• தீபம் - ஆன்மீகம்

ஆழ்வார் பாசுரங்களும் அழகிய உவமைகளும் : 12 - மாலவன் தங்கும் மண்டபம்!


- லதானந்த்

பூதத்தாழ்வார் மஹாபலிபுரத்தில் அவதரித்தவர். மல்லிகைப் புதர்களுக்கு நடுவே நீலோற்பல மலரில் இவர் பிறந்ததாகச் சொல்வார்கள். திருமாலின் கதாயுதமான கௌமோதகியின் அம்சம் இவர் எனக் கொண்டாடப்படுபவர். பிறந்தபோது இவரது முகம் ஒளி பொருந்தியதாக இருந்தது. மக்கள் இவரை, ‘பூதன்’ என்று அழைத்தனர். ‘பூதன்’ என்றால் ஆன்மா என்று அர்த்தம். தன்னுயிரைப் போலவே பிற உயிர்களையும் நேசித்தமையால் இவருக்கு பூதத்தாழ்வார் என்று பெயராயிற்று.

இவரது காலம் 7ஆம் நூற்றாண்டு. இவரும் பொய்கையாழ்வாரும், பேயாழ்வாரும் சம காலத்தைச் சேர்ந்தவர்கள். வாழ்நாளில் தமது ஒவ்வோர் அசைவின் போதும் திருமாலையே எண்ணி வாழ்ந்தவர் இவர். பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 14 வைணவ திவ்ய தேசங்களில் பாமாலை கள் சாத்தி மங்களாசாஸனம் செய்திருக்கிறார். தாம் ஏழு பிறவிகளில் செய்த தவத்தின் பலனாக இறைவனைப் பாடும் இப்பிறவியில் பிறந்தேன் என்றும், தம்மைப் ‘பெருந்தமிழன் நல்லேன்’ என்றும் சொல்லிக் கொண்டார். வைணவ நூல்களின் தொகுப்பில் நூறு வெண்பாக்களைக் கொண்ட இரண்டாம் திருவந்தாதியைப் பாடியவர் இவர். பல பாக்களில் உவமைகள் தெறித்து விழுகின்றன. அவை விழுமியம் நிறைந்தன; வியக்க வைக்கின்றன; முதல் பாடலிலேயே வரிக்கு வரி உவம, உவமேயங்கள் உள்ளத்திலே உவகையைப் பாய்ச்சுகின்றன.

தம்முடைய அன்புக்கு அகல் விளக்கை உவமை சொல்கிறார்; அந்த அகல் விளக்கிலே இடும் நெய்யாகத் தமது ஆர்வத்தைக் குறிப்பிடுகிறார்; இறையுணர்விலே உருகும் சிந்தையே திரி என்கிறார்; அந்த விளக்கில் ஞானம் என்னும் சுடரை ஏற்றினேன் என்கிறார். அந்தப் பாசுரம் இதுதான்!

‘அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்’

‘திருமாலின் திருப்பெயர்களை தினந்தோறும் இசையுடன் ஓதுவதால் வைகுண்டத்திலே வாழும் திருமாலின் திருத்தொண்டர்களைப் போல நாமும் ஆகலாம்’ என்று உயரிய உவமை ஒன்றைப் பின்வரும் பாடலில் விளக்குகிறார் :

‘ஞானத்தால் நன்குணர்ந்து நாரணன்றன் நாமங்கள்,
தானத்தால் மற்றவன்பேர் சாற்றினால் - வானத்
தணியமர ராக்குவிக்கு மதன்றே, நாங்கள்
பணியமரர் கோமான் பரிசு’

இன்னொரு பாடலில் தம்முடைய உள்ளத்தை, ‘மாலவன் தங்கும் மண்டபம்’ என்கிறார். அதிலே தாமரைப் பூவின் புற இதழ்களாக பக்தி, அன்பாகிய முத்து ஆகியன இருக்கின்றனவாம். அஹிம்சை, புலனடக்கம், கருணை, பொறுமை, ஞானம், தவம், தியானம், உண்மை போன்ற நவரத்தினங்களால் ஆன தாமரைப்பூவை ஏந்தி, பரந்தாமனின் பாதங்களை வணங்குவதாகச் சொல்கிறார்.

‘நகரிழைத்து நித்திலத்து நாண்மலர் கொண்டாங்கே
திகழுமணி வயிரம் சேர்த்து - நிகரில்லாப்
பைங்கமல மேந்திப் பணிந்தேன் பனிமலராள்
அங்கம் வலம் கொண்டா னடி’

ஓங்கி உலகளந்து திருமால் நின்றபோது, மஹாபலியின் படையினர் தம் மேல் நெருப்புப் பற்றியதைப் போல அஞ்சி நடுங்கினர் என்று பொருத்தமான உவமை சொல்கிறார். ‘அழலெடுத்த சிந்தையராய் அஞ்ச’ என்பது அந்த அழகுச் சொல்லாடல்!

‘மாலவனையே வணங்குவீர்; மாற்றாரைப் போறாதீர்’ எனச் சொல்ல வரும்போது, சாதாரணர்கள் தமது வயிற்றையே பெருங்கோயிலாகக் கருதி நிரப்பி வாழ்கின்றனர் எனச் சாடுகிறார். அவர்களைப் பாராட்டித் திரியாதீர் என்கிறார் பூதத்தாழ்வார்.

‘பண்டிப் பெரும்பதியை யாக்கி பழிபாவம்
கொண்டிங்கு வாழ்வாரைக் கூறாதே - எண்டிசையும்
பேர்த்தகரம் நான்குடையான் பேரோதிப்பேதைகாள்
தீர்த்தகரர் ஆமின் திரிந்து.’

என்பது உவமை நயம் கொப்பளிக்கும் அவர் வாக்கு!

என்ன கைங்கர்யம் செய்வது என்று தெரியாவிட்டாலும், எம்பெருமானை மனதில் குடியேற்றுவது தான் உய்யும் வழி என்பதற்கு அற்புதமான உவமை ஒன்றைச் சொல்கிறார். காட்டுச் செடிகள் மண்டி, விளைச்சலுக்கு உதவாத நிலம் என்றாலும் பெரிய பரப்பில் குழி ஒன்றை வெட்டினால் அது ஏரியாகி விடும் என்பதுதான் அந்த உவமை. இதோ பாடல்!

‘தனக்கடிமை பட்டது தானறியா னேலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை - வனத்திடரை
ஏரியாம் வண்ணம் இயற்று மிதுவல்லால்,
மாரியார் பெய்கிற்பார் மற்று?’

(உவமைகள் தொடரும்)

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :