• SPARKLES | மினுமினு

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: கலர்ஃபுல் நிறைவு விழா!


- சுபஸ்தினி





சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் டோக்கியோவில் ஜூலை 23ஆம் தேதி தொடங்கி, நேற்று (ஆகஸ்ட் 8) கலர்ஃபுல்லாக நிறைவடைந்தன. வண்ணமயமான விளக்குகள், வாண வேடிக்கைகள், கேளிக்கைகள், நடனம், இசை, சாகசங்கள் என்று ஜப்பானியர்கள் இந்த விழாவில் அசத்தி இருந்தனர்.

இந்தியா சார்பாக வெண்கலம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா நம் நாட்டு தேசியக் கொடி ஏந்தி நிறைவு விழா அணிவகுப்பில் பங்கேற்றார். இந்த டோக்கியோ ஒலிம்பிக் நிறைவு விழாவில் நடந்த சுவாரஸ்யமான சில விஷ்யங்கள்.

நிறைவு விழா நடந்த ஒலிம்பிக்ஸ் மைதானத்தின் தளம் பச்சைப் பசும்புல் தரையாக மாற்றப்பட்டிருந்தது. விளையாட்டு வீரர்கள் போர்க்களத்துக்கு சென்றது போல் போட்டிகளில் பங்கேற்று சோர்வுற்றவர்களுக்கு இந்த பச்சை மரகத புல்தரை மிகவும் மகிழ்ச்சியூட்டியது. ரிலாக்ஸ்டாக உணர வைத்தது.

கொரோனா காரணமாக இந்த நிறைவு விழாவில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. ஆனாலும் அந்த குறையே பார்வையாளர்கள் தெரியாத வகையில் ஒலிம்பிக் நிறைவு விழாவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. உலகெங்கிலும் உள்ள விளையாட்டு ரசிகர்களின் படங்கள் ஒரு பெரிய திரையில் காட்டப்பட்டது. இதற்கான காணொளிகளை அனுப்புவதற்கான இணைப்பை ஒலிம்பிக் கமிட்டி இணையம் மற்றும் சமூக ஊடகங்களில் ஏற்கனவே பகிர்ந்திருந்தது. ஆக்வே ரசிகர்கள் தம் வீட்டில் இருந்தபடியே ஒலிம்பிக் விழாவிலும் கலந்து கொண்ட மகிழ்ச்சியை அடைய முடிந்தது.

ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் பிறப்பிடமான கிரேக்க நாட்டை (கிரீஸ்) கௌரவிக்கும் வகையில், ஒலிம்பிக் கொடி மற்றும் ஜப்பான் தேசியக் கொடியுடன் கிரீஸ் தேசியக் கொடியும் ஒலிம்பிக் மைதானத்தில் ஏற்றப்பட்டது. பின்னர் அதனுடன் – அடுத்ததாக 2024-ல் ஒலிம்பிக் நடக்கவுள்ள பிரான்ஸ் கொடியும் ஏற்றப்பட்டது.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாரத்தான் போட்டிகளில் வென்றவர்களுக்கான பதக்கங்கள் இந்த நிறைவு விழாவில் வழங்கப்பட்டன. இப்படி ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வெற்றி நிகழ்ச்சி ஒன்றாக நடத்தப்படுவது, கோடைக்கால ஒலிம்பிக் வரலாற்றில் இதுவே முதல் முறை! மேலும் மாரத்தான் ஓட்டத்தில் வென்ற ஆண் மற்றும் பெண் ஆகிய இருவருமே கென்யா நாட்டுக்காரர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பேனர்களைப் பார்த்த பலருக்கும் ஒரு சந்தேகம் எழுந்திருக்கக் கூடும். அதில் `டோக்யோ ஒலிம்பிக் 2020` என்றே கணப்பட்டிருக்கும். அதற்கு ஒரு காரணம் உண்டு! கடந்த 2016-ம் ஆண்டுக்குப் பின் 2020-ல் நடந்திருக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டுக்குத் தள்ளி வைக்கப்பட்டன. எனினும் `டோக்யோ ஒலிம்பிக் 2020` என்றே இந்த ஒலிம்பிக் அலுவல் பூர்வமாக அழைக்கப்பட்டது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :