• தீபம் - ஆன்மீகம்

ஆழ்வார் பாசுரங்களும் அழகிய உவமைகளும் : 9 - பனிமுகில் வண்ணனைப் பணிவோம்!


- லதானந்த்

திருமங்கையாழ்வார் திருமாலின், ‘சார்ங்கம்’ எனப்படும் வில்லின் அம்சம் எனப் போற்றப்படுகிறார். இவர், வைணவ அடியார்களுக்குத் தினமும் அன்னதானம் செய்வதிலேயெ தமது செல்வத்தையெல்லாம் இழந்தார். ஒருகட்டத்தில் களவுத் தொழில் புரிந்து அடியார் சேவையைத் தொடர்ந்தார். அப்படி ஒரு சமயம் மாறுவேடத்தில் வந்த திருமாலிடமே கொள்ளையடிக்க முயன்று, பின் நாரண உபதேசம் கேட்டுத் தெளிந்தார். அவரது பாசுரங்களில் மிளிரும் உவமைகள், எண்ணி எண்ணி மகிழத் தக்கன.

இமயமலையை வர்ணிக்க விழையும் திருமங்கையாழ்வாருக்கு அங்கே இருக்கும் குகைகள் நினைவுக்கு வருகின்றன; குகைகளில் வசிக்கும் நாகம் நினைவுக்கு வருகிறது; அந்த நாகம் பசியால் பெருமூச்சு விடுவதும் நினைவுக்கு வருகிறது. அந்தக் குகையின் இருட்டு, எப்போதும் இரவு சூழ்ந்திருப்பதைப் போல இருக்கிறதாம் ஆழ்வாரின் கண்களுக்கு! அந்த மலையில் இருக்கும் பரந்தாமனைப் பார்த்தால் மேகத்தைத்தான் உவமை சொல்லத் தோன்றுகிறது. வெறுமனே, ‘முகில் போன்றவர்’ என்றால் போதுமா? குளிர்ச்சியான குணமுடையவரல்லவா எம்பெருமான்? ‘பனி முகில்’ எனப் பக்குவமான உவமையோடு பாடிப் பரவசமாகிறார். இதோ அந்தப் பாசுரம் :

‘இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை இரும்பசியது கூர
அரவம் ஆவிக்குமகம் பொழில் தழுவிய அருவரை யிமயத்து
பரமனாதி எம்பனி முகில் வண்ணன் என்று எண்ணி நின்று இமையோர்கள்
பிரமனோடு சென்று அடி தொழும் பெரும் தகைப் பிரிதி சென்று அடை நெஞ்சே’

இன்னொரு பாசுரத்தில் இமயமலையில் இருக்கும் இறைவனை, மதி மயங்கிய வண்டுகளைப் போல அல்லாமல், மதி நுட்பத்தோடு துதிக்க வேண்டும் என்பதைச் சுவைபடச் சொல்கிறார். சரி, வண்டுகள் எப்படி, எதைப் பார்த்து மதி மயங்கினவாம்? அங்கே மகரந்தம் நிரம்பிய அசோக மலர்கள் விரிந்திருப்பதைப் பார்த்து, ‘அட, இவை நெருப்பைப் போல இருக்கின்றனவே?’ என மருண்டு அறிவற்ற வண்டுகள் மயங்கின என்கிறார் திருமங்கையாழ்வார்.

‘ஓதி ஆயிர நாமங்கள் உணர்ந்தவர்க்கு உறுதுயரடையாமல்ஏதமின்றி
நின்றருளும் நம்பெருந்தகை இருந்த நல் இமயத்து

தாது மல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற தழல்புரை எழில் நோக்கி

பேதை வண்டுகள் எரியென வெருவரு பிரிதி சென்றடை நெஞ்சே’

என்ற வரிகளில்தான் அந்த உவமை உள்ளம் மகிழ வைக்கிறது.

பத்ரிநாத் என்னும் திருவதரிக்குக் காலம் தாழ்த்தாமல் சென்று, இறைவனை தரிசிக்க வேண்டும் என வலியுறுத்துகிறார் ஆழ்வார். கால்கள் நன்றாக இருந்தால்தானே நடக்க முடியும்? முறிந்த காலால் விரும்பிய வண்ணம் நடக்க முடியாதன்றோ? அப்படி முறிந்த காலை உவமையாக்கி அதுபோலச் சேதாரம் அடையும் முன்னே திருவதரிக்கு வந்து எம்பெருமானைச் சேவித்துவிடுங்கள் என்று அறிவுறுத்துகிறார்.

‘முற்ற மூத்துக் கோல்துணையா முன்னடி நோக்கி வளைந்து,
இற்ற கால்போல் தள்ளி மெள்ள விருந்தங் கிளையாமுன்,
பெற்ற தாய்போல் வந்த பேய்ச்சி பெருமுலை யூடு, உயிரை
வற்ற வாங்கி யுண்ட வாயான் வதரி வணங்குதுமே.’

அதுமட்டுமில்லை, ‘முதுமை காரணமாகத் தசைகள் வலுவிழந்து, நடக்கும் வழியைப் பார்க்க விழிகள் சிரமப்படும் காலத்துக்கு முன்னரே திருவதரிக்கு வந்து சேருங்கள்’ என அறைகூவல் விடுக்கிறார். இந்தச் சமயத்தில் உடலின் நரம்புகள் முறுக்கேறி தசைகளுக்கு வெளியில் தெரியும் நிலைமையை விவரிக்கிறார். எப்படி? ‘உடலின் நரம்புகள் உறிக் கயிறுகளைப்போல தசைகளுக்கு மேலே வரும்’ என்கிறார்.

‘உறிகள் போல் மெய் நரம்பெழுந்து, ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி
நெறியை நோக்கி கண் சுழன்று நின்று நடுங்காமுன்...’

என்பது அவர் கூரும் நல்லுவமைச் சொல்லாடல்!

இன்னொரு பாசுரத்தில், ‘கால்கள் வலுவிழந்ததால் தடியே காலாக மாறும் நிலை வருவதற்கு முன் திருவதரிக்கு வாருங்கள்’ எனச் சொல்கிறார். வயோதிகம் அடைந்து நடக்கும்போது ஊன்றுகோல் இன்னொரு காலாக இருப்பதை உவமை நயத்தோடு விவரிக்கிறார் ஆழ்வார்.

‘தண்டு காலா ஊன்றியூன்றித் தள்ளி நடவாமுன்
வண்டுபாடும் தந்துழாயான் வதரி வணங்குதுவே’

திருவதரியில் எழுந்தருளியுள்ள பெருமானைப் பற்றி தம்முடைய பாமாலையில் உள்ள பாடல்களைப் பாடுவோருக்கு மறுபிறவி இல்லை யெனச் சொல்லவரும் திருமங்கையாழ்வார், ‘அந்தத் திருவதரி அமைந்திருக்கும் கங்கையின் நீர் ஸ்படிகம் போலத் தெளிந்திருக்கிறது’ என்கிறார். அதே பாடலில், பெருமானின் மேனியின் வண்ணமான கருமைக்குக் கருங்கடலை உவமையாக்குகிறார்.

வருந்திரை மணி நீர்க் கங்கையின் கரைமேல் வதரி ஆச்சிரமத்துள்ளானை
கருங்கடல் முந்நீர் வண்ணனை எண்ணி கலியன் வாய் ஒலி செய்த பனுவல்
வரஞ்செய்த ஐந்தும் ஐந்தும் வல்லார்கள் வானவருலகுடன் மருவி
இருங்கடல் உலகம் ஆண்டு வெண் குடைக்கீழ் இமையவர் ஆகுவர் தாமே’

என்பது திருமங்கையாழ்வாரின் உவமை அணி சொல்லும் பாசுர வரிகள்!

(உவமைகள் தொடரும்)

Comments

பொ.பாலாஜிகணேஷ் says :

அற்புத தொடர்.....

G Srikanth says :

அருமை தொடரட்டும் உமது இறைப்பணி

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :