிரிவுத் துயரால் அவதியுறும் தன் மீது, கண்ணனின் திருமுடியில் சூட்டப்பட்டிருக்கும் துளசி மாலையின் குளிர்ச்சியான காற்று வீசும்போது, அது விஷம்போலத் தமது உயிரை வருத்தி, நடுங்க வைக்கிறது என்கிறார். அந்த வரிகள்: ‘பனிநஞ்ச மாருதமே! எம்ம தாவி பனிப்பியல்வே?’ வாசம் மிகுந்த காற்று இனிமை யானதுதான்; அதே காற்று பிரிவுத் துயரில் வாடும்போது விஷம்போல் அல்லவா துயரைப் பெரிதுபடுத்துகிறது!

பிரிவுத் துயரால் வாடும்போது தரையில் கால்களைக் கீறிப் போரிடும் காளைகளின் கருமையான கால்களைப் பார்த்து திருமாலின் நிறம் என்று நினைக்கத் தோன்றுகிறது. மழைக் காலம் இல்லாத போதும் வானில் மழை பெய்கிறதே என மனம் மயங்குகிறது. அது மழை அன்று. போரிடும் எருதுகளின் வியர்வையும், சிறுநீருமே மயங்கும் மனதுக்கு மழை போலத் தெரிகிறது. இதோ அந்தப் பாசுரம் :

‘ஞாலம் பனிப்பச் செறுத்து நன்னீரிட்டுக் கால்சிதைந்து
நீலவல் லேறு பொராநின்ற வானம் இது திருமால்
கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறுதண்பூங்
காலங்கொலோ? அறியேன் விளையாட்டியேன் காண்கின்றனவே!’

பாகவதர்களைக் காதலியாக நினைத்து, பிரிவதற்கு வருந்திப் பேசுவதாக ஒரு பாசுரத்தில் நம்மாழ்வார் அமைத்திருக்கும் உவமைகள்தாம் எத்துணை நயமானவை!

அவளோ, வைகுண்டத்தைப் போன்ற அழகுடையவள். அவளது விழிகள் தாமரைப் பூப்போல இருக்கின்றன; செங்கழுநீர் மலர் போலவும் தென்படுகின்றன. ஆனால், விழிகளில் கண்ணீர்த் துளிகள் அல்லவா காட்சியளிக்கின்றன! அவை முத்துக்கள் போலத் தெரிகிறதே! இன்னொரு கோணத்தில் பார்த்தால் மான் போலவும் அல்லவா அவளது பார்வை இருக்கிறது! இத்தனை உவமைகளையும் கோர்த்துத் தருகிற பாசுரம் இதோ!

‘திண்பூஞ் சுடர் நுதி நேமியஞ் செல்வர் விண்ணாடனைய
வண்பூ மணிவல்லி யாரே பிரிபவர்தாம்? இவையோ
கண்பூங் கமலம் கருஞ்சுடராடி வெண் முத்தரும்பி
வண்பூங் குவளை மடமான் விழிக்கின்ற மாயிதழே’

(உவமைகள் தொடரும்)

Comments

K.s.krishnamurthi says :

Padikka I nimai

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :