• தீபம் - ஆன்மீகம்

வியக்க வைக்கும் சூரியன் கோயில்!


- ராஜி ராதா

அகமதாபாத்திலிருந்து 75 கி.மீ. தொலைவில், புஷ்பாவதி நதிக்கரையில் அமைந்துள்ளது மோதரா சூரியன் கோயில். சோலங்கி ராஜாக்களின் காலத்தை, ‘குஜராத்தின் பொற்காலம்’ எனக் கூறுவர். முதலாம் பீம தேவனின் மனைவியால் கி.பி. 1026ல் இந்தக் கோயில் எழுப்பப்பட்டதாக வரலாறு.

சோமநாதபுரத்தில் உள்ள சிவன் கோயிலை, கஜனி முகமது கொள்ளை யடிக்க வந்தபோது, வழியில் இந்தக் கோயிலைப் பார்த்து, கொஞ்சம் இடித்துச் சென்றான். அடுத்து, அலாவுதின் கில்ஜி சோமநாதபுரத்தை மீண்டும் கொள்ளையடிக்க வந்தபோது, இந்தப் பொக்கிஷத்தின் மேலும் பல பகுதிகளை இடித்துக் கொள்ளையும் அடித்தான். பிறகு, இந்து மன்னர்கள் இந்தக் கோயிலை ஓரளவுக்குப் புதுப்பித்து, இன்றைய நிலைக்குக் கொண்டு வந்து வைத்துள்ளனர்.

கோயில் சூரிய குண்டம், சபா மண்டபம், குடா மண்டபம் என மூன்று பகுதிகளைக் கொண்டது. சூரிய குண்டத்தை, ‘ராம குண்டம்’ எனவும் அழைப்பர். ஒரு காலத்தில் ஸ்ரீராமர், தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்க, இதன் கரையில் பெரும் யாகம் ஒன்றைச் செய்தாராம்.

கோயிலின் குளம் ஆழமானது. இறங்க ஏராளமான படிகள் உள்ளன. இதன் நான்கு புறமும் ஏராளமான சிற்பங்களைக் கொண்ட சிறு சன்னிதிகள் உள்ளன. அவற்றை ஏறிப் பார்க்க, பிரமிட் வடிவில் படிகள் உள்ளன. இந்தக் குளமே வடிவியல் கலை பாணியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தச் சன்னிதிகளில் விஷ்ணு, கணபதி, பார்வதி, நடராஜர் உட்பட, பல அழகிய வேலைப்பாடுகளைக் கொண்ட சிறு சிறு சிலைகளைக் காணலாம்.

அடுத்து, சபா மண்டபம் செல்லும் வழியில் இரண்டு அழகிய தோரண வளைவுகளைக் காணலாம். கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்தக் கோயில் மொத்தமும், ‘பளிச்’ மஞசள் காரைக் கற்களால் எழுப்பப்பட்டுள் ளது. முன் மண்டபமும், கருவறையும் சதுர வடிவ அமைப்பில் உள்ளன. ஆனால், அசப்பில் பார்த்தால் செவ்வகம் போல் தெரியும். மண்டபம், கருவறை ஆகியன உயர்த்தப்பட்ட மேடையின் மேல் அமைந்துள்ளன.

சபா மண்டபத்தில் அமைந்த 52 தூண்கள், 52 வாரங்களைக் குறிப்பதாகக் கூறுகின்றனர். இவற்றில் ராமாயணம், மகாபாரதம் மற்றும் கிருஷ்ண லீலா சம்பந்தப்பட்ட அற்புதக் காட்சிகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. சபா மண்டபத்தையும் கருவறையையும் ஒரு சிறு வழிப்பாதை இணைக் கிறது.

கருவறையை, ‘குடா மண்டபம்’ என அழைக்கின்றனர். இதுதான் சூரியன் சிலை இருந்த இடம். இன்று இது வெறுமையாக உள்ளது. சூரியன் தேரில் அமர்ந்திருக்க, அவனுடைய தேரோட்டி அருணன், பூட்டிய குதிரைகளை ஓட்டியபடி என எல்லாமே இங்கு ஒரு காலத்தில் தங்கத்தில் இருந்தன. இதனை கஜனி முகமது உடைத்து எடுத்துக் கொண்டு சென்று விட்டான். ஆக, அதன்பின் இன்று வரை, கொனார்க் மாதிரியே இங்கும் கருவறையில் சிலை கிடையாது.

கருவறையின் மேல் விதானத்தில் கவிழ்ந்த தாமரையை அழகிய சிற்பமாகக் காணலாம். விதானத்தில் ஒரு சிறு துவாரம் உள்ளது. இதன் வழியாக சூரியனின் கதிர்கள், வருடத்திற்கு இருமுறை (மார்ச் 20 மற்றும் செப்டம்பர் 21) கருவறையினுள் மூலவர் சூரியன் மீது விழுமாம். கோயிலின் வரலாறு இந்தத் தகவலைச் சொல்கிறது.

கருவறையைச் சுற்றி ஒரு சிறு பிராகாரம் உள்ளது. கருவறைக்கு வெளியே அமைந்த சுவர்களை நிதானமாகக் காண வேண்டும். சூரியனின், பன்னிரெண்டு நிலைகளை அவை பிரதிபலிப்பதுடன், திக் பாலர்களையும் நான்கு கைகளுடன் இங்கு காணலாம். வருணன், அக்னி, கணபதி, சரஸ்வதி உட்பட பல சிற்பங்களையும் தரிசிக்கலாம்.

ஜனவரி மூன்றாம் வாரத்தில் இந்தக் கோயிலில் மூன்று நாட்கள் நாட்டியாஞ்சலி விழா நடைபெறுகிறது. கோயில், தொல்பொருள் இலாகா வசம் உள்ளது. ஆக, இது தற்போது காட்சிப்பொருள் மட்டுமே.

கோயிலை, வழிகாட்டி ஒருவரின் துணையுடன் பார்த்தால், சிற்பங்களை மேலும் நன்றாக அறிந்து, ரசித்து வியக்கலாம். கோயிலுக்கு வெளியே சுற்றி அழகான தோட்டம் உள்ளது. அதில் ஏராளமான பூ மரங்களில் பறவைகளின் சப்தம் ஒலிக்கிறது. ஆனால், கோயில் மட்டும் அமைதி யாகக் காட்சி தருவது தனி அழகு!

Comments

பொ.பாலாஜிகணேஷ் says :

அரிய தகவல்களின் தொகுப்பு

selvaganapthy says :

Neatly written article

மகாலட்சுமி சுப்பிரமணியன் says :

சூரியக்கோவிலைப் பற்றி படித்து வியந்தோம். அதன் சிறப்பைப் படித்ததும் நேரில் சென்று பார்த்து தரிசிக்க ஆவல்கொண்டேன்.

கிருத்திகா says :

தெரியாத பல தகவல்களைத் தெரிந்துக் கொண்டேன்...அருமையான படைப்பு...நன்றி..

Prakash says :

Very informative and nice article

எஸ் மாரிமுத்து. says :

ஆச்சரியமூட்டியது தகவல்கள் அருமை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :