• SPARKLES | மினுமினு

தமிழகத்தின் முதல் பெண் ஓதுவார் சுஹாஞ்சனா!


- சாந்தி கார்த்திகேயன்.





தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில் ஓதுவாராக சுஹாஞ்சனா பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 14) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆகம விதிகளில் பயிற்சி பெற்ற தலித் மாணவர்கள் உள்பட 58 பேரை அர்ச்சகர்களாக நியமித்து அவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். இதில், சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோயிலில் சுஹாஞ்சனா என்ற 27 வயது பெண்மணி ஓதுவாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுஹாஞ்சனா இப்பணிக்கு தேர்வானது எப்படி?

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம்தான் எனது சொந்த ஊர். அப்பா, ஒரு தொழிற்சாலையில் வேலை பார்க்கிறார். உடன்பிறந்த அண்ணன் ஒருவர் இருக்கிறார். சிறு வயதிலேயே பக்திப் பாடல்கள் கற்கத் தொடங்கினேன். பத்தாம் வகுப்பு முடித்தவுடன், கரூரிலுள்ள அரசு இசைப் பள்ளியில் குமார சாமிநாத அய்யாவிடம் தேவாரம், திருவாசகம் பாடல்களைக் கற்றேன். பின்னர் தனியார் பள்ளி ஒன்றில் அறநெறி ஆசிரியராக ஐந்து வருடங்கள் பணிபுரிந்தேன். கோவையில் `மங்கையர்க்கரசியர் அறநெறி அறக்கட்டளை` சார்பில் பள்ளி மாணவர்களுக்கு அறநெறிகளையும் தேவாரம், திருவாசகம் பாடல்களைச் சொல்லிக் கொடுத்தோம். இதன்பிறகு திருமணம் ஆகி சென்னை வந்துவிட்டேன். இந்த நிலையில், ஓதுவார் பணிக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்து அறநிலையத்துறை அறிவித்தபோது, நானும் விண்ணப்பித்தேன். அதையடுத்து நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்று முதல்வர் கையால் பணி நியமனம் கிடைத்தது. இப்படியொரு வேலை கிடைக்கும் என நினைத்துப் பார்க்கவில்லை’’

-என்று மகிழ்ச்சியுடன் சொன்னார் சுஹாஞ்சனா.

கோயில்களில் ஓதுவார்களுக்கான பணிகள் என்ன?

’’கோயிலில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்த பிறகு பஞ்ச புராணங்களான தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம் ஆகியவற்றை கடவுள் முன்னால் பாடி விண்ணப்பம் செய்வது, பின்னர் அம்பாள் சந்நிதியில் அந்தாதி பாடுவது, முருகன் சந்நிதியில் திருப்புகழ் பாடுவது போன்றவை ஓதுவாரின் பணிகளாக உள்ளன. இறைவனைப் புகழ்ந்து பாடுவது இதன் நோக்கம். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் உள்ளிட்டவர்கள் பாடிய பாடல்களை கோயிலில் பாடுகிறவர்களை ஓதுவார்கள் என்கின்றனர்’’ என்றார் சுஹாஞ்சனா.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :