• தீபம் - ஆன்மீகம்

வேண்டியவை அருளும் ஸ்ரீ வரலக்ஷ்மி விரதம்!


ஆர்.மீனலதா, மும்பை

‘வாழைக்கன்னு கிடைக்குமா? மாவிலை கிடைக்குமா? வாசனை பூக்கள் கிடைக்குமா?’ - இந்த ‘கிடைக்குமா?’ கேள்விகளெல்லாம், ஜகார்தா சென்றிருந்த சமயம், ஸ்ரீ வரலக்ஷ்மி நோன்பு பண்டிகைக்காக மனதில் எழுந்தவை.

மருமகளிடம் கேட்கையில், எது கிடைக்குமெனத் தெரியாது. இருப்பதை, கிடைத்ததை வைத்து பூஜை பண்ணலாம் அம்மா!" எனக் கூறினாள்.

‘அன்னை ஸ்ரீ வரலக்ஷ்மி என்ன எண்ணி இருக்கிறாளோ? அதுபடித்தான் நடக்கும்’ என உள் மனது கூறினாலும், குறிப்பிட்ட பொருட்கள் கிடைக்க ஸ்ரீ லக்ஷ்மியை மனதார வேண்டிக் கொண்டேன்.

பையனும், மருமகளும் இந்தோனேஷியா சென்ற புதிதாகையால், இதுபோன்ற பொருட்கள் எங்கு கிடைக்குமென்கிற விபரங்கள் சரியாகத் தெரியாத நிலைமை.

ஒரு வாரம் சென்ற பின், ஜகார்தாவிலுள்ள இந்து கோயிலுக்கு பையனுடன் சென்றேன். அங்கே கணபதி, முருகர், வெங்கடாசலபதி, ஐயப்பன், நவக்கிரஹங்கள் எல்லாமே இருந்தன. வழிபட்டேன். அங்கே சில தமிழர்கள் பூஜை செய்வதும், பெண்கள் பூத்தொடுப்பதும், உதவி செய்வதுமாக இருந்தனர்.

பையனுக்குத் தெரிந்த நான்கைந்து பேர்களிடம் என்னை அறிமுகப்படுத்தி னான். தமிழ் பேசுபவர்களைக் கண்டால் விட முடியுமா? என்ன! அவர்களிடம் பேசுகையில் மேலும் ஒருசிலர் அறிமுகமானார்கள். கலகல வெனப் பேசினார்கள்.

பல ஆண்டுகளாக இந்தோனேஷியாவில் வசித்துவரும் ராஜி வெங்கட் மாமி, மறைந்த ஓவியர் சில்பி அவர்களின் பேத்தி அகிலா ஈஸ்வர், ரேவதி ஜெயராமன், சுஜயா, கல்பகம், ‘இந்தியா க்ளப்’ பிரசிடென்ட் சாந்தி ஆகியோர் வார இறுதியில் கூடும் இடம் இந்தக் கோயில்தான். நிவேதனப் பிரசாதங்களை இவர்கள் செய்து, பூஜை முடிந்த பின் எல்லோருக்கும் அழகாக சிறு தட்டில் வைத்து விநியோகிக்கிறார்கள்.

சிலரின் மொபைல் எண்களை வாங்கிக் கொண்டு, எனது மருமகள் நம்பரை கொடுக்கையில், வரலக்ஷ்மி நோன்பிற்கு ஏதாவது தேவைப் பட்டால் தயங்காமல் சொல்லுங்கள்" என ராஜி வெங்கட் மாமி கூறுகை யில் மனதிற்கு நிறைவாக இருந்தது.

வீடு திரும்பியதும், மருமகளிடம் எல்லாவற்றையும் கூறி, அவர்களது மொபைல் எண்களைக் கொடுத்தேன்.

நோன்பிற்கு இரு நாட்கள் முன்பு, கோயிலில் சந்தித்த ராஜி மாமிக்கு ஃபோன் செய்கையில் மாட்டுப்பெண், ‘வாழைக்கன்னு, மாவிலை’ சமாசாரத்தை எதேச்சையாகக் கூற, கவலையே வேண்டாம்! இவையெல் லாம் நாளை உங்கள் வீட்டிற்கு வரும். அட்ரெஸை அனுப்புங்கள்" என்று சொல்லி விட்டார். பல வருடங்களாக ஜகார்தாவில் இருப்பதால் அவருக்கு இதெல்லாம் கிடைக்குமிடம் தெரிந்திருக்கிறது.

மறுநாள் அவர்கள் வீட்டு கார் ஓட்டுநர் எல்லாவற்றையும் கொண்டு வந்து கொடுக்க, மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் பூத்த வாசனை மலர்களும் அதில் இருந்தன.

பிறகென்ன! வாசலில் மாக்கோலம்; மாவிலைத் தோரணம்; உள்ளே டீப்பாயின் கால்களில் வாழைக்கன்று கட்டப்பட்டு, பட்டினால் போர்த்தப் பட்ட டீப்பாயின் மீது, பார்த்துப் பார்த்து அழகாக அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ வரலக்ஷ்மி திருவுருவம்.

பூஜை நாளன்று மற்ற வேலைகளை நாங்கள் இருவரும் கவனிக்க, கொழுக்கட்டைகளை அருமையாக பையன் செய்து கொடுத்தான்.

ராஜி மாமி அனுப்பிய கமகமவென வாசனை வீசிய பூக்களால் ஸ்ரீ வரலக்ஷ்மிக்கு அர்ச்சனை செய்தோம். மனத் திருப்தியுடன் பூஜை நிறைவாக நடந்தேறியது.

அழைத்தவர்களெல்லாம் வர, அவர்களுக்கு பிரசாதம், வெற்றிலை - பாக்கு, பழம், மங்கலப் பொருட்களைக் கொடுத்து உபசரித்தோம்.

வேண்டுதலுக்கு செவி சாய்த்து பூஜையை நிறைவாக நடைபெற வைத்தது ஸ்ரீ வரலக்ஷ்மியின் அருளே!

Comments

கனகம்பொன்னுசாமி says :

நமது பாரம்பரிய மிக்க பண்டிகைகளை ௭ந்தநாட்டில் ௭ங்கு இருந்தாலும் கொண்டாடும் பண்பு மகிழ்ச்சி மற்றும் வியப்பாக வும் இருக்கிறது

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :