• தீபம் - ஆன்மீகம்

மன வேற்றுமை நீக்கும் ஸ்வர்ண கௌரி விரதம்!


- எம்.கோதண்டபாணி

ஒருவர் ஜாதகத்தில் சுக்ர பகவான் நீசமடைந்திருந்தாலோ, தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்றிருந்தாலோ அல்லது அஸ்தமனமாகியிருந்தாலோ ஏற்படும் தோஷங்களுக்கு ஸ்ரீ ஸ்வர்ண கௌரி பூஜை செய்வது மிகச் சிறந்த பரிகாரமாகும். ஆவணி மாதம் சுக்லபட்ச திருதியையான இன்று (11.8.2021) மேற்கொள்ளப்படுவது ஸ்வர்ண கௌரி விரதமாகும். இந்த விரத மஹிமை ஸ்காந்த புராணத்தில் ஸூத பௌராணிகர் திருவாய்மொழியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ கௌரி தேவியின் விக்ரஹத்தையோ அல்லது கலசத்தில் தேவியை ஆவாஹணம் செய்தோ அலங்கரித்து வழிபடுவது சிறப்பு. சிவனாரும் பார்வதி தேவியும் இணைந்திருக்கும் படத்தை வைத்து பூஜிப்பதும் வழக்கத்திலிருக்கிறது.

மாக்கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில், அம்பிகையை அலங்கரித்து வைக்க வேண்டும். அம்பிகையை தங்க ஆபரணங்களால் அழகுற அலங்கரிப்பது விசேஷம். இதனால் குடும்பத்தில் தங்கம் வாங்கும் வசதி பெருகும். மண்டபம் கிழக்குப் பார்த்து இருக்க வேண்டும். வடக்கு நோக்கி அமர்ந்து பூஜிக்க வேண்டும். அம்பிகையின் திருமுன் இருபுறமும் விளக்குகள் ஏற்ற வேண்டும். வலப்புறம் நெய் தீபமும், இடப்புறம் நல்லெண்ணெய் தீபமும் ஏற்ற வேண்டும்.

முதலில் விக்னேஸ்வர பூஜையைச் செய்து விட்டு, அம்பிகைக்கு ஷோடசோபசார பூஜை செய்ய வேண்டும். தேவியின் ஒவ்வொரு அங்கத்தையும் பூஜித்து, பின் பதினாறு முடிச்சுக்களிட்ட நோன்புச் சரடுகளுக்கு பூஜை செய்யவும். பின் அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சிக்க வேண்டும். தேவிக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வது உசிதம்.

பூஜையின் நிறைவில் கைநிறையப் பூக்களை எடுத்துச் சமர்ப்பித்து, பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து நோன்புச் சரடைக் கட்டிக் கொள்ளவும். பின் தேவிக்கு, இரு நெய் தீபங்களை ஆரத்தி நீரின் நடுவில் ஏற்றி வைத்து ஆரத்தி காண்பிக்கவும். பதினாறு சிறு மாவிளக்குகள் செய்து, நடுவில் தீபம் ஏற்றி அவற்றை ஒரு தட்டில் வைத்து சுற்றிக் காண்பிப்பது சிறப்பு.

பிறகு சுமங்கலிகளுக்கு உணவளித்து, பழம், தாம்பூலம் அளிக்க வேண்டும். பகல் முழுவதும் விரதமிருந்து இரவு பிரசாதம் மட்டும் உண்பது சிறப்பு. முடியாதவர்கள் இடையில் பலகாரம் சாப்பிடலாம்.

மறு நாள், தேவிக்கு சுருக்கமாக புனர் பூஜை செய்ய வேண்டும். அதாவது தேவிக்கு, தூப தீபம் காட்டி, இயன்ற நிவேதனம் செய்து, கற்பூரம் காட்டி, பூக்கள் சமர்ப்பித்து வணங்கவும். பின், தேவியைத் தன் இருப்பிடம் எழுந்தருளப் பிரார்த்தித்து, பிரதிமை அல்லது கலசத்தை சிறிது வடக்காக நகர்த்தி வைக்கவும். கலசத்தில் அணிவித்த நகைகளை எடுத்து, சிறிது நேரம் அணிந்து விட்டு பெட்டியின் உள்ளே வைக்கலாம்.

ஒரு முறை கந்தப் பெருமான், இந்த விரதம் குறித்து சிவபெருமானிடம் கேட்க, அதற்கு பதிலாக அவர் அருளியதைக் காண்போம்.

முன்பொரு காலத்தில் சரஸ்வதி நதி தீரத்தில், ‘விமலம்’ என்ற புகழ் பெற்ற நகரம் இருந்தது. அதை சந்திரபிரபன் என்ற அரசன் சிறப்புற ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு இரு மனைவியர். அவர்களுள் முதல் மனைவியையே அந்த அரசன் வெகு பிரியமாக நடத்தி வந்தான்.

ஒரு நாள் அந்த அரசன் வேட்டையாட கானகம் சென்றபோது, அங்குள்ள ஒரு குளக்கரையில் அப்ஸரஸ்கள் ஒரு விரதத்தை அனுஷ்டிக்கக் கண்டான். அவர்களை அணுகி, அந்த விரதம் குறித்தும் அதன் பலன்கள் குறித்தும் கேட்டான். அதற்கு அவர்கள், ‘இது ஸ்வர்ண கௌரி விரதம். இந்த விரதத்தை பதினைந்து ஆண்டுகள் முறையாக அனுஷ்டிப்பதால் எல்லா நலன்களும் உண்டாகும்’ என்று கூறினர்.

அதை கவனமாகக் கேட்ட அரசன், தானும் அந்த விரதத்தில் பங்கு கொண்டு வழிபட்டு, பதினாறு முடிச்சுக்கள் கொண்ட நோன்புச் சரடைக் கையில் கட்டிக் கொண்டான். அரண்மனைக்குத் திரும்பியதும், தனது ராணிகளிடம், தான் அனுஷ்டித்த விரதத்தைப் பற்றிக் கூறினான்.

முதல் மனைவி இதைக் கேட்டு சினம் கொண்டாள். அரசனின் கையில் கட்டியிருந்த நோன்புக் கயிற்றை அறுத்தெறிந்தாள். அது, அரண்மனைத் தோட்டத்திலிருந்த ஒரு காய்ந்த மரத்தின் மீது விழுந்தது. உடனே, அந்த மரம் துளிர்க்கத் துவங்கியது. இதைக் கண்டு அதிசயித்த அரசனின் இரண்டாவது மனைவி, உடனே அந்த நோன்புக் கயிற்றை எடுத்துத் தன் கையில் கட்டிக்கொண்டாள். அதைக் கட்டிக்கொண்ட உடனே, கணவனின் அன்புக்குரியவளாகி விட்டாள்.

முதல் மனைவியோ, அகம்பாவத்தால் தான் செய்த தவறுக்காக கணவனால் வெறுத்து ஒதுக்கப்பட்டாள். அவள் கானகம் சென்று, தான் செய்த தவறுக்காக மனம் வருந்தி, பல்வேறு இடையூறுகளுக்கிடையே கௌரி தேவியை துதித்து வழிபட்டாள். இதனால் மனம் மகிழ்ந்த தேவி, அவள் முன் தோன்றினாள். அம்பிகையை தரிசித்த ராணி, மனம் உருக பலவாறு துதித்து, கௌரி பூஜையையும் விரதத்தையும் அனுஷ்டித்து, தேவியிடம் சௌபாக்கிய வரம் பெற்று நாடு திரும்பினாள்.

தேவியின் அருளால், அரசன் அவளைப் பிரியமுடனும், மதிப்புடனும் வரவேற்றான். அவளும், முன்போல் சகல சுகங்களையும் அனுபவித்து சிறப்புற வாழ்ந்தாள்.

இந்த விரதத்தை காலை அல்லது மாலை வேளையில் அனுஷ்டிக்கலாம். மாலை வரை உபவாசமிருந்து, சூரிய அஸ்தமனமாகும் சமயம், அனுஷ்டிப்பதே சிறப்பு. தம்பதிகளுக்குள் ஏற்படும் ஒற்றுமைக் குறைவு, பிரிவு, கணவன், மனைவியின் உடல் ஆரோக்கியம் பாதித்தல் போன்ற பிரச்சனைகள் நீங்க ஸ்ரீ கௌரி தேவியை விரதமிருந்து பூஜிப்பது மிகவும் அவசியமாகும்.

Comments

பொ.பாலாஜிகணேஷ் says :

மன வேற்றுமை நீக்கும் ஸ்வர்ண கௌரி விரதம்... கட்டுரை படித்தேன் பல அறியாத விஷயங்களை அறிந்து கொண்டேன் மிக்க நன்றி எம்.கோதண்டபாணி அவர்களுக்கு

பா.கவிதா says :

மன வேற்றுமை நீக்கும் ஸ்வர்ண கௌரி விரதம் பற்றி கல்கி ஆன்லைனில் படித்த பிறகுதான் நிறைய விஷயம் தெரிந்து கொண்டேன் மகிழ்ச்சி நன்றி

பா.பரத் says :

மன வேற்றுமை நீக்கும் ஸ்வர்ண கௌரி விரதம். பற்றி நிறைய தெரிந்து கொண்டோம் கட்டுரை ஆசிரியர் எம்.கோதண்டபாணி அவர்களுக்கு மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எம். வசந்தா. says :

கவுரி விரத பூஜை பலன்கள் பற்றி தெளிவாக எடுத்துரைத்ததற்கு நன்றிகள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :