• SPARKLES | மினுமினு

சிலிர்க்க வைக்கும் சிவப்புக் கண்கள்!


சிவா, மெல்போர்ன்

ஆஸ்திரேலியாவில் புதிதாக குடியேறியவர்களுக்கு இந்த நகரத்தைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. ஆனால், விக்டோரியா நகரில் வசிப்பவர்களுக்கும் வரலாற்று நிகழ்வுகளை விரும்பி படிப்பவர்களுக்கும் பேய்களைப் பற்றிய ஆர்வம் உள்ளவர்களூக்கும் இந்த நகரத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்திருக்கும்.

வால்ஹல்லா என்ற பேய் நகரம் மெல்போர்னிலிருந்து சுமார் 185 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது... இரண்டரை மணிப் பயணம்! இயற்கை தன் அழகை எங்கும் கொட்டிக் கிடக்க.. எரிக்கா, ராசன் எனும் ஊர்களை கடந்து வால்ஹல்லாவை சென்றடையலாம். ஓரிரு நாட்கள் அங்கேயே தங்கியிருந்து சுற்றிப் பார்த்தால், புதுப்புது அனுபவங்களைப் பெறலாம்! இங்குள்ள காட்டேஜ்கள் மற்றும் எல்லா இடத்திலும் சமையல் வசதி உண்டு, நாமே சமைத்துக் கொள்ளலாம். அல்லது உள்ளேயே சிறிய ரெஸ்டாரன்ட்களும் உண்டு.

இந்த பேய் நகரத்தினுள் கோல்ட் பீல்ட் ரயில்வே பார்க்க வேண்டிய இடம். வால்ஹல்லாவிலிருந்து தாம்சன் வரை சென்று திரும்பி வரும் வகையிலான ட்ரெயின் பயணம் அது! குறைந்தபட்சம் 25 பயணிகள் இருந்தால், தனியாக நமக்காகவே இந்த ரயில் இயக்கப்படும். கொரோனா பயம் காரணமாக கடந்த நவம்பர் 4-ம் தேதியிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்ட இந்த ரயில் சேவை, தற்போது மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது. இப்போது வால்ஹல்லாவிலிருந்து தாம்சன் வரை சென்று மறுபடி திரும்பிவர இரண்டு குழந்தைகள் உள்ள ஒரு குடும்பத்துக்கு 50 டாலரும் ஒரு வழிப் பயணத்திற்கு 30 டாலரும் கட்டணமாக வசூலிக்கிறார்கள். வழியெங்கும் சிறு ஓடை, மலையின் வளைந்த பாதை, சிறு சிறு பாலங்கள், அடர்ந்த காடு இவைகளின் ஊடே சென்று திரும்பும் வழியில் ஆறு மரப் பாலங்களை கடந்து செல்லும் இந்த ரயில் பயணம் அற்புதமான ஒன்று!

அடுத்து பார்க்க வேண்டிய இடம் இங்கு தங்க சுரங்கம், 8.5 கிலோ மீட்டர் சுரங்கப்பாதை இருப்பினும் 300 மீட்டர் தூரம் வரை உல்லாச பயணிகள் செல்லலாம். 13000 கிலோ தங்கம் அங்கிருந்து வெட்டி எடுக்கப்பட்டுள்ளது இதுவரை.

பார்க்க வேண்டிய மற்றுமொரு இடம் கிரிக்கெட் மைதானம். தங்க சுரங்கத்தில் வேலை செய்வோர் தங்களுக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் ஏதாவது விளையாட விரும்பி, மலைப்பாங்கான மேட்டுப் பகுதியை சமதளம் ஆக்கி உருவாக்கிய மைதானம் இது! ஆஸ்திரேலியாவின் முதல் கிரிக்கெட் மைதானமும்கூட! 1882 ஆம் ஆண்டு கூலி தொழிலாளர்களால் முடிக்கப்பட்டது. இதைத் தவிர வாக்கிங் நடக்க நிறைய பாதைகள் உள்ளன. அதில் டிராம்லைன் வாக்கவே சிறப்பான ஒன்று. இவைகள் வரலாற்று சிறப்புமிக்க நடைபாதைகள்.

குடும்பத்துடன் தங்கக்கூடிய வகையிலான மர வீடுகள் இங்கு டூரிஸ்ட் அட்ராக்ஷன்! இரண்டு அறைகளுடன் கூடிய இந்த வீட்டில், சமையல், குளியல், கழிப்பறை வசதிகள், எல்லோரும் அமர்ந்து டிவி பார்க்க இடம் எல்லாம் ஒருங்கே அமைந்திருக்கும்.

இனிதான் கிளைமாக்ஸ்! சுற்றுலாப் பயணிகளுக்கு திரில்லான பகுதி..வால்ஹல்லா மயானம்! இது சரிவான மலைப்பகுதியில் இருப்பதால் நல்ல காலணிகளை அணிந்து செல்வது மிக முக்கியம். இதன் வரலாறு மிக நீண்டது. 1870-ம் ஆண்டிலிருந்து பேய் நகரம் என்ற பெயர் வாங்க காரணமாக இருந்த இடம்.

இந்த நகரம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பேய்களின் தங்குமிடம் என்றும் நம்பப்படுகிறது. இரவினில் இதற்காக சுற்றுலாவும் ஏற்படும் செய்யப்படுகிறது. இந்த சுற்றுலாவில் சென்று வந்தவர்ள் பலரும் தங்களூக்கு ஏற்பட்ட அமானுஷ்ய அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள். ஒருவர் ‘’ வழியில் தூரத்திலிருந்து பார்க்கும்போது சிறிய மரம் என்று நினைத்தேன்.. அருகே சென்றபிறகுதான் தெரிந்தது - அது பேய் என்று”” என்று சர்வசாதரணமாக குறிப்பிட்டார். இன்னொருவர், ‘’நெருப்பு போன்ற ஒரு ஜோடி கண்கள் என்னை பார்த்துக் கொண்டே இருந்தது.. ஒருவேளை பிரமையாக இருக்குமோ’’ என்பர். இந்த ரெட் - ஐஸ் (சிவப்புக் கண்) எனப்படும் அருவங்களைப் பற்றிப் பரவலாக எல்லோரும் பகிர்ந்து இருக்கின்றனர்.

பேய் பிசாசுகளை நம்புகிறோமோ இல்லையோ ஆனால் அந்த இடத்தில் அந்த இரவு நேரத்தில் பேய் கதைகள் கூறும் போது உங்களை மீறி சில்லென்ற உணர்வு வந்து செல்லும். நன்றாக உடை உடுத்திக் கொண்டிருந்த ஒருவர், அப்படியே மயானத்திற்கு செல்லும் போது கொஞ்சம் கொஞ்சமாக உருவத்தை இழந்து மங்கலாக அந்த சமாதிக்குள் செல்வதாக நிறைய கதைகள் உண்டு.

பெரும்பாலான பேய் கதைகள் எல்லாம் இந்த தங்க சுரங்கத்தில் விபத்தில் இறந்த நபர்களை சுற்றியே அமைந்துள்ளன. அதில சாரா ஆன் என்கிற 21 வயது இளம் பெண்ணின் கதை இந்த நகரத்தின் பிரத்தியேக கதை.

1879ஆம் ஆண்டில் தங்கத் தேடலில் வந்த கும்பலில் சாரா ஆனும் ஒருவர். இவர் இங்கு பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தாராம். அந்த பெண்ணின் குரல் தற்போதும் இரவு நேரங்களில் பீதி கலந்த ஓலமாகக் கேட்கப்படுகிறதாம். முதலில் அழுகையாக தொடங்கி ஓலமாக மாறி… மரண ஓலமாக மாறி நிசப்தம் ஆகுமாம். அதைக் கேட்ட இப்புகுதி மக்கள் சொல்கிறார்கள்.

அந்த காலத்தில் இந்த தங்கச் சுரங்கத்தில் வேலை செய்ய கூலியாக அமர்த்தப்பட்டவர்கள் வேறுயாருமில்லை இங்கிலாந்தில் குற்றம் புரிந்தோராக கருதப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்டு இத்தகைய தங்க சுரங்கங்களிலும் சாலை அமைப்பதிலும் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களீன் ஆவிகள் இப்போதும் இப்பகுதியில் சுற்றி வருவதாக நம்பப்படுகிறது!

இந்த பேய்க் கதைகள் ஒருபுறம் இருக்கட்டும்.. ஆனால் ஊர் கொள்ளை அழகு! எங்கெங்கு திரும்பினும், இயற்கை அன்னை தன் வளங்களை வாரி இறைத்திருக்கிறாள். மாலை மங்கும் நேரத்தில் பறவைகளின் இரவுக்கு அடங்கும் குரல்கள் எங்கும் ஒலித்துக்கொண்டே இருக்கும். இரவு நெருங்க நெருங்க நமக்கும் பக்பக்கென்றுதான் இருக்கிறது!

அதுசரி.. அதென்ன சிவப்புக் கண் மனிதர்கள்?!

நெருப்பு கண்களுடன் ஆவிகளாக சுற்றிக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் சிறுவர்களைப் பற்றிக் கேட்கும்போது நம் கண்களில் நீர் துளிர்க்கிறது! ஆமாம். அந்தத் தங்க சுரங்கங்களில் வேலை செய்வோர் விபத்தில் இறக்கும் பட்சத்தில் அவர்களுடைய குழந்தைகள் கவனிப்பாரின்றி பசியாலும் பிணியாலும் பீடிக்கப்பட்டு சுற்றித் திரிந்து இறந்ததாக கூறப்படுகிறது. அவர்களே இன்று வரை சுற்றுலா வருவோரை ஏக்கமாக பார்ப்பதாக கருதப்படுகிறது.

யோசித்துப் பார்த்தால் கடந்த காலத்து கருப்பு தினங்கள் எல்லா நாட்டிலும் இருக்கும் என்றே தோன்றுகிறது!
Comments

T S RAGUPATHI says :

Good

T S RAGUPATHI says :

Good

Ravindran says :

கதையோ நிஜமோ திகிலாகத்தான் இருக்கின்றது

Chandran says :

Story is very thrilling

Parkavi says :

Good chittapa

Ravindran says :

சிலிர்க்கவைக்கும் சிவப்புகண்கள் நடந்தகதையாகயிருப்பின் மிகவும் பாவப்பட்ட சுரங்கத்தொழிலாளிகள் உலகெங்கும் நம்பும் பேய் விஷயம் மெய்சிலிற்கின்றது

Shyamala Ranganathan says :

Very thrilling and at the same time very much afraid even to read it உலகம் எப்படியெல்லாம் இருக்கிறது

துரைராஜ் says :

பேய் படம் பார்த்த பயம் படித்தவர்களுக்கு ஏற்படும் என்பதில் ஐயமில்லை. சிவா நான் உங்கள் கதைகளை விரும்பிப் படிப்பவன். கீழ்க்கண்ட இணைப்பில் நீங்கள் எழுதும் கதைகளை படித்து வருகிறேன். https://melbournesivastories.wordpress.com/ வாழ்த்துக்கள் சிவா.

vaidy says :

அருமையான சரளமான குழப்பம் இல்லாத நீரோடை போன்ற எழுத்து நடை. உங்களுடைய எழுத்து எங்களை அந்த இடத்திற்கே அழைத்து செல்கிறது. இது போன்று நீங்கள் நிறைய எழுத வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :