• GLITTERS | பளபள

வேண்டாம் இந்த அரசியல் வாரியம்!


- ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

தமிழ்நாடு பாடநூல் வாரியம் அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. திமுக அரசு தமிழகத்தில் பொறுப்பேற்ற கையோடு, தமிழ்நாடு பாடநூல் வாரியத்தின் தலைவராக பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி நியமித்தது. அதற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களும் எதிர்ப்புக் கணைகளும் கிளம்பின. பட்டிமன்றத்தில் பெண்களின் உடல் அமைப்புகளை உறுப்புகளை ஆபாசமாக விமர்சித்த லியோனிக்கு கல்விக் கழகத்தில் தலைவர் பதவியா என்று டாக்டர் ராமதாஸ் அறிக்கையை வெளியிட்டார். ஆனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதுபற்றி எல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. திண்டுக்கல் லியோனி தமிழ்நாடு பாடநூல் வாரியத் தலைவராகப் பதவியேற்றுக் கொண்டார். அதே சூட்டோடு உடனடியாக கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்ப்பேன் என்று அறிக்கை வெளியிட்டு தனது கட்சி விசுவாசத்தை காண்பித்தார்.

அடுத்து, பள்ளிப் பாடபுத்தகங்களில் சேர்க்க வேண்டியதும் நீக்க வேண்டியதுமான எத்தனையோ விஷய்ங்கள் இருக்க, லியோனி ஜாதி விஷயத்தைக் கயில் எடுத்து கொண்டார். பாட புத்தகங்களில் ஜாதிப் பெயர்களை நீக்குவதாகச் சொல்லி, பல பிரபலங்களின் பெயர்களிலுள்ள ஜாதிகளை நீக்கினார். அதாவது உ.வே.சாமிநாதயர் பெயர் உ.வே சாமிநாதர் என்றும் அவரது குருவான மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் பெயர் மீனாட்சி சுந்தரம் என்றும் இன்னும் பலரது பெயர்களும் மாற்றப்பட்டன. ஆனால் தொழிற்கல்வி உள்ளிட்ட மேற்படிப்புகளில் ஜாதி அடிப்படையில் ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு என்று ஜாதி அடிப்படையிலான அழுத்தம் கூடிக்கொண்டே போகிறதே.. அதைப்பற்றி பேச்சு எதுவும் இல்லை!

தமிழ்நாடு பாடநூல் வாரியத்தில் தலைவராக லியோனி நியமனமே சர்ச்சையாய் இருக்கும் நிலையில், மேலும் ஒரு சர்ச்சை எழுந்தது! அதாவது, பெண்கள் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டில் சிக்கிய சரவணன் என்ற வருமானவரி அதிகாரியை பாடநூல் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. தமிழ்நாடு பாடநூல் வாரியத்தில் பதவி கிடைக்க அடிப்படை தகுதி – அவர் பெண்களை அவதூறுப் படுத்தியிருக்க வேண்டும் என்று பலர் கேலி பேசும் நிலைக்கு ஆளாகிவிட்டது பரிதாபம்!

இப்படி வாரியம் என்கிற விஷயத்தை அறிமுகப்படுத்தியதே ஆரம்பத்தில் திமுக ஆட்சியின்போதுதான்! அதாவது சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் அல்லது போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்களை சமாதானப்படுத்த உருவாக்கப்பட்டதே வாரியம் என்கிற அமைப்பு! அப்படித்தான் தமிழ்நாடு பாடநூல் வாரியமும் உருவானது! அந்த வாரியத்தின் தலைவராக இதுவரை நியமிக்கப்பட்டவர்களின் பின்புலம் - மிகப்பெரிய கல்வியாளர் என்றெல்லாம் சொல்லும்படி இருக்காது முன்னாள் அமைச்சர் அல்லது ஏதாவது ஒரு கட்சியின் அரசியல் பிரமுகர் என்கிற அளவில்தான் இதுவரை இருந்திருக்கிறது

இப்போது லியோனி கலைஞர் வரலாற்றை சேர்க்கப் போவதாக குறிப்பிட்டதுபோல், அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்க்கும் பழக்கம்கூட திராவிட கட்சிகள் ஆரம்பித்ததுதான்! முதலில் அண்ணா பற்றியும் பின்னர் எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றியெல்லாம் பள்ளி பாடபுத்தகங்களில் இடம்பிடித்தன. இப்போது கலைஞர்! இப்படி பாடத்திட்டத்தையே அரசியலாக்குவது திராவிடக்கட்சிகளுக்கு கைவந்த கலை!

கல்வி என்பது அரசியல் இன்றி மாணவர்களின் எதிர்காலம் பற்றியதாக இருக்க வேண்டும் என்று மூதறிஞர் ராஜாஜி தொழிற்கல்வி அறிமுகப்படுத்தியபோது ’’குலக்கல்வி முறையை ராஜாஜி அறிமுகப் படுத்துகிறார்’’ என்று திராவிட கட்சிகள் திசை திருப்பி ராஜாஜி மீது குற்றம் சுமத்தியது. ஆனால் இப்போது தேசிய கட்சிகளே திராவிட கட்சியுடன் கூட்டணி சேர்ந்து, தொகுதிப் பங்கீடு போல் வாரியங்கள் பங்கீடும் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அளவுக்கு நிலமை மாறிவிட்டது! தமிழ்நாட்டில் அரசியல் வேறு, அரசாங்கம் வேறு என்ற நிலைப்பாட்டை 1967-க்கு முன் காங்கிரஸ் கட்சி செயல்படுத்தியது அரசு அதிகாரத்தில் கட்சி அரசியலை கொண்டு வரக்கூடாது என்று அப்போதைய காங்கிரஸ் கட்சி உறுதியாக இருந்தது.

சீன யுத்தத்தின்போது சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் யுத்த நிதி வசூலித்து அதை பல்கலைக்கழக வளாகத்தினுள் வைத்து அன்றைய முதல்வர் காமராஜரிடம் தர மாணவர்கள் விரும்பினர். ஆனால் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மால்கம் ஆதிசேஷையா அதற்கு அனுமதி மறுத்து விட்டார். ’’அரசியல் தலைவர்களுக்கு பல்கலைக்கழகத்திற்குள் அனுமதி இல்லை’’ என்று கண்டிப்புடன் தெரிவித்தார். மறுத்து விட்டார். மாணவர்களும் இந்த விஷயத்தை ஒரு புகாராக முதல்வர் காமராஜரிடம் தெரிவித்தனர். அதற்கு காமராஜர், ‘’உங்கள் துணைவேந்தர் சொன்னது முற்ரிலும் சரிதான்! நான் உங்கள் மாணவர் விடுதி வாசலில் வந்து நிற்கிறேன் என்னிடம் அந்த நிதியை தாருங்கள்’’ என்று சொல்லி அதன்படியே பெற்றுக் கொண்டார்.

அதேபோல ஒரு முறை தமிழக் கல்வி அமைச்சர் ஏதோவொரு விஷயமாக துணைவேந்தர் மால்கம் ஆதிசேஷையாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அதற்கு ஆதிசேஷையா ‘’நான் இப்போது ஒரு முக்கியமான வேலையாக இருக்கிறேன். நீங்கள் என் உதவியாளரிடம் பேசுங்கள்” என்று தொலைபேசியை உதவியாளரிடம் தந்துவிட்டார் இந்தத் துணிச்சல் இப்போதைய துணைவேந்தர்கள் யாருக்காவது இருக்குமா என்பது சந்தேகம்தான். மாணவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று பேசிய காங்கிரஸ் கட்சி இப்போது மாணவர் காங்கிரஸ் என்ற ஒரு அமைப்பை உருவாக்கிவிட்டது தேசியக் கட்சிகள் சித்தாந்தம் கூட குறுகிய மனப்பான்மையுடன் மாநிலக் கட்சிகளின் சித்தாந்தத்தை தழுவியே தற்போது இருந்து வருகிறது.

அதேசமயம் கல்வி விஷயத்தில் மாணவர்களின் எதிர்காலத்தில் விளையாடும் இந்த போக்கை நிச்சயம் திராவிட கட்சிகள் தவிர்க்க வேண்டும் மாணவர்கள் கல்வியை மேம்படுத்தும் வகையில், ஓய்வுபெற்ற துணைவேந்தர்கள் கல்வியாளர்கள் நல்லாசிரியர் விருது பெற்றவர்கள் போன்றவர்களை ஒரு குழுவாக அமைத்து அவர்களின் ஆலோசனைப்படி மாணவர்களின் பாடத் திட்டம் இருக்க வேண்டும் அதுதான் வருங்கால சந்ததியினருக்குச் சிறந்தது! வேண்டாம் இந்த அரசியல் வாரியம்!

Comments

usha says :

Education and religion has to be handled by scholars and matured persons. Otherwise, things which are not important will be prioritised. Focus only on the quality of the education

Ganesan says :

Dear sir, you criticise the appointment of lioni..where were you when valarmathi whose education was 8th standard headed the same institution during the AIADMK regime. Please see the educational capacity of Leoni. . Further the article is aimed at hitting DMK which is doing wonderfully in the present regime. Regarding Leoni let the author search for himself.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :