• தீபம் - ஆன்மீகம்

ஆழ்வார் பாசுரங்களும் அழகிய உவமைகளும் : 10 - உலகளவும் உண்டோ உன் வாய்?


- லதானந்த்

காஞ்சிபுரம் அருகே உள்ள வைணவத் திருத்தலமான, ‘சொன்னவண்ணம் செய்தான்’ (யதோத்காரி) ஆலயத்துக்கு அருகே இருக்கும், ‘திருவெஃகா’ திருப்பொய்கை ஒன்றில் தாமரை மலரில் அவதரித்தவர் பொய்கையாழ் வார். பொய்கையில் அவதரித்ததே அவரது பெயருக்குக் காரணமாக அமைந்தது. திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான, ‘பாஞ்சஜன்யம்’ என்னும் சங்கின் அம்சம் இவர் என்று அடியவர்கள் போற்றுகின்றனர்.

இவர் தமது நூறு பாடல்களால் மாலவனை பாடிப் பரவசமாகியிருக் கிறார். இந்தப் பாடல்கள், ‘முதல் திருவந்தாதி’ எனப்படுகின்றன. மஹாவிஷ்ணுவின் பத்து அவதார மஹிமைகளையும் இவர் பாடல்களில் வடித்திருக்கிறார். இவர் வாழ்ந்த காலகட்டம், ஐந்திலிருந்து ஏழாம் நூற்றாண்டுக்குள் இருக்கக்கூடும் என கணிக்கப்படுகிறது. இவரும், பேயாழ்வார் மற்றும் பூதத்தாழ்வாரும் சமகாலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இவரது பாசுரங்களின் உவமைகள் அழகியல் நிரம்பியவை; அற்புதமானவை. அவற்றில் சில இதோ...

தமது முதல் பாசுரத்தில் பூமியை அகல் விளக்கு எனவும், பூமியைச் சூழ்ந்துள்ள கடல் பகுதியை நெய்யாகவும், அந்த விளக்கில் இருந்து தகத்தகாயமாக வெளியாகும் ஜோதியை சுடர் விடும் சூரியனாகவும் உவமிக்கிறார். திடப்பொருளாக இருப்பதால் நிலத்தை விளக்கு என்றும், திரவப் பொருளாக இருப்பதால் கடல் நீரை நெய் என்றும், ஒளி வீசும் தன்மையுடையதால் சுடருக்கு சூரியனையும் உவமையாக்கியிருக்கிறார் என்று பாசுரத்துக்கு விளக்கம் அளித்த வைணவப் பெரியவர் ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் தெளிவுரை கூறுகிறார்.

தமது சொல்லுக்கு மாலையையும் உவமையாக்கி உள்ளம் பூரிக்கிறார். தமக்கு வரும் இடர்களுக்குக் கடலை உவமை சொல்கிறார். ஆஹா! ஒரே பாசுரத்தில்தான் எத்தனை உவமைகள் துள்ளி விளையாடுகின்றன!

‘வையம் தகளியா, வார்கடலே நெய்யாக,
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழியானடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று’

ஐம்பொறிகளை வாசல்களுக்கு இணையாக்குகிறார் இன்னொரு பாசுரத் தில். அவற்றைத் தமது கருணை என்னும் போர்க்கதவுகளால் இறைவன் மூடிவிடுகிறார் என்கிறார். இதனை ஆலமர நிழலில் அமர்ந்து சனகாதி முனிவர்கள் நான்கு பேருக்கும் உபதேசம் செய்த சிவபெருமானும் பூரணமாக உணர்ந்துள்ளார் என்ற கருத்தைப் பொய்கையாழ்வாரின் பின்வரும் இலக்கிய நயம்மிக்க பாடல் பேசுகிறது :

‘நெறிவாசல் தானேயாய் நின்றானை, ஐந்து
பொறிவாசல் போர்க்கதவம் சார்த்தி, - அறிவானாம்
ஆலமர நீழல் அறம்நால்வர்க் கன்றுரைத்த,
ஆலமமர் கண்டத் தரன்.’

‘கண்ணா! நீ குழந்தையாக இருந்தபோது நிலம், மலை, கடல், காற்று, ஆகாயம் என எல்லாவற்றையும் விழுங்கினாய் என்கிறார்களே? சிறிய வாய்தானே இருக்கிறது உனக்கு? உலகம் அளவுக்கா உன் வாய் விரிந்திருந்தது?’ என்று அகிலத்தையும் சகலத்தையும் உண்ட கண்ணனின் திருவாய்க்கு உலகத்தையே உவமை சொல்லி மகிழ்கிறார் ஆழ்வார்.

‘உலகளவும் உண்டோ உன் வாய்?’ என்பது ஆழ்வாரின் அழகிய உவமை வாக்கு!

வெண்ணையைத் திருடி உண்டதற்காகத் தாம்புக் கயிற்றால் கண்ணனை யசோதை கட்டிவைத்ததைப் பாடவந்த அடியாருக்கு யசோதையின் தோள்கள் மூங்கில் போலத் தோற்றமளித்திருக்கிறது. ‘வெறிகமழும் காம்பேய் மென் தோளி’ என்பது ஆழ்வாரின் உவமை ஜாலம்.

மலைகளைப் பார்த்திருப்பீர்கள்! மலையின் மீது தாவரங்கள் அடர்ந்து செழித்து வளர்ந்திருக்கும்போது பச்சை வண்ணத்தால் அந்த மலையில் பூச்சுப் பூசியிருப்பதைப் போல தோன்றுமல்லவா? மாயவனின் மேனி வண்ணமும் அப்படித் தெரிகிறது பொய்கையாழ்வாரின் கண்ணுக்கு. ‘வரை மேல் மரகதமே போல’ என்பது அவரின் இனிய உவமை.

(உவமைகள் தொடரும்)

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :