• அமரர் கல்கியின் கல்வெட்டுகள்

அன்பபே வழி!


அமரர் கல்கி

கலப்பு மணத்தினால் மட்டுமே சாதி வேற்றுமை அடியோடு ஒழிய முடியும் என்று அறிவாளிகள் எல்லாரும் சொல்கிறார்கள்.

இது உண்மைதான். ஆனால், கல்யாணம் என்னும் காரியத்தில், கல்யாணம் செய்துகொள்கிறவர்களின் விருப்பம் ஒன்று இருக்கிறது.

சாதி வேற்றுமையை ஒழிப்பதற்காக ஆண்களுக்கும் பெண்களுக்கும் கட்டாயக் கல்யாணம் செய்துவைக்க முடியுமா? முடியாது! அப்படிச் செய்வது முன்னேற்றத்தை நோக்கிப் போவதற்குப் பதிலாகக் காட்டுமிராண்டித்தனத் துக்குப் போவதாக முடியும்.

சமூகத்தில் ஆடவரும் பெண்டிரும் பல துறைகளிலும் சரிநிகர் சமானமாகப் பழகுவது அதிகமாக ஆக, கலப்பு மணங்களும் அதிகமாகும்.

திருமணம் செய்துகொள்வதில் யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால், கலப்பு மணங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலையை உண்டு பண்ணி உதவலாம்.

அந்தச் சூழ்நிலை சாதி வேற்றுமையைப் பற்றி ஓயாமல் பேசுவதாலும், சாதித் துவேஷத்தை வளர்த்து வருவதினாலும் ஏற்பட முடியாது.

கலப்பு மணம் செய்துகொள்கிறவர்களுக்கு உத்தியோகத்தில் சலுகை கொடுப்பதாகச் சொல்வது நகைக்கத்தக்க காரியம். உத்தியோக ஆசை காரண மாகக் கலப்பு மணம் நடந்தால், அந்த மணவாழ்க்கையும் உருப்படாது; உத்தி யோகமும் உருப்படாது. தகுதியற்றவர்களே உத்தியோகத்துக்கு வருவார்கள். நிர்வாகம் சீர்கெட்டுக் குடடிச்சுவராவதுதான் கண்ட பலனாகும்.

சாதி வேற்றுமையை இந்த நாட்டிலிருந்து ஒழிப்பதற்கு காந்தி மகான் காட்டிய அன்பு வழி ஒன்றுதான் தக்க வழியாகும்.

காந்தி மகான் காட்டிய வழியில் நடந்தபடியால் சென்ற முப்பது ஆண்டு களில் சாதி வேற்றுமை உணர்ச்சி வெகுவாகக் குறைந்துவிட்டிருக்கிறது. சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளில் சாதிக்காத காரியத்தைக் கடந்த முப்பது வருஷங்களில் சாதித்திருக்கிறோம். அதே அன்பு வழியைப் பின்பற்றினால் இன்னும் ஒரு முப்பது வருஷத்தில் சாதி வேற்றுமை நம் நாட்டிலிருந்து அடியோடு மறைந்தே போய்விடும்.

- கல்கி 1954, ஜனவரி 17 இதழிலிருந்து...

Comments

கே ஆர் எஸ் சம்பத் says :

66 வருடங்களுக்குப் பிறகு படிக்கிறோம். கடைசி வரிப்படி , சாதி வேற்றுமை நம் நாட்டிலிருந்து முற்றிலும் மறைய இன்னமும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? ஜாதி வாரியாக கணக்கெடுப்பு வேண்டும் என்கிறார்கள் . எந்த ஜாதிக்காரர்கள் எந்த ஏரியாவில் அதிகம் உள்ளார்களோ , அந்த ஜாதிக்காரரரை தேர்தல் வேட்பாளராக நியமிக்கிறார்கள் . கல்கி அவர்களின் எழுத்து விரைவில் நிஜமாகவேண்டும் என்பதே பிரார்த்தனை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :