• SPARKLES | மினுமினு

அது ஒரு கனா காலம்!


ஜெயசீலன் ஜவஹர்

பழமையான நினைவுகளை மனதில் இருந்து வெளிக்கொண்டு வருவது ஒரு மகிழ்ச்சியைக் கொடுக்கும்..அதிலும் பள்ளிப் பருவ வாழ்க்கையை யாராலும் மறக்கவே முடியாது.

அப்பொழுது நான் ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நேரம். ஒரு நாளைக்குப் பத்து பைசாதான் அப்பா பாக்கெட் மணியாகத் தருவார். என்றாவது ஒரு நாள் 25 பைசா கிடைத்தால் அன்றைக்கு எங்களுக்குத் தீபாவளிதான். தினம் கிடைக்கும் பத்து பைசாவுக்கு மிட்டாய் விற்கும் பாப்பா அக்காவிடம் போய் சவ் மிட்டாய் வாங்கி, கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துச் சாப்பிடுவதே தனி சுகம்!

சாதி பேதமில்லாமல் எல்லோரும் சந்தோஷமாக இருந்தது, அந்த ஆரம்பப் பள்ளிக் காலங்களில்தான்! என்னுடன் படித்த மாடசாமியை மறக்கவே முடியாது! வசதிகுறைவான வீட்டுப் பையன். ஒரு காலில் ஊனம். விந்தி விந்திதான் நடப்பான். ஆனால் அவன் மனதோ மலை அளவு உயர்ந்தது.

தன்னை எல்லோரும் போற்ற வேண்டும் என்பதற்காக எதையாவது செய்து கொண்டிருப்பான். அந்தக் காலத்திலேயே ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று வீட்டில் திருடிக் கொண்டுவந்து வகுப்பிலுள்ள அனைவருக்கும் குச்சி ஐஸ் வாங்கிக் கொடுப்பான் மாடசாமி. நாங்கள் அவனை எவ்வளவு கேலி, கிண்டல் செய்தாலும் கோபப்பட மாட்டான். அவன் வாங்கித் தரும் தின்பண்டத்துக்காகவே அவனைச் சுற்றி ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும்.

அப்புறம் படிப்பு முடித்து அவரவர் தம் பாதைகளில் வாழ்க்கை பயணம் மேறகொண்டதில் மாடசாமி பற்றி மறந்தே போனது!

ஆனால். சொந்த ஊருக்கு வரும்போதெல்லாம் அவன் நினைவு எட்டிப் பார்க்கும்! இப்போது என்ன செய்கிறானோ?!

இந்த முறை விடுமுறைக்கு ஊருக்கு காரில் வரும்போது, தூரத்தில் ஒரு உருவம் சின்னதாக விந்தி விந்தி சென்று கொண்டிருந்தது. ஒருவேளை மாடசாமியாக இருக்குமோ?

காரை அருகில் கொண்டுபோய் நிறுத்தி விட்டு பார்த்தால் மாடசாமியேதான்!

"மாடசாமி, என்னைத் தெரிகிறதா?" –நாம் கேட்டவுடன் அவன் ஆச்சரியத்துடன் பார்த்தான். என்னை அடையாளம் கண்டுகொண்டான். "நீ சவுகர்யம் தானே?" ஆச்சர்யத்துடன் கேட்டான்.

சின்னச் சின்ன உரையாடல்கள் முடித்த பிறகு “இப்பொழுது என்ன செய்கிறாய்?” என்று கேட்டேன். ஏனென்றால் அழுக்குப் படிந்த லுங்கி, அழுக்கான சட்டை. இன்னும் மாடசாமி வறுமையில்தான் இருக்கிறான் என்பதைச் சொல்லாமல் சொல்லிற்று.

"என்னப்பா செய்ய... ஓட வெட்டிப் பிழைக்கிறேன்" என்று சொன்னபொழுது லேசாக எனது மனம் கனத்துப் போனது. வெட்கப்பட்டுக் கொண்டே பேசினான். கூச்சத்துடன் விடைபெற்றுச் சென்றான்.

நான் காரில் ஏறி உட்கார்ந்தேன். சட்டென்று என்னை நினைத்து எனக்கே வெட்கமாக இருந்தது! எட்டு வருடம் கூடப் படித்த தோழனிடம் ஏன் என்னால் மனம்விட்டுப் பேச முடியவில்லை? அவன் வறுமையான தோற்றம் காரணமா? உதவி ஏதாவது கேட்டு விடுவானோ என்ற பயமா? பள்ளியில் அவ்வளவு தன்னம்பிக்கையுடன் இருந்த மாடசாமியும் இப்போது ஏன் என்னிடம் சகஜமாகப் பேச முடியவில்லை?

இருவருமே எங்கள் பள்ளிப் பருவ மனோநிலையைத் தொலைத்ததுதான் காரணமா?

மனவருத்தத்துடன் காரின் ரியர்வியூ கண்ணாடி வழியாகப் பார்த்தேன். தொலைவில் மாடசாமி விந்தி விந்தி நடந்து போய்க் கொண்டிருந்தான்.

Comments

கே ஆர் எஸ் சம்பத் says :

பொதுவான மனித சுபாவத்தை இந்த கதை தெரியப்படுத்தியுள்ளது பணமிருந்தால் மனம் இருக்காது என்பார்கள். மாடசாமிக்கு பொருள் உதவியாவது செய்திருக்கலாமே என்று மனம் ஏங்கியது .

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :