• SPARKLES | மினுமினு

குரு பெயர்ச்சி 2020 : பலன்கள், பரிகாரங்கள்!


கணிப்பு: பாலஜோதிடர் வெங்கடேச தீட்சிதர், சிதம்பரம்

மங்கலகாரகனான ஸ்ரீ குரு பகவான் நிகழும் சார்வரி வருஷம் ஐப்பசி மாதம் 30-ம் தேதி, அதாவது ஞாயிற்றுக்கிழமை (15.11.2020) வாக்கியப் பஞ்சாங்கப்படி தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இரவு 9.50 மணியளவில் பெயர்ச்சியாகிறார். 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தனுசு ராசியில், கேதுவுடன் இணைந்து சஞ்சரித்து வந்த குரு பகவான், செப்டம்பர் 13ஆம் தேதி முதல் தனுசு ராசியில் நேர் கதியில் பயணம் செய்து, தற்போது மகர ராசிக்குச் செல்கிறார். இந்த குரு பெயர்ச்சி மற்றும் பார்வையால் சில ராசிக்காரர்கள் அதீத நன்மைகளையும் சில ராசிக் காரர்கள் சுமாரான பலன்களையும் பெறப் போகிறார்கள்.

இனி, ஒவ்வொரு ராசிக்குமான குரு பெயர்ச்சி பலன்களையும் பரிகாரங்களையும் தெரிந்து கொள்வோம்.

.

மேஷம் :

மேஷ ராசி வாசகர்களே! இந்தப் பெயர்ச்சியில் ஆறாம் வீட்டில் குருவின் பார்வை படுவதால் கடன் பிரச்னைகள் நீங்கும். எதிரிகள் தொல்லை ஒழியும். ‘பத்தில் குரு வந்தால் பதவியில் மாற்றம் வரும்’ என்பர். அலுவலகத்தில் பணி புரிவோருக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். சொத்து மற்றும் வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

குருவின் பார்வை உங்கள் ராசிக்கு இரண்டு, நான்கு மற்றும் ஆறாம் வீடுகளின் மீது விழுவதால், குடும்பம் குதூகலமாகும். கணவன், மனைவிக்குள் இருந்த மனவேற்றுமைகள் மாறி ஒற்றுமை ஏற்படும். மேஷத்துக்கு குரு பத்தாம் இடத்திலும் 11ஆம் இடமான லாப ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார்.

பெண்மணிகள் சிலருக்கு அதிர்ஷ்ட யோகம் உண்டு. மனக் கசப்புகள் நீங்கி கணவன், மனைவி ஒற்றுமை மேலோங்கும். பொன், பொருள், ஆபரண சேர்க்கை உண்டாகும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகமும் ஏற்படும்.

பரிகாரம் : நவகிரஹ சன்னிதியில் அருளும் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி, முல்லை பூவால் அர்ச்சனை செய்தால் நல்ல கார்யங்கள் நடைபெறும்.

.

ரிஷபம் :

ரிஷப ராசி வாசகர்களே! இதுநாள் வரை இருந்த பண கஷ்டம், மனக்கஷ்டங்கள் இந்த குரு பெயர்ச்சிக்குப் பிறகு நீங்கும். இது வரை அஷ்டம குருவாக இருந்து வந்த குரு, இனி பாக்ய ஸ்தான குருவாக ஒன்பதாம் வீட்டுக்குச் செல்கிறார். வீண் பண விரயங்கள் இனி இல்லை. தடை மற்றும் தாமதங்கள் இனி முடிவுக்கு வரும். கடன் பிரச்னைகள் நீங்கும்.

மகர ராசியில் இருந்து குரு பகவானின் பார்வை ரிஷப ராசிக்குப் படுகிறது. அடுத்த ஆண்டு, அதாவது (27.12.2020 சனி பெயர்ச்சியன்று) ஒன்பதாம் வீட்டில் குரு மற்றும் சனி பகவான் இணைவதால் வேலையின்றி தவிப்போருக்கு நல்ல வேலை கிடைக்கும்.. தடைப்பட்ட காரியங்கள் தடைகள் நீங்கி சுபமாக நடைபெறும்.

பெண்களுக்கு, ‘வாக்கில் இனிமை இருந்தால் வாழ்க்கையில் சுகம் உண்டாகும்’ மொத்தத்தில், உங்கள் ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி பெருவாரியான சுபப் பலன்களையே கொடுப்பதாக அமைகிறது.

பரிகாரம் : பிரம்மாவுக்கு நெய் தீபம் ஏற்றி, வெண் தாமரை மலர்களால் வழிபட, வாழ்வில் பல நன்மைகளைக் காணலாம்.

.

மிதுனம் :

மிதுன ராசி வாசகர்களே! உங்கள் ராசிக்கு ஏழு மற்றும் பத்துக்கு அதிபதியான குரு பகவான், இந்தப் பெயர்ச்சியில் அஷ்டம ஸ்தானத்துக்குச் செல்கிறார். குரு பகவான் எட்டில் பயணம் செய்வதால் சிறு சிறு பிரச்னைகள், பாதிப்புகள் ஏற்படக்கூடும். குரு பார்வை உங்கள் ராசிக்கு பன்னிரெண்டு, இரண்டு மற்றும் நான்காம் வீடுகளின் மீது படுகிறது. அதனால் நீங்கள் மிகவும் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம். எந்தக் கார்யம் செய்வதற்கு முன்பும் அதை ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்வது நல்லது.

ஐந்து மாதங்கள் நெருக்கடிகளைச் சந்தித்தாலும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் குரு பகவான் அதிசாரமாக கும்ப ராசிக்குச் செல்வது, உங்களுக்கு பல்வேறு நன்மைகளைச் செய்யும். இதனால் பல நெருக்கடிகள், பிரச்னைகள் உங்களை விட்டு விலகும்.

நிதி நிலைமை நன்றாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். நீதிமன்ற வழக்கு வியாஜ்யங்கள் நல்ல முடிவுக்கு வரும். தந்தை வழி பூர்வீக சொத்துக்கள் உங்களுக்குக் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடமாற்றம் மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். திருமணமாகி குழந்தை பாக்கியத்துக்காகக் காத்திருப்பவர்களுக்கு நிச்சயம் குழந்தைப் பேறு உண்டாகும். வண்டி வாகனத்தில் செல்லும்போது நிதானத்தையும் கவனத்தையும் கடைபிடிப்பது நலம் சேர்க்கும்.

பரிகாரம் : சிவபெருமானுக்கு மாலை வேளையில் நெய் தீபம் ஏற்றி வைத்து, வில்வ தளங்களால் அர்ச்சித்து வழிபட்டு வர, வேண்டுதல்கள் இனிதே நிறைவேறும்.

.

கடகம் :

கடக ராசி வாசகர்களே! உங்கள் ராசிக்கு குரு பகவான் இதுநாள் வரை ஆறாம் வீட்டில் பிரவேசித்தார். தற்போது அவர் ஏழாம் வீட்டுக்கு பெயர்ச்சியாகி, உங்கள் ராசியை பார்வையிடுகிறார். உங்களுக்கு இது சிறப்பான காலகட்டம். சனி பகவான் அஷ்டமத்தில் இருந்தாலும், குரு பார்வை சஞ்சாரத்தினால் உங்களுக்கு நிறைய நன்மைகள் நடைபெற உள்ளது. குறிப்பாக, உங்களது பணத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

இழந்த சொத்து, சுகம் அனைத்தையும் நீங்கள் திரும்பப் பெறும் காலம் வந்து விட்டது. சுபமான செய்திகள் உங்களைத் தேடி வரும். குரு பகவான் உங்கள் ராசிக்கு ஆறு மற்றும் ஒன்பதுக்கு அதிபதி என்பதால் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துக் கார்யங்களிலும் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதிசாரமாக குரு பகவான் கும்ப ராசிக்கு செல்வதால், உங்கள் ராசிக்கு அது எட்டாம் வீடு என்றாலும், குரு பார்வையால் உங்களுக்கு நன்மையே நடைபெறும். பணத்தேவை சுமாராக இருந்தாலும், சில நேரங்களில் பொருளாதார சிக்கல்கள் ஏற்படக்கூடும்.

பெண்களுக்கு கஷ்டங்கள் விலகி, வாழ்க்கை இனிதாக அமையும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் உடல் நலத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பரிகாரம் : சிவன் கோயில்களில் அருள்பாலிக்கும் பைரவருக்கு செவ்வரளி மலர் கொண்டு பூஜித்து வந்தால் நினைத்த கார்யத்தை நினைத்தபடி நடத்தித் தருவார்.

.

சிம்மம் :

சிம்ம ராசி வாசகர்களே! குரு பகவான் உங்கள் ராசிக்கு ஐந்து, எட்டாம் வீட்டுக்கு அதிபதி. இப்போது அவர் ஆறாம் வீட்டுக்குச் சென்று நீசம் பெற்று சஞ்சரிக்கிறார். இந்த வருடம் டிசம்பர் மாதம் நிகழப்போகும் சனி பெயர்ச்சியில் சனி பகவான் ஆறாம் வீட்டுக்கு ஆட்சி பெறுகிறார். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் படுகிறது. இதனால் சுப கார்யங்களுக்காகக் கடன் வாங்க நேரிடும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும்.

நீண்ட நாட்களாக இருந்து வந்த பொருளாதாரப் பிரச்னைகள் நீங்கும். வேலை விஷயமான வெளியூர் பயணங்களால் நன்மைகளே நடைபெறும். குடும்ப உறவில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். நீசமான குரு நீசபங்க ராஜயோகம் பெற்று அமர்கிறார். இதனால் தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.

எதிர்பாராத சுப விரயச் செலவுகள் உண்டு. நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பும் தேடி வரும். குடும்பம் சந்தோஷத்தில் குதூகலமாக இருக்கும். பண வருவாய்க்குக் குறைவிருக்காது. சொத்து சேர்க்கை ஏற்படும். சிலர் புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் குரு பகவான் அதிசாரமாக கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகி உங்க ராசியை பார்வையிடுகிறார். இதனால் எதிர்பார்க்காத யோகம் ஏற்படும்.

பெண்களுக்கு, கணவர் மற்றும் மூத்தோர்களின் பாராட்டு உண்டு. ஆடை, ஆபரண சேர்க்கை, வண்டியில் செல்லும்போது, மின்சார சாதனங்களைக் கையாளும்போது கவனமுடன் இருப்பது அவசியம்.

பரிகாரம்: தினமும் அதிகாலை சூரிய வழிபாடு மற்றும் குருமார்களை வழிபட்டு வருவதால் உங்கள் வாழ்வில் அதிக பலன்களைக் காணலாம்.

.

கன்னி :

கன்னி ராசி வாசகர்களே! உங்கள் ராசிக்கு இந்தப் பெயர்ச்சியில் குரு பகவான் பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். குரு பகவான் உங்கள் ராசிக்கு நான்கு மற்றும் ஏழாம் வீட்டுக்கு அதிபதி. இந்த வருடம் டிசம்பர் மாதம் நிகழப்போகும் சனி பெயர்ச்சியில், சனி பகவான் ஆறாம் வீட்டில் ஆட்சி பெறுகிறார். இதனால் உங்களுக்கு நீச பங்க ராஜயோகம் ஏற்படுவதால் திருமண யோகம் கைகூடி வரும். குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். மனக்கவலைகள் நீங்கி, உற்சாகம் அதிகரிக்கும். தடைப்பட்டு வந்த கார்யங்கள், தடை உடைத்து, கைகூடி வரும். பொருளாதாரத் தடைகள் நீங்கும்.

குரு பகவான் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கும்ப ராசியில் அதிசாரமாக சஞ்சரிக்கும்போது உத்தியோக உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தோஷ நிவர்த்திக்காக நீங்கள் மேற் கொள்ளும் பரிகாரங்கள் வெற்றி தரும்.

பெண்களுக்கு சந்தோஷத்தைத் தரும்படியான சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகளால் மதிப்பு, கௌரவம் கூடும்.

பரிகாரம் : அருகம்புல் கொண்டு தினமும் விநாயகப் பெருமானை வழிபாடு வர, நற்பலன்களைப் பெறலாம்.

.

துலாம் :

துலாம் ராசி வாசகர்களே! இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு நிறைய நன்மை களைத் தரப்போகிறது. சுக்ரன் உங்கள் ராசிக்கு அதிபதி ஆகையால். உடல் ஆரோக்கியம், செல்வம், செல்வாக்கு போன்றவற்றுக்குக் குறைவிருக்காது. தற்போது மூன்றாம் வீட்டில் மறைந்திருக்கிறார். நவம்பர் மாதம் முதல் இவர் நான்காம் வீட்டுக்குப் போகிறார். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு எட்டு, பத்து மற்றும் பன்னிரெண்டாம் வீடான விரய ஸ்தானத்தின் மீது படுகிறது.

குருவின் பார்வையால் உங்களுடைய தோஷங்கள், அவமானங்கள் அனைத்தும் நீங்கும். மன ரீதியான பிரச்னைகள் தீரும். கணவன் மனைவிக்குள் நிலவி வந்த மன வேற்றுமைகள் மறையும். பணியிடத்தில் இருந்த வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். ஆனாலும், மற்றவரை நம்பி எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் குரு பகவான் அதிசாரமாக கும்ப ராசிக்கு செல்லும்போது, குருவின் சஞ்சாரப் பார்வையால் செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். திருமணம் மற்றும் சுபகார்யங்கள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு மேல் நேரம் கூடி வரும்.

பெண்கள் சங்கடங்கள் நீங்கி, சமாதானமாக இருப்பர். வேலையில் இருந்த சுணக்கங்கள் மாறி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உடல் நலத்தில் அலட்சியம் வேண்டாம்.

பரிகாரம் : பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றி, துளசியால் அர்ச்சனை செய்து வழிபட, வாழ்க்கையில் மேன்மை உண்டாகும்.

.

விருச்சிகம் :

விருச்சிக ராசி வாசகர்களே! இந்தப் பெயர்ச்சியில் குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் இருந்து, மூன்றாம் வீட்டுக்கு பயணம் செய்யப்போகிறார். இந்த வருடம் டிசம்பர் மாதம் நிகழப்போகும் சனி பெயர்ச்சியோடு உங்களது ஏழரை சனி முடிந்து, நிம்மதியான நிலையை அடைவீர்கள். சொத்து பிரச்னைகள் முடிவுக்கு வரும்.

குருவின் பார்வை ராசிக்கு ஏழாம் வீடு, ஒன்பது மற்றும் லாப ஸ்தானங்களின் மீது படுவதால் பண வரவு தடையின்றி கிடைக்கும். சுப காரியத் தடைகள் நீங்கும். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.

அடுத்த ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் குரு பகவானின் சஞ்சாரம் அதிசாரமாக கும்பத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் அனைத்து பாதிப்புகளும் நீங்கும். நிதி நிலைமை சுமார். தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கி லாபம் காணலாம். வாகனத்தில் செல்லும்போது கவனமுடன் இருப்பது அவசியம். இந்த குரு பெயர்ச்சியால் பலன்கள் உங்களுக்கு சுமாராக இருந்தாலும், பாதிப்புகள் அதிகம் வராது.

பெண்கள் குழந்தைப் பேற்றுக்காக மேற்கொள்ளும் சிகிச்சைகள் நல்ல பலனைத் தரும். குலதெய்வ வழிபாடு நன்மை தரும். பணியிடத்தில் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.

பரிகாரம் : வாசமுள்ள ரோஜா மலர்களைக் கொண்டு தேவி வழிபாடு செய்து வணங்கி வர, நன்மைகள் பலவற்றையும் பெறலாம்.

.

தனுசு :

தனுசு ராசி வாசகர்களே! உங்கள் ஜன்ம ராசியில் சஞ்சரிக்கும் ராசியாதிபதியான குரு பகவான், இனி மகர ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். குரு இரண்டாம் வீட்டுக்குப் போவது சந்தோஷமான விஷயம். அதேபோல், ஜன்ம ராசியில் இருந்த கேது, தற்போது பெயர்ச்சியாகி பன்னிரெண்டாம் வீட்டுக்குச் சென்று விட்டதும் நிம்மதியான விஷயம். குரு பகவான் இனி நீசமாகி குடும்ப ஸ்தானத்துக்குப் போகிறார்.

இதனால் குடும்பத்தில் நிலவி வந்த கஷ்டங்கள் தீரும். ஆறாம் வீட்டில் ராகு சஞ்சரிக்க, ராகுவின் மீது குருவின் பார்வை படுகிறது. இதனால் நீண்ட நாட்கள் தீர்க்க முடியாமல் இருந்த பிரச்னைகள் தீர்ந்து பண வரவு அதிகரிக்கும். உடல் உபாதைகள் நீங்கும்.

வாக்கு ஸ்தானத்தில் உள்ள குருவினால் நீங்கள் சொல்லும் சொற்கள் சபையேறும். வியாபாரம், தொழிலில் செய்யப்படும் முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். அஷ்டம ஸ்தான குருவின் பார்வையால் வறுமை நீங்கும். ஏழரை சனியால் உண்டான நெருக்கடிகள் இனி உங்களுக்கு இல்லை.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் குரு அதிசாரமாக மூன்றாம் வீட்டில் மறையப்போகிறார் அந்த காலகட்டத்தில் நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். என்றாலும், குருவின் பார்வையால் சந்தோஷமும், பண வரவும் தடைபடாது.

பெண்களுக்கு சொந்தங்களிடையே இருந்து வந்த மனக் கசப்புகள் மாறி, ஒற்றுமை ஏற்படும். பெரியோர் மற்றும் பெற்றோரின் ஆலோசனைகள் உங்களுக்கு நல்வழி காட்டும்.

பரிகாரம்: நெய் தீபம் ஏற்றி வைத்து வாசமுள்ள மல்லிகை மலரால் மஹாலக்ஷ்மி தாயாரை வழிபட்டு வர, வாழ்க்கை வளம் காணும்.

.

மகரம் :

மகர ராசி வாசகர்களே! உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் வீடான விரய ஸ்தானத்தில் இருந்த குரு பகவான் தற்போது பெயர்ச்சி ஆகிறார். உங்கள் ராசிக்கு மூன்று மற்றும் பன்னிரெண்டாம் வீட்டுக்கு அதிபதி குரு. இவர் இந்த வருடம் டிசம்பர் மாதம் நிகழப்போகும் சனி பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு வந்து சனியோடு இணைந்து சஞ்சரிக்கப்போகிறார். ‘ஜன்ம சனி வரும் நிலையில், ஜன்ம குரு வந்து என்ன செய்யப்போகிறார்?’ என்று சங்கடப்பட வேண்டாம்.

குரு ஜன்ம வீட்டுக்குள் வருவதால் கலக்கம் வேண்டாம். சிந்தனையில் தெளிவு பிறக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை படுவதால் புத்திர பாக்கியம் உண்டாகும். திருமணம் போன்ற சுப கார்யங்கள் கைகூடும்.

நீண்ட நாட்கள் இழுபறியாக இருந்த கார்யங்கள் தடைகள் நீங்கி, நடைபெறும். வேலையைப் பொறுத்தவரை புதிய முயற்சிகளைத் தற்காலிகமாகத் தள்ளிப்போடுவது நல்லது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் குரு அதிசாரமாக இடம் மாறி, உங்கள் ராசியை விட்டு இரண்டாம் வீட்டுக்கு நகரும்போது உங்களது சிக்கல்கள், சங்கடங்கள் அனைத்தும் நீங்கும்.

பெண்கள் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி உயரும் காலம். குழந்தைகள் மூலம் பெருமை வந்து சேரும்.

பரிகாரம்: ஸ்ரீ சுப்பிரமணியருக்கு நெய் தீபம் ஏற்றி, அரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட, மன நிம்மதியைப் பெறலாம்.

.

கும்பம் :

கும்ப ராசி வாசகர்களே! உங்கள் ராசிக்கு குரு பகவான் இரண்டு மற்றும் லாப ஸ்தானாதிபதி. பண வரவைக் கொடுப்பதில் குரு பகவானுக்கு நிகர் வேறு யாரும் இல்லை. மகர ராசியில் இருக்கும் குருவினால் உங்களுக்கு பண விரயம் அதிகரிக்கும். அதை புத்தி சாதுர்யத்தால் சுப விரயமாக மாற்ற வேண்டியது உங்களது திறமை.

குருவின் பார்வை நான்கு, ஆறு மற்றும் எட்டாம் வீடுகளின் மீது படுகிறது. சொத்து, சுகம் சேர்க்கை ஏற்படும். வாக்கு சாதுர்யம் ஏற்படும். எதிரிகள் தொல்லை ஒழியும். நீண்ட நாட்கள் உங்களை வருத்தி வந்த நோய்கள் அகலும். ஆயுள் விருத்தி அதிகரிக்கும்.

பெண்களுக்கு உண்டான தோஷங்கள் நீங்கும். தாலி பாக்கியம் அதிகரிக்கும். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் குருவின் பார்வை ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம், ஏழாம் வீடான களத்ர ஸ்தானம், ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் படுகிறது. அந்த காலகட்டத்தில் திருமணப் பேச்சுவார்த்தைகள் நடத்தலாம். புத்ர பாக்கிய யோகம் கை கூடி வரும். மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி மனிதர்களை புரிந்துகொள்ளும் ஒரு வாய்ப்பாக அமைகிறது.

பரிகாரம் : தினமும் வீட்டில் நெய் தீபம் ஏற்றி வைத்து, இந்திரனை பூஜித்து வந்தால் வேண்டும் வரங்களைப் பெறலாம்.

.

மீனம் :

மீன ராசி வாசகர்களே! உங்கள் ராசிக்கு அதிபதி குரு பகவான். இந்த குரு பெயர்ச்சி யில் அவர் லாப ஸ்தானமாகிய மகரத்துக்குப் பெயர்ச்சியாகிறார். இது, தொழில் மற்றும் வியாபாரங்கள் தொடங்க சரியான நேரம். அதிர்ஷ்டங்கள் நிறைந்த காலகட்டமாக இருக்கிறது. பண வரவுக்குக் குறைவிருக்காது. தொழிலில் செய்யப்படும் முதலீடுகள் லாபகரமாக இருக்கும்.

குருவின் பார்வை மூன்று, ஐந்து மற்றும் ஏழாம் வீடுகளின் மீது படுகிறது. இந்த குரு பார்வையால் சகோதரர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தைரியம், தன்னம்பிக்கை கூடும். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உற்சாகமாக செயலாற்றுவீர்கள். வருவாய்க்குக் குறைவிருக்காது. குடும்பத்தில் சந்தோஷமான சம்பவங்கள் நிகழும். திருமணமாகாத ஆண், பெண்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். அரசுப் பணி புரிபவர்களுக்கு விரும்பிய இடமாற்றம், ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கும். குழந்தைப் பேற்றுக்காகக் காத்திருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் குரு பகவான் அதிசாரமாக இடம் மாறி, கும்பம் ராசியில் விரய ஸ்தானமான பன்னிரெண்டாம் வீட்டுக்கு வருகிறார். இந்த நேரத்தில் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை சுப விரய செலவுகள் ஏற்படும். வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது.

பெண்களுக்கு நீண்ட நாட்கள் வருத்திய உடல் உபாதைகள் அகலும். மொத்தத்தில், உங்களுடைய எதிர்பார்ப்புகள், விருப்பங்களை நிறைவேற்றித் தரக்கூடிய குரு பெயர்ச்சியாக இது அமைகிறது.

பரிகாரம் : நந்திகேஸ்வரருக்கு நெய் தீபம் ஏற்றி வைத்து, அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்து வர, நல்ல பலன்களைக் காணலாம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :