• தீபம் - ஆன்மீகம்

புண்ணியம் பெருக்கும் ஆடிப்பெருக்கு!


- எம்.கோதண்டபாணி

தமிழகத்தில் அனுசரிக்கப்படும் விழாக்களில், நதிக்கென பிரத்யேகமாகக் கொண்டாடப்படுவது ஆடிப்பெருக்கு விழாவாகும். தமிழ் மாதமான ஆடி 18ம் நாளான இன்று (3.8.2021), காவிரித் தாயை மலர் தூவி வரவேற்று மகிழ்வோம். இன்று விரதமிருந்து காவிரித் தாயை வழிபட்டால் அனைத்திலும் நலமே சேரும் என்பது நம்பிக்கை. அட்சய திரிதியை தினத்தைப் போலவே, ஆடிப்பெருக்கு நாளும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. வருண பகவானை வழிபடும் தினம் என்றும்; நீருக்கு மரியாதை செலுத்தும் தினம் என்றும் இந்நாள் கருதப்படுகிறது.

நீர் பெருக்கெடுத்து ஓடும் நதிக்கரைகளில் பதினெட்டுப் படிகளை அமைத்த நமது முன்னோர்கள், உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கும் காவிரி அன்னைக்கு, ஆடிப் பதினெட்டு அன்று நன்றி செலுத்தும் விதமாக, விழா கொண்டாடி மகிழ்ந்தனர்.

இன்று காவிரிக்கரையில் இளம் பெண்கள், புதுமணத் தம்பதியர் மற்றும் திருமணமான பெண்கள் புத்தாடை உடுத்தி பழங்கள், பலகாரங்கள் மற்றும் புதிய மாங்கல்ய சரடு, காதோலை கருகமணி ஆகியவற்றை வைத்து மஞ்சளால் பிடிக்கப்பட்ட பிள்ளையார் முன் படையல் செய்து வழிபடுவார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலது கை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை. தாலி பாக்கியம் நிலைக்க சுமங்கலிப் பெண்கள் புது தாலி சரடு மாற்றிக்கொள்வதும் வழக்கம். அதேபோல், இன்று புதுமணப் பெண்ணுக்கு தாலி பிரித்து கோர்ப்பதும் உண்டு. எந்த புதிய நல்ல காரியங்களையும் ஆடிப்பெருக்கு அன்று ஆரம்பித்தால், அந்த காரியம் மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம்.

இன்று, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபப் படித்துறைக்கு, ஸ்ரீரங்கநாதர் எழுந்தருள்வார். அச்சமயம் புடைவை, திருமாங்கல்யம், வெற்றிலை, பாக்கு, பழங்கள் முதலிய சீர் வரிசைகளை யானையின் மேல் ஏற்றி கொண்டு வருவார்கள். அம்மா மண்டபப் படித்துறையில் அபிஷேக, ஆராதனைகள் முடிந்ததும், அவற்றை காவிரித் தாய்க்கு சமர்ப்பிப்பார்கள். காவிரி அன்னை, ஸ்ரீ ரங்கநாதரின் தங்கையாகக் கருதப்படுவதால் இந்த வழிபாடு எனக் கூறப்படுகிறது.

ஆடி பதினெட்டு என்னும் ஆடிப்பெருக்கு புராண காலத்திலேயே போற்றப் பட்டிருக்கிறது. ஸ்ரீராமபிரான் அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, வசிஷ்ட முனிவரிடம் வழி கேட்டார். வசிஷ்டர், “அறுபத்தாறு கோடி தீர்த்தங்களைத் தன்னகத்தே கொண்ட காவிரிக்கு, ‘தட்சிண கங்கை’ என்று பெயர். அந்த நதியில் நீராடினால் உனது பாவங்கள் நீங்கும்” என்று கூறினார். அதன்படி ஸ்ரீராமபிரான் காவிரியில் நீராடிய நாள் ‘ஆடிப்பெருக்கு’ என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

உலகில் எத்தனையோ புனித நதிகளும் தீர்த்தங்களும் இருந்தாலும், அவற்றுக்கெல்லாம் இல்லாத தனிச் சிறப்பு காவிரி நதிக்கு மட்டும் உண்டு. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பதினெட்டாம் நாள், ‘பதினெட்டாம் பெருக்கு’ என்னும் இந்த விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஆறு மற்றும் நீர் நிலைகளின் ஓரம்தான் கொண்டாட வேண்டும் என்று இல்லை, வீட்டிலேயே கூட எளிமையான முறையில் கொண்டாடி மகிழலாம்.

Comments

பொ.பாலாஜிகணேஷ் says :

ஆடிப்பெருக்கின் சிறப்புகளை மிகச்சிறப்பாக விளக்கியுள்ளார் கோதண்டபாணி அவர்கள் மகிழ்ச்சி பாராட்டுக்கள்.

பா.கவிதா says :

#புண்ணியம் #பெருக்கும் #ஆடிப்பெருக்கு கட்டுரை படித்தேன் இவ்வளவு விஷயங்களா உள்ளது ஆச்சரியப்பட்டுப் போனேன் தொகுத்தளித்த #கோதண்டபாணி அவர்களுக்கு #நன்றியும் #பாராட்டும்.

ஆர்.வி.ராமானுஜம் says :

இன்றைய நாளின் சிறப்பான ஆடி 18 ஆம் நாள் பற்றிய பதிவு பல விவரங்களுடன் நமது முன்னோர்கள் காலம் தொடங்கி இன்றைய அடுக்கக வாழ்க்கை (வீட்டிலேயே எளிமையாகக் கொண்டாடலாம்வரை )பதிவு செய்துள்ளது சிறப்பாக உள்ளது எழுத்தாளர் திரு கோதண்டபாணி அவர்களுக்கு பாராட்டுக்கள்

எம். வசந்தா says :

நேரில் சென்று (இன்று) பார்த்த திருப்தி ஏற்பட்டது.

ரேவதி பாலு says :

நாட்டில் வளம் பெருக காவிரி அன்னை பாய்ந்து ஒடி வரும் ஆடிப் பெருக்கை ஒரு பண்டிகையாகவே நம் முன்னோர்கள் கொண்டாடி மகிழ்ந்தது அருமையாக விவரிக்கப் பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :