• GLITTERS | பளபள

விரயங்கள் நிறுத்தப்பட வேண்டும்.


கட்டுரை: ச பாலசுப்ரமணியன், பொதுத்துறை வங்கி ஊழியர் (ஓய்வு)

தற்போது தனி மனித வாழ்விலும் சரி, அரசு வழியிலும் சரி, ஆடம்பர செலவுகள் என்பது அதிகரித்துக் கொண்டு வருவது கண்கூடு. வீட்டு விசேஷங்கள் தொடங்கி அலுவலக விழாக்கள், சங்க விழாக்கள் வரை பரிசுப் பொருள் கலாச்சாரம் தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டது.

சட்டசபை கூட்டங்கள் நடைபெறும்போது, துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப் படும்போது, அந்தந்த துறைகள் சார்பாக, அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்குவது என்பது எல்லா மாநிலங்களிலும் ஒரு மரபாக மாறி விட்டது. சென்ற ஆட்சியில், ஆவின் நிறுவனத்திலிருந்து டன் கணக்கில், துறை அமைச்சருக்கு இனிப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன என்று இப்போது செய்திகள் வருகின்றன. அது அநத அமைச்சருக்கு மட்டுமல்லாது, பலருக்கும் கொடுக்கப் பட்டிருக்கும் என்பதே உண்மை. ஆனால், அது இலவசமாக பெறப்பட்டது என்பதுதான் இப்போது பிரச்சினை. எந்த முறைகேடும் இன்று ஒரு நாள் செய்தியாக முடிந்து விடுகிரது. அதுவே ஊழல் செய்பவர்களுக்கு தைரியத்தை ஏற்படுத்தி விடுகிறது..

அரசு கஜானாவை ஊழல் பேர்வழிகள் காலி செய்வதோடு மட்டும் நிற்கவில்லை. இந்த வாரம் வந்த இன்னொரு செய்தியைப் பார்த்தோமானால், அரசியல் என்பது எவ்வளவு கீழ்த்தரமாக சென்று கொண்டிருக்கிறது என்பதனை உறுதி செய்கிறது. ஒரு அரசியல்வாதி, இன்னொருவரை பழி வாங்குவதற்காக, தனது தொண்டர் ஒருவரை, கோட்டை முன்பு அடுத்தவர் மீது பொய்க் குற்றச்சாட்டுகளை வைத்து தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்யச் சொன்னதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியுற வைத்தது. அந்த தொண்டர் அவ்வாறு செய்தால், அவருக்கு பண உதவி, உள்ளாட்சி பதவி முதலியன கிடைக்கச் செய்வதாக வாக்களிக்கப்பட்டதாம். இது எத்தனை மோசடியான செயல்? தற்கொலைக்குத் தூண்டுவது ஒரு குற்றம். போலி வாக்குறுதி மற்றொரு குற்றம். ஆனால், அவற்றை மீறிய ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். அந்த அரசியல்வாதி தன் சொந்தப் பகையை தீர்த்துக் கொள்ள வழக்குகளை வாபஸ் பெற செய்யலாம், உள்ளாட்சி பதவி வாரி வழங்கலாம் என்று நினைத்த அவரது மமதை எண்ணம். இதற்கு என்ன காரணம்?

அரசியல் காரணங்களுக்காக தீக்குளித்த யாரோ ஒருவருக்கு, முதன் முதலில் அரசு வேலை வழங்கியபோது, அதனை எதிர்க்காமல், அனுமதித்த அனைவரும் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். இன்று, இது விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. படித்தவர் எல்லாம், அரசு வேலைக்கு தேர்வு எழுதியும், வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தும் காத்திருக்கையில், தராதரம் இல்லாமல், தகுதியற்றவர்களுக்கு இது மாதிரி குறுக்கு வழியில் அரசு வேலைகள் வழங்கப்படுவது என்பது வழக்கமாகி வருகிறது.

கள்ளச்சாராயம், அராஜகம், சட்டவிரோத நடவடிக்கைகள் என பல தவறான செயல்களில் ஈடுபட்டு, குடும்பத்திற்கும், நாட்டிற்கும் கேடு விளைவித்து கொண்டிருக்கும் அற்பர்கள், அந்த காரணங்களால் உயிரிழந்தால் உடனே அவர்களது குடும்பத்திற்கு நிவாரணம், அரசு வேலை என்று கேட்கும் அளவுக்கு இன்று நிலைமை வந்து விட்டது.

இதில் தீக்குளிப்பவர்கள் இந்த அரசியல்வாதிகளால் தூண்டப்பட்டு வருகின்றனர் என்ற எண்ணம் பரவலாக இருந்து வந்தது. இப்போது அது வலுவடைந்துள்ளது. இது, சமூகத்தில் எத்தனை பெரிய தாக்கத்தை உண்டாக்கி வருகிறது என்பது இவர்கள் அறியாமல் இல்லை. இருந்தாலும், பதவி, அதிகாரம் கையில் இருக்கிறதே.. யார் என்ன செய்ய முடியும் என்ற நினைப்பு!

அரசின் விரயச் செலவுகள் இன்னும் பல வடிவங்களில் நடை பெறுகின்றன. எந்த கட்சி, அரசமைத்தாலும், முந்தைய அரசு செய்த எந்த ஒரு திட்டத்தையும் தொடர்வதில்லை - அது எத்தனை நல்லதாக இருந்திட்டாலும்!. மக்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள், நூலகங்கள், மருந்தகங்கள், உணவகங்கள், சந்தைகள் என்று மக்களுக்கு நேரடியாக தினசரி உதவும் திட்டங்கள் ஆனாலும் சரி, பொதுக் கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள், தொழிற்கூடங்கள், கல்விக் கூடங்கள் என பிற வழிகளில் உதவும் திட்டங்கள் ஆயினும் சரி, அவை யாரால், எப்போது துவங்கப்பட்டன என்பதை பொறுத்தே அவற்றிற்கான நிதிகள் ஒதுக்கப்படும் அல்லது ஏதாவது ஊழல் என்று கூறி அவை பற்றி விசாரிக்கப்படும். எல்லா திட்டங்களுக்கும், அவரவர் கட்சித் தலைவர்கள் பெயர்கள் வைக்கப்படும் என்பதால், மாற்றுக் கட்சி அவற்றை புறக்கணிக்கும் அல்லது ஆட்சிக்கு வந்தவுடன், சில மாற்றங்களுடன், தங்கள் தலைவர் பெயர் சூட்டி, அதிக விளம்பரத்துடன் தொடரும். ஆட்சி மாறும்போது, காட்சிகள் மாறிவிடும்

ஆடம்பரமாக ஆரம்பிக்கப்பட்ட பல திட்டங்கள் கிடப்பில் உள்ளன. அவற்றிற்கு செய்த செலவுகள் வீண். கூவம் சுத்திகரிப்பு, மெரினா கடற்கரை கடைகளை நெறிப்படுத்துதல்,, பல நீர்நிலைகளில் ஆழப்படுத்தும் பணி, ஆகாயத்தாமரை அகற்றும் பணி, ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி, நடைபாதைக் கடைகளை முறைப்படுத்துதல், சுவரொட்டிகளை தடை செய்தல், மேம்பாலங்களை அழகு படுத்துதல் என்று பல திட்டங்களை மீண்டும், மீண்டும் பல வடிவங்களில், தாம், தூம் என்று அறிமுகப் படுத்துகின்றனரே தவிர, அவை என்றுமே முழுமை பெறுவதில்லை. செலவுகள் செய்யப்படுகின்றன; ஆனால், அது பற்றி எந்த தணிக்கை அறிக்கைகளும் வெளியிடப்படுவதில்லை.

வாரியத் தலைவர்கள் என்று பந்தாவாக வலம் வரும் அரசியல் புள்ளிகளால், அந்த வாரியங்களுக்கு ஏற்படும் நன்மைகளை விட, செலவுகளும், தீமைகளும்தான் அதிகம். அது போல், கூட்டுறவு பண்டகசாலைகள், வங்கிகள் போன்றவை அரசியல்வாதிகளால் அடையும் இலாப, நஷ்டங்கள் பற்றி ஒரு உண்மையான தகவலறிக்கை வெளியிடப்பட்டால் அவற்றின் விரயங்கள் பற்றியும் நாம் அறிய முடியும்.

அரசு செலவில், கட்சித் தலைவர்களுக்கு, அவர்கள் எந்த பதவி வகித்திருந்தாலும், சிலைகள், நினைவிடங்கள் என்று அமைத்து, பராமரிப்பது நிறுத்தப்பட வேண்டும். அவர்களது பெயரில் எந்த அரசு திட்டங்களும் செயல்படுத்தப்பட கூடாது. இதன் மூலமே, குற்றவாளிகள் அரசியல் புனிதர்களாகி வருகின்றனர் என்பதால், இதனை சட்டரீதியாக தடை செய்தாக வேண்டும். அரசு கஜானா என்பது ஆளும் கட்சியின் பொக்கிஷம் அல்ல என்பது உணர்த்தப்பட வேண்டும். நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள், தவறுகளுக்கு துணை போகாமல் இருத்தல் அவசியம். தங்களது குறுகிய கால பயன் கருதி, மக்களின் நீண்ட கால பயனை அடகு வைக்க கூடாது. இந்த பொறுப்பு, மக்களுக்கும் உள்ளது.

Comments

Ganesan says :

உண்மை.‌ ஆசியாவின் மிகப்பெரிய அளவில் உருவாக்கப் பட்ட நூலகம் திருமண மண்டபம் என்று மாற்ற எடுக்கப்பட்ட முயற்சிகளை நிறுத்த நீதிமன்றம் தேவைப் படுகிறது! கலைஞர் கட்டியதால் வள்ளுவர் கோட்டம் சென்ற ஆட்சியில் பராமரிக்க வில்லை.‌ அதிமுக ஆட்சியில் தான் இந்த அவலங்கள்! திமுக அதுபோல செயல்பட்டதில்லை என்பது என் கருத்து.

Apsara begam n says :

பொது மக்களும் இலவசங்களுக்கு அடிமையாகாமல் ,ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படாமல் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்தால்,நாடும் நலம் பெறும் நாட்டு மக்களும் நலம் பெறுவர்.கட்டுரை அருமை ஐயா.

Narayanan R says :

இன்றைய அரசியல் களம் மக்களுக்கு இலவசங்களை அள்ளி கொடுத்து மக்களை அடிமையாக்கி உள்ளது. தங்களின் இந்த கட்டுரை மிகச் சிறப்பாக உள்ளது. கள யதார்த்தத்தை காட்டுகிறது. இதுபோன்ற தங்களின் கட்டுரை வாரம் ஒரு முறையாவது வரவேண்டும் என்பது உங்களின் கருத்து.

மீனா says :

மிகவும் அருமையான கட்டுரை. இன்றைய அரசியலின் உண்மையான வெளிப்பாடு.

GOPINATH R says :

Superb

Kasturirangan। A B says :

Ill-timed article An active tradeunoinist turned a conservative Deserves adverse comments only Kasturirangan s

Ganesh S says :

அரசியல் என்பது மக்களுக்கு சேவை புரிவதற்கான களம் என்பதிலிருந்து பெரு வணிகமாகிவிட்ட சூழல். குறிப்பாக, எல்லாவற்றையும் பணத்தினை அளவு கோலாகக் கொண்டே மதிப்பிடும் புதிய பொருளாதாரக் கொள்கையின் தாக்கத்தினையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. தனி மனிதன் துவங்கி எந்தவொரு அமைப்பும் இயக்கமும் தத்தமது இருப்பினை காட்டுவதும், தம்மை வலிமைப் படுத்திக் கொண்டு அதிகாரங்களைப் பெற முயல்வதும் விரயங்களை ஏற்படுத்துகிறது என சொல்லலாம். ஊழல் என்பதில், விரயங்களும் அடங்கும். அத்துடன், தற்போது ஒன்றிய அரசு நடைமுறைப் படுத்தும். பொதுத்துறை விற்பனையும் ஊழல் என்றே வரையறை செய்யப்பட வேண்டும். மக்கள் நலம் மட்டுமே மதிப்பீடுகளாக, அரசியல் நாகரிகத்தோடும், முன்னிறுத்தப்படும் என்ற நிலை உருவாகும் போது விரயங்கள் தவிர்க்கப்பட முடியும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :