• GLITTERS | பளபள

ஒலிம்பிக்ஸ்: பிகினி உடை தவிர்த்த ஜெர்மனி ஜிம்னாஸ்டிக் பெண்கள்!


கே. சுபஸ்தினி





டோக்யோ ஒலிம்பிக்ஸில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்ற ஜெர்மனி வீராங்கனைகளின் உடை இந்தமுறை வித்தியாசமாக இருந்தது. முழு உடலையும் மறைக்கும் வகையில் லெக்கின்ஸ் மாதிரியான உடையணிந்து போட்டிகளில் பங்கேற்றனர்.

உடலை வளைத்து ஆடும் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பெண்கள் உடலை வளைத்து ஆடும்போது, பழைய டைப் உடைகள் பெண்களின் உடலை வெளிப்படுத்தும் கண்காட்சியாக மாறிவிட்டது. அதனால், இந்த மாதிரி முழு உடலையும் மறைக்கும் உடைக்கு மாறி விட்டோம் என்கிறார்கள் ஜெர்மனி ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள்.

ஜிம்னாஸ்டிக் போட்டிகள் தங்களது திறனைக் காட்டுவதற்காகத்தானே உடல் வனப்பைக் காட்டுவதற்கு அல்ல என்று கூறி, இடுப்புக்குக் கீழே கால்களை முழுமையாக மூடும் வகையிலான ஆடைகளை அணிந்து டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பங்கெடுத்திருக்கிறார்கள். ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள் இப்படிப்பட்ட உடை அணிவது இதுவே முதல் முறையாகும்.

பொதுவாக ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பெண்கள் கால்கள் முழுவதும் தெரியும்படியாக பிகினி கட் ஆடைகளை அணிவதுதான் வழக்கம். சில போட்டிகளில் மதம் மற்றும் மரபுக் காரணங்களுக்காக உடைகளில் சில மாற்றங்களைச் செய்ய சர்வதேச ஜிம்னாஸ்டிக் கூட்டமைப்பு அனுமதி வழங்கியிருக்கிறது. ஆயினும் முழு உடலையும் மறைக்கும் ஆடைகளை இதுவரை யாரும் அணிந்ததில்லை.

இந்த முறை ஜெர்மனி வீராங்கனைகள் இப்படிப்பட்ட உடையைத் தேர்வு செய்ய என்ன காரணம்?

ஜெர்மன் பெண்கள் எடுத்த இந்த உடை தொடர்பான முடிவுக்கு பண்பாடு அல்லது மதக் காரணங்கள் எதுவுமில்லை. மாறாக ஜிம்னாஸ்டிக்கில் பாலியல் ரீதியிலான முறைகேடுகள் அதிகரித்திருப்பதை எதிர்க்கும் வகையிலேயே இந்த முடிவை எடுத்திருப்பதாக ஜெர்மன் ஜிம்னாஸ்டிக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.

சர்வதேச ஜிம்னாஸ்டிக் கூட்டமைப்பின் விதிகளின்படியே ஜெர்மனி வீராங்கனைகளின் புதிய ஆடையும் வடிவமைக்கப் பட்டிருந்தது.

ஜெர்மனி பெண்கள் ஜிம்னாஸ்டிக் அணியில் சாரா வோஸ், பாவ்லின், எலிசெப்த் சீட்ஸ், கிம் பூய் ஆகிய நால்வர் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் நால்வரும் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான முழு உடலையும் மறைக்கும் ஆடையை அணிந்திருந்தனர்.

‘’டோக்கியோ கிளம்பு முன்ன்ரே ஆடை தொடர்பாக அணியில் கலந்தாலோசித்து, இறுதியில் முழு உடலையும் மறைக்கும் ஆடையை அணிய முடிவெடுத்தோம்’’ என்கிறார் சாரா வோஸ்.

கடந்த சில ஆண்டுகளாக ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் பாலியல் புகார்கள் எழுந்து உலலை அதிர்ச்சியுறச் செய்தது. குறிப்பாக, அமெரிக்காவில் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிய 2016-ஆம் ஆண்டு அம்பலமானது. சிறுமிகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த பாலியல் குற்றச்சாட்டில் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் மருத்துவர் லேரி நாசர், பயிற்சியாளர்கள், பயிற்சிக்கூட உரிமையாளர்கள், மருத்துவர்கள் என பலருக்கும் இதில் தொடர்பு இருந்தது அம்பலமானது. இந்த செய்தி உலகம் முழுவதையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அமெரிக்க முன்னணி ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான சிமோன் பைல்ஸ் உள்ளிட்டோர் பாலியல் புகார் அளித்தனர். விளையாட்டுத் துறை வரலாற்றில் மிகப் பெரிய பாலியல் மோசடியாக இது கருதப்படுகிறது. இந்த முறைகேடுகள் அம்பலமான பிறகு நடக்கும் முதல் ஒலிம்பிக் போட்டி இது என்பதால், ஜெர்மனி வீராங்கனைகளின் ஆடைத் தேர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. .

ஜெர்மனி வீராங்கனைகள் முழுக் காலும் தெரியும் வகையிலான பிகினி உடையை நிராகரித்துவிட்டு, புதிய உடையைத் தேர்வு செய்தது நார்வே, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் வீராங்கனைகள் மத்தியிலும் ஆதரவைப் பெற்றிருக்கிறது.

‘’ஜெர்மனி வீராங்கனைகளின் முடிவு பாராட்டுக்குரியது’’ என்று நார்வே வீராங்கனை ஜூலி எரிக்சன் கூறியுள்ளார்.

அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ்சும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். "தங்களதுக்கு வசதியான ஆடையை அணியும் அவர்களது முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். ஆனால் எனக்கு தற்சமயம் பிகினி கட் உடையே விளையாட்டின்போது வசதியாக இருக்கிறது’’ என்று சொல்லியிருக்கிறார்.

எது எப்படியோ.. இந்த முறை டோக்கியோ ஒலிம்பிக்ஸில் ஜெர்மனி ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறவில்லை என்றாலும், அவர்களது ஆடை எதிர்ப்பு அடுத்த கட்டத்துக்குச் சென்றிருக்கிறது.

Comments

Nirmala Rani says :

குழந்தை பாலியல் துன்புறுத்தலை முழு உடை அணிவதால் தவிர்க்க முடியாது. ஜெர்மனி வீராங்கனைகளின் இந்த முடிவுக்கு ஒரு பின்னணி இருக்கிறது. ஜிம்னாஸ்டிக் ஸ்டில் ஆண்கள் ஷார்ட்ஸ் போடலாம் ஆனால் பெண்கள் மட்டும் தான் பிகினி போட வேண்டும் என்பது விதி. கைப்பந்து விளையாட்டிலும் இதே நிலைதான். இந்தமாதத் தொடக்கத்தில் நார்வே நாட்டு பெண்கள் கைப்பந்து விளையாடும் போது இந்த விதியை எதிர்க்கும் வண்ணம் ஷார்ட்ஸ் அணிந்து விளையாடினார்கள். அதற்கு சர்வதேச கைப்பந்து கழகம் அபராதம் விதித்தது. கைப்பந்து வீராங்கனைகளை ஆதரிக்கும் வண்ணம்பிரபல பாப் பாடகி பிங்க் இந்த அபராதங்களை தானே கட்டுவதாக முன்வந்தார். இது ஒரு விவாதத்தை உலக அளவில் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்துதான் ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள் முழு உடை அணிந்தனர். இது உடலை மறைப்பதற்காக என்பதைவிட சௌகரியமான உடை அணிவது என்ற காரணத்திற்காக நடைபெற்றது. ஏற்கனவே பெண்கள் அணியும் உடைதான் அவர்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்முறைக்கு காரணம் என்ற தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடிய இந்த சமுதாயத்தில், வெளியிடப்பட்ட செய்தி, படிப்பவர்களுக்கு தவறான கண்ணோட்டத்தை தந்து விடக் கூடாது என்பதற்காகவே இந்த விளக்கம். நன்றி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :