• தீபம் - ஆன்மீகம்

மும்மாரி பொழிய வைக்கும் ஸ்ரீ வாகீஸ்வரர்!


- சென்னிவீரம்பாளையம் செ.சு.சரவணகுமார்

ஈரோடு மாவட்டம், அந்தியூரிலிருந்து பவானி செல்லும் சாலையில் பட்லூரில் அமைந்துள்ளது அருள்மிகு சௌந்திரநாயகி உடனமர்

ஸ்ரீ வாகீஸ்வரர் திருக்கோயில். பொதுவாக, மன்னர்கள் கோயில்களுக்கு நிலம், பொன், பொருளை தானமாக அளித்ததை கேள்விப்பட்டிருப்போம். வீர ராஜேந்திர மன்னன் இந்தக் கோயிலுக்கு ஒரு ஏரியையே தானமாக அளித்துள்ளான்.

ஒரு சமயம், பட்லூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பொய்த்து, வறட்சியின் பிடியில் சிக்கியது. இதனால் இப்பகுதியை ஆண்ட வீர ராஜேந்திர மன்னனும் மக்களும் மிகுந்த வேதனையடைந்தனர். வறுமையின் பிடியிலிருந்து விடுபட மகேசனிடம் முறையிடுவதுதான் ஒரே வழி என முடிவு செய்து, மன்னனும், மக்களும் ஒன்று கூடி ஆகாயத்தைப் பார்த்து, ‘வறட்சியைப் போக்கி, பஞ்சத்தின் பிடியில் இருந்து எங்களைக் காக்க வேண்டும் ஈசனே!’ என வேண்டி நின்றனர்.

அப்போது வானில் ஓர் அசரீரி, ‘நான் உங்கள் ஊரின் ஈசான்ய மூலையில் உள்ள வில்வ மரத்தின் அருகில் சுயம்புவாய் எழுந்தருளி உள்ளேன். என்னை வழிபடுங்கள். உங்கள் குறை தீரும். மும்மாரி பொழிந்து, மண் வளமும், உங்கள் வாழ்வும் சிறக்கும்’ எனக் கூறியது. மன்னரும், மக்களும் ஒன்று சேர்ந்து வில்வ மரத்திற்கு அருகில் இருந்த புதர்களை நீக்கிப் பார்த்தபோது, அங்கே ஒரு அழகிய சிவலிங்கத் திருமேனியைக் கண்டனர். பக்திச் சிலிர்ப்புடன் அந்த இடத்தில் பச்சை பந்தல் போட்டு மக்களும், மன்னரும் வழிபட்டனர். வழிபாடுகள் தொடரத் தொடர, இப்பகுதியில் அடிக்கடி மழை பெய்துள்ளது. மகேசனின் மகிமையை உணர்ந்த வீர ராஜேந்திர மன்னன், கிழக்கு நோக்கிய அழகிய சிவாலயம் ஒன்றை எழுப்பினான்.

கருவறை சுயம்பு லிங்கத் திருமேனிக்கு ஒன்பது தாமரை இதழ்கள் கொண்ட பீடமும், இறைவிக்கு அர்த்த மண்டபத்தில் தனிச் சன்னிதியும் அமைத்து ஆலயம் எழுப்பினர். இறைவன் திருநாமம் வாகீஸ்வரர். இறைவியின் திருநாமம் சௌந்திரநாயகி அம்மன். சுயம்பு லிங்கத் திருமேனியராக சிவ பெருமான் தாமரை பீடத்தில் எழுந்தருளியிருப்பது இத்தலத்தில் மட்டும்தான் என ஆன்மிகப் பெரியோர்கள் கூறுகின்றனர். சௌந்திரநாயகி அம்மன் நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். முருகப்பெருமான் தனிச் சன்னிதியில் ஆறுமுக சுப்பிரமணியர் என்ற திருநாமத்துடன் ஆறுமுகமும், பன்னிரு திருக்கரங் களும் கொண்டு சூரசம்ஹார மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார்.

ஸ்ரீ வாகீஸ்வரரின் திருவருளால் இப்பகுதியில் மும்மாரி பொழிந்ததால், அம்மழை நீர் வீணாகக் கூடாது என எண்ணிய வீர ராஜேந்திர மன்னன் சில ஆண்டுகள் கழித்து இக்கோயிலுக்குப் பின்புறம் மிகப் பெரிய ஏரியை ஒன்றை வெட்டி அதை கோயிலுக்கு தானமாக அளித்தான். ‘இந்த ஏரியிலிருந்து விவசாயத்துக்காக யார் தண்ணீர் எடுத்தாலும், விளைச்சலில் நான்கில் ஒரு பங்கினை இந்தத் திருக்கோயிலுக்குத் தர வேண்டும்’ என மன்னன் ஆணையிட்ட செய்தி ஒரு கல்வெட்டிலும், மற்றொரு கல்வெட்டில், ‘இக்கோயிலின் மேம்பாட்டிற்காக உழைப்பவர் களின் பாதம் தலை மீது வைத்துக் கொண்டாடப்படும்’ என்றும், ‘இந்த தர்மத்தை அலட்சியப்படுத்துபவர்கள் ஏழு தலைமுறைக்கு வாரிசு இல்லாமல் போவார்கள்’ என்றும் காணப்படுகின்றது. மக்கள் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவர்களாக வாழ வேண்டும் என்பதை இத்தல இறைவன் உணர்த்தியதால், முற்காலத்தில் இக்கோயில், ‘சத்யவாகீஸ் வரர் திருக்கோயில்’ என அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஒவ்வொரு அமாவாசையன்றும் காலை 9 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெறுகிறது. பிரதி பௌர்ணமி தினங் களில் மாலை 6 மணிக்கு மேல் சௌந்திரநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெறுகிறது.

பிரதோஷ வழிபாடு மாலை ஐந்து மணிக்கு மேல் துவங்குகின்றது. ஒன்பது பிரதோஷ நாளில் இத்தலம் வந்து ஸ்ரீ வாகீஸ்வரரையும், நந்தியெம்பெருமானையும் வழிபட்டு தொழில் விருத்தி அடைந்தவர்கள், சொந்த வீடு கட்டும் பாக்கியம் பெற்றவர்கள், திருமணம் கைகூடியவர் கள், பிணி நீங்கியவர்கள் ஏராளம் என்கின்றனர்.

அதேபோல், தேய்பிறை அஷ்டமியன்று மாலை காலபைரவருக்கு சிறப்பு ஹோமத்துடன் வழிபாடு நடைபெறுகின்றது. இந்த வழிபாட்டில் பக்தர்கள் பங்கேற்கும்போது தங்கள் வாழ்வில் தடைபட்டு வரும் ஏதாவது ஒரு நற்காரியம் விரைவில் ஈடேற எண்ணி பூஜையில் அமர்ந்தால், அந்த நற்காரியம் விரைவில் ஈடேறுவதாக ஐதீகம். பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் அடுத்த தேய்பிறை அஷ்டமி வழிபாட்டினை தாங்களே கட்டளைதாரர்களாக இருந்து நடத்துவது இத்தல சிறப்பு.

திருமணத் தடையுள்ளவர்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இறைவி சௌந்திரநாயகி அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் செய்து குங்குமத்தால் 1008 முறை சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்ட பின்னர், இத்தலத்தில் தரப்படுகின்ற குங்குமப் பிரசாதத்தை வீட்டில் வைத்து, அம்பிகையை வேண்டி தினந்தோறும் அந்தக் குங்குமத்தை நெற்றியில் வைத்துக்கொள்ள வேண்டும். குங்குமப் பிரசாதம் தீருவதற்குள் அவர்களுக்குத் திருமண பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை.

புரட்டாசி நவராத்திரி விழா இக்கோயிலில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் ஒன்பது நாட்களும் மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை முடிந்து தீபாராதனை நடைபெறுகின்றது. பத்தாவது நாளான விஜயதசமியன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.

Comments

Sakthi says :

அந்தியூர் அருகில் உள்ள பட்லூர் சிவ தலம் குறித்த கட்டுரையை வாசித்தேன்.மன்னர்கள் காலத்தில் விவசாயத்திற்கும், தண்ணீருக்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பதை பக்தி சிலிர்ப்புடன் அறிய முடிந்தது.

Prabhu M says :

தரணியை காக்கும் ஈசன் பட்லூர் திருத்தலத்தில் தாமரை பீடத்தில் அருள்பாலிக்கிறார் என்ற தகவலை இந்த கட்டுரையின் மூலம் அறிந்து கொண்டோம்.

K.Malar says :

பழமைவாய்ந்த சிவத்தலம் குறித்த கட்டுரையைப் படிக்கும் போது மனதினுள் ஆன்மீக ஆற்றலை அதிகப்படுத்தியது.

M.Eswar says :

பட்லூர் வாகீஸ்வரர் திருத்தலத்தின் அருள் மகிமையை இந்த கட்டுரையின் மூலம் முழுவதுமாக அறிந்தோம்.தீபம் இதழுக்கு நன்றி.

R.Prabhu says :

ஈரோடு மாவட்டத்தில் இருந்து பழமையான ஒரு சிவாலயம் பற்றிய முழு தகவல்களை தீபம் அளித்த கட்டுரையின் மூலம் அறிந்து கொண்டோம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :