• தீபம் - ஆன்மீகம்

ஆழ்வார் பாசுரங்களும் அழகிய உவமைகளும் : 11 - எரியுருவ வண்ணத்தான்!


- லதானந்த்

பொய்கையாழ்வாருடன், பேயாழ்வாரும், பூதத்தாழ்வாரும் சம காலத்தில் வாழ்ந்திருந்தாலும், ஒருவரையொருவர் சந்திக்காமலே நெடுநாட்கள் இருந்தனர். இவர்கள் மூவரும் துறவறம் பூண்டவர்கள். ஞானம், பக்தி மற்றும் வைராக்கியம் மிக்கவர்கள். பாசுரங்களால் பகவனைப் பாடிப்பாடிப் பரவசமடைந்தவர்கள்; மற்ற மக்களோடு கலக்காமல் இறைவன் நினைவாகவே இருந்தவர்கள். இவர்கள் மூவருக்கும் இல்லம் ஒன்றின் இடைகழியில் இறைவன் ஒரே சமயத்தில் காட்சியளித்தார் என வைணவ வரலாறு சொல்கிறது. அப்போது அவர்களால் பாடப்பெற்ற செய்யுள்களே மூன்று திருவந்தாதிகளாக உருவானது. மூன்று திருவந்தாதிகளில் முதல் திருவந்தாதிக்குச் சொந்தக்காரர்தான் புனிதமிகு பொய்கையாழ்வார்.

சரளமான உவமைகளின் சதிராட்டம் இவரது பாசுரங்களிலே சகஜமாகத் தென்படுகின்றன. திருமாலை பாடும்போது, ‘இறைவன் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களாக இருக்கிறான்’ என்கிறார். அவன் காப்பாற்றிய யானையின் தந்தத்துக்கு அருமையாக ஓர் உவமை சொல்கிறார் பாருங்கள்! அடடா, அந்த யானையின் தந்தங்கள் பிறைச் சந்திரனைப் போல இருந்தனவாம். தந்தத்தின் உருவ அமைப்பு மட்டுமல்லாது, அதன் நிறமும் சந்திரனோடு ஒத்துப்போகிறதல்லவா? அந்தப் பாசுரம் இதுதான்!

‘இறையும் நிலனும் இருவிசும்பும் காற்றும்
அறைபுனலும் செந்தீயும் ஆவான் - பிறைமருப்பின்
பைங்கண்மால் யானை படுதுயரம் காத்தளித்த
செங்கண்மால் கண்டாய் தெளி.’

மனதைக் கண்டபடி அலையவிடாமல் தூய்மையாக வைத்துக்கொண்டு, எம்பெருமானையே நினைப்பவரது சிந்தையானது, எப்படி ஒரு கன்று, பசுக் கூட்டத்தில் இருக்கும் தன் தாயை சிரமப்படாமல், எளிதாக அடையாளம் கண்டுகொள்ளுமோ அப்படி மாலவனின் தாளை எளிதில் அடையும் என்று சொல்கிறார்.

அழகிய அந்த உவமை பொதிந்திருக்கும் பாசுரம் :

‘தெளிதாக உள்ளத்தைச் செந்நிறீஇ ஞானத்து
எளிதாக நன்குணர்வார் சிந்தை - எளிதாகத்
தாய்நாடு கன்றேபோல் தண்டுழாயன் அடிக்கே
போய்நாடிக்கொள்ளும் புரிந்து.’

இதே போன்றதொரு உவமை நாலடியாரிலும் காணக் கிடைக்கிறது. அந்தப் பாடல் :

‘பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாந், தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தே, தற்செய்த
கிழவனை நாடிக் கொளற்கு.’

இந்தப் பாடலிலும், ‘கூட்டத்தில் விடப்பட்டாலும் தன் தாயைக் கன்று தேடிச் சென்று சேர்வதைப் போல, ஒருவனுடைய கர்ம வினைகளும் அவனைப் பற்றியே தீரும்’ என உவமை சொல்லப்பட்டிருப்பதைக் கவனியுங்கள்!

நரசிங்கமாய் தோன்றி, இரணியனின் மார்பைக் கிழித்த நிகழ்ச்சியைச் சொல்லவரும் ஆழ்வாருக்கு இரணியன் எப்படித் தெரிகிறான் தெரியுமா? ‘நெருப்பு’ போல இருக்கிறானாம். உக்கிரத்தில் மட்டுமல்ல, முறையாகக் கையாளாவிட்டால் பெரும் சேதத்தையும் நெருப்பு ஏற்படுத்திவிடும் அல்லவா? அதனால்தான் இரணியனையும், ‘எரியுருவ வண்ணத்தான்’ என்கிறார்.

இறைவன் உறையும் வேங்கட மலையின் பெருமையைப் பேச நினைக்கிறார் பொய்கையாழ்வார். அப்போது, இயற்கைக் காட்சி ஒன்றையும் அவர் விவரிக்கிறார். அங்கே ஒரு வயல்; வயலிலே மேய்கிறது யானைக் கூட்டம். அப்போது வயலில் இருக்கும் குறவர்கள் கல்லெறிந்து யானைக் கூட்டத்தை விரட்டுகின்றனராம். கல் என்றால் சாதாரணக் கல் அன்று; மாணிக்கக் கல்! அங்கே உடம்பெல்லாம் வரிகளோடு ஊர்கிறது ஒரு பாம்பு. எறியப்பட்ட மாணிக்கத்தில் இருந்து கிளம்பும் ஒளியை மின்னல் என்று நினைத்து அஞ்சிய பாம்பு, புற்றிலே போய் ஒளிந்து கொள்கிறதாம்! இங்கே மாணிக்கக் கல்லுக்கு மின்னலை உவமையாக்குவது ஒரு நயம் என்றால், பாம்பை விரட்டவே மாணிக்கக் கல்லைத்தான் எறிகிறார்கள் வேங்கட மலைவாசிகள் என்னும்போது வேங்கட மலையின் செல்வச் செழுமையையும் சுட்டிச் செல்கிறார் பொய்கையாழ்வார்!

‘ஊரும் வரியரவம் ஒண்குறவர் மால்யானை,
பேர எறிந்த பெருமணியை - காருடைய
மின்னென்று புற்றடையும் வேங்கடமே, மேலசுரர்
என்னென்ற மால திடம்.’

(உவமைகள் தொடரும்)

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :