• SPARKLES | மினுமினு

திருச்செந்தூர் திருத்தல தீர்த்தக் கிணறுகள்!


கலா, தென்காசி

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் திருச்செந்தூரில் ‘‘காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களும்’’ இந்தத் தலத்தின் தீர்த்தமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இவற்றில் கந்த புஷ்கரிணி எனப்படும் நாழிக் கிணற்றில் மட்டுமே பக்தர்கள் நீராடி வருகிறார்கள். கடற்கரையில் கோயிலுக்கருகில் தெற்கே நாழிக்கிணறு உள்ளது. பெரிய கிணற்றுக்கு உள்ளே ஒரு சிறிய கிணறாக ஒரு சதுர அடிப் பரப்பும், ஏழு அடி ஆழமும் உள்ள இந்த தீர்த்தம், உப்பு உவர்ப்பு அற்ற நந்நீர் ஆகத் திகழ்கிறது. சமுத்திரக் கரையோரம் இப்படி இனிய நீராக அமைந்துள்ளது.

கந்தப் பெருமானின் அருளால் திகழும் இக்கிணற்றில் நீராடுபவர்கள் சகல நன்மைகளுடன், உடல் நலனையும் பெறுவார்கள்.

கடற்கரையில் அமைந்திருந்த மேலும் இருபத்து மூன்று தீர்த்தக் கிணறுகள் மணல் மூடித் தூர்ந்து விட்டன. அந்தத் தீர்த்தக் கட்டங்களைக் குறிப்பிடும் கல்வெட்டுகளும் மறைந்து விட்டன.

சூரபதுமனுடன் போர் முடிந்த பின்பு தனது படைவீரர்களுக்கு தீராத தாகம் ஏற்படவே முருகன் தனது வேலால் கிணறு ஒன்றை உருவாக்கினார். பதினாட்கடிச் சுற்றளவு கொண்ட இந்தச் சதுரமான கிணற்றின் நீர் கருகிய நிறத்திலும் உப்பாகவும் இருக்கும். இந்தக் கிணற்றின் உள்ளேயே மற்றொரு கிணறு உள்ளது. ஒரு அடி மட்டுமே உள்ள இந்தக் கிணற்றின் நீர் தௌிவாகவும் மிகவும் சுவையுடனும் இருக்கும். இருவேறு சுவை கொண்ட ஒரு கிணற்றுக்குள் மறுகிணறு அதிசயத்திலும் அதிசயம் அல்லவா.

இந்த ஆலயத்தைச் சுற்றி கடலோரம் அமைந்துள்ள இருபத்திநான்கு தீர்த்தக் கட்டங்கள் என்னென்ன என்பதையும், அவற்றின் சிறப்புகளையும் காண்போம்.

1. முகாரம்ப தீர்த்தம் – இதில் மூழ்குவோர் கந்தக் கடவுளின் கருணை அமுதத்தைப் பருகுவர்.

2. தெய்வானை தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் ஆடை அணிகலன், போஜனம், தாம்பூலம் பரிமளம் பட்டு பூ அமளி என்கிற இன்பத்தைப் பெறுவர்.

3. வள்ளி தீர்த்தம்: ஒருமையுள்ளத்துடன் பிரணவ சொரூபமாய் பிரகாசிக்கின்ற கந்தப் பெருமானின் திருவடித் தாமரையை தியானிக்கும் ஞானம் கொடுக்கும்.

4. லட்சுமி தீர்த்தம் – இதில் மூழ்குவோர் குபேர செல்வம் பெறுவர்.

5. சித்தர் தீர்த்தம் – காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்கள் நீங்கி முக்திக்குத் தடையாக நிற்கும் உடல் உலக பைசாசு என்கிற பகைகளை விலக்கி முக்திவழியை நாடச் சொல்லும்.

6. திக்குபாலகர் தீர்த்தம் – கங்கை, யமுனை, காவிரி முதலிய தீர்த்தங்கள் கொடுக்கும் பலனைத் தரும்.

7. காயத்ரி தீர்த்தம் – பல்வேறு வேள்வி செய்த பலன்கிட்டும்.

8. சாவித்திரி தீர்த்தம் – உமாதேவியை பூஜித்த பலன் கிட்டும்.

9. சரஸ்வதி தீர்த்தம் – சகல ஆகம புராண அறிவு கிட்டும்.

10. ஐராவத தீர்த்தம் – சந்திரபதாகை முதலிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.

11. வயிரவதீர்த்தம் – பல புண்ணிய நதிகளில் நீராடிய பலன்.

12. துர்க்கை தீர்த்தம் – துன்பம் நீங்கி நன்மை கிட்டும்.

13. ஞான தீர்த்தம் – ஞான அறிவு கிட்டும்.

14. சத்தியதீர்த்தம் – சித்தத்தை நன்னெறியில் நிற்கச் செய்யும்.

15. தருமதீர்த்தம் – தேவாமிர்தம் மங்களகரம் தரும்.

16. முனிவர் தீர்த்தம் – ஜகத் ரட்சகனை தரிசித்த பலன் தரும்.

17. தேவர் தீர்த்தம் – காமகுரோதலோபம், மோகம் போன்ற ஆறு குற்றங்கள் நீக்கி ஞான அமுதம் நல்கும்.

18. பாவநாச தீர்த்தம் – சாபம் நீங்கும். புண்ணியம் ஓங்கும்.

19. கந்தபுட்கரிணி தீர்த்தம் என்ற நாழிக்கிணறு – சந்திர சேகர சடாதரனுடைய திருவடியை முழமிசை சூடும் மேன்மை கிட்டும்.

20. கங்கா தீர்த்தம் – பிறவிக் கடலின் தெப்பமாய் விளங்கி முக்தி நெறிகாட்டும்.

21. சேது தீர்த்தம் – பாதகம் நீக்கி நன்மை கொடுக்கும்.

22. கந்தமாதன தீர்த்தம் – பாவங்கள் போக்கி பரிசுத்தம் தரும்.

23. மாதுரு தீர்த்தம் – அன்னை போன்று அன்பு காட்டி அருளாசி கிடைக்கும்.

24. தென்புலத்தார் தீர்த்தம் – இதில் குளித்து முன்னோருக்கு எள் நீர் இறைக்க, இம்மை மறுமை சிறந்து விளங்கும். செந்திபாண்டவன் திருவருட்கரந்து வாழும் பதம் தருவார்.

இவை குறித்து ஒரு பாடலாவது:–

1. நாழிக்கிணறுதரும் நல்லதீர்த்தம் அருள்

நாதனின் மகிமையைப் பகரும்

ஆழிக் கடலருகில் அதனின் சுவை யூட்டும்

நீரும் நித்தமும் தொடரும்

வாழிவாழி எங்கள் முருகன் வாழி என

வாழ்த்திட நாட்டம் வளரும்

போழிள மதி வைத்த புண்ணியன் புதல்வனைப்

போற்றிடப் பேரருள் வளரும்

.

2. கந்தபுஷ்கரிணி தீர்த்தம் நாமமொரு

கிணற்றினுள் கிணறு அதிசயம்

எந்த நாட்டவரும் எங்கும் காணாத

நாழிக்கிணறு அது பரிசயம்

கந்தன் கடலருகில் உப்புச் சுவையுடன்

பதினான் கடிச் சுற்றில் கிணறு

அந்தக் கிணற்றின்உள் ஓரடிச் சுற்றளவில்

தீர்த்தச் சுவை நாழிக்கிணறு!

.

3. தீர்த்தக் கட்டங்கள் இருபத்தி நான்குடன்

திகழும் திருச்செந்தூர் பழங்கதை

ஆர்த்த பிறவித்துயர் கெடநாம் ஆர்த்தாடும்

தீர்த்தன் திருமுருகன் நம் துணை

பார்க்கும் புஷ்கரிணி கந்த புஷ்கரிணி

நாழிக்கிணறு சுவை தீர்த்தமன்றோ!

தீர்க்கும் பழவினையை நீக்கும் நோய் நொடியை

காக்கும் ‘‘கர்மவினை தாக்கமின்றி!’’

.

4. பூமியை ஊடுருவி புகைப்படம் எடுத்திடும்

காலத்தை முருகன் அருள்வான், சிவ

சாமியின் அருளால் இருபத்து நான்கு

தீர்த்தக் கட்டங்கள் தௌிவுறும்

தாமிரத் தகடுகள் ஏடுகள் வாசகங்கள்

சாட்சிகள் எவையும் தேவையில்லை

நேமிதப் பெயர்கள் மூவெட்டு மட்டும்

சாட்சியாய் உள்ளது காண்பீர்!

.

5. கந்தபுஷ்கரிணி தீர்த்தம் சிரசில்பட

சந்திரசேகர சடாசரன் தன்

அந்தத் திருவடியை முடிதனில் சூடிடும்

பாக்கியம் பரவிடும் நிலவிடும்

முந்தும் பிறவிக்கடல் தெப்பமாய் நின்று

முக்திதரும் கங்கா தீர்த்தம்

கந்தமாதன தீர்த்தம் உடம்பில் பட

பாவம் தொலைந்திடும் சுத்தம்

.

6. பாதகம் நீக்கிடும் பாவங்கள் போக்கிடும்

சேதுதீர்த்தம் பரி சுத்தம்

மாதுரு தீர்த்தம் மூழ்கிடும் மாந்தர்க்கு

பெற்றவள் தருமருள் போலாசி கிட்டும்

மாதர்கள் மூத்தோர் தரும் சாபம் நீங்கிட

பாபநாச புண்ய தீர்த்தம்

தீதுநெறிநீங்கி நன்னெறி படர்ந்திட

சத்திய முத்திரைத் தீர்த்தம்.

.

7. ஆறுகுற்றங்கள் அறுபட விடுபட

அற்புதம் தேவர் தீர்த்தம்

மாறுபாடற்ற கருணா மிர்த்தம்

முருகனின் முகாரம்ப தீர்த்தம்

சோறுமணம் கமழும் தேவாமிர்தம்

தர்மதீர்த்தம் எனும் பெயராம்

வேறுவேறு பல புண்ணிய நதிநீர்

ஆடிய பலன் வயிரவ தீர்த்தம்

.

8. ஆடை அணிகலன் பட்டு பரிமளம்

போஜனம் தாம்பூலம் பூஅமளி

சோடை போகாது தந்திடும் நீராட

தெய்வயானை அருட் தீர்த்தம்

பீடை குருநிந்தை காமம் கள்ளுண்ணல்

முப்பெரும் பாதகம் சோம்பல்

கேடு பகை களவு நீக்கி சித்தத்தை

தௌியவைக்கும் சத்திய தீர்த்தம்

.

9. காமம் வெகுளி மயக்க முக்குற்றங்கள்

காயம் உலக பைசாசு பகைகள்

நாமம் ‘முருகா’ உரைத்திட விலகிடும்

முக்தியைத் தந்திடும் சித்தர் தீர்த்தம்

ஆமாம் குபேர செல்வவளனைத்தரும்

நினைத்திட ஸ்ரீலக்ஷ்மி தீர்த்தம்

பாமரன் பேசிடும் சக்தி தந்திடும்

ஆகமபுராண சரஸ்வதி தீர்த்தம்

.

10. ஆகம சேது தீர்த்தமெனத்திகழ்ந்து நம்

பாதகம் களைந்து நன்மைதரும்

ஏழ்கடல் கடைந்த தேவாமிர்தம் என

இளமை தரும் தர்ம தீர்த்தம்

மூழ்கிட உலக ரட்சகன் உருவில்

முக்தி வித்து முனிவர் தீர்த்தம்

மூழ்கி எள் நீரிறைக்க முருக பதம் தரும்

தென்புலத்தார் தீர்த்தம்

.

11. சங்கத் தமிழ் முருகை கும்பிடும் ஞானத்தை

தருவது ஸ்ரீ வள்ளி தீர்த்தம்

கங்குல் பகல் முழுதும் வேள்வி செய்திட்ட

பலன்தரும் காயத்ரி தீர்த்தம்

பங்கினள் சங்கரன் உமையவள் மகிழ்ந்திட

பூஜித்த பலன் காயத்ரி தீர்த்தம்

எங்கும் பரந்தோடும் நதிகளுக்கிணையாம்

திக்குபாலகர் தீர்த்தம்.
Comments

கே. அம்புஜவல்லி, புத்தூர், 620017 says :

மகான்களின் கையெழுத்தைக் கண்டு வியந்தேன். "ராமாநுஜன் " என்று ஸ்வாமி கையெழுத்துட்டுள்ளதை கண்டு மனம் பூரிப்படைந்தேன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :