• GLITTERS | பளபள

இந்திய எல்லையில் விமானதளம்: மீண்டும் வம்பிழுக்கும் சீனா?


கட்டுரை: ராஜ்மோகன்

இந்தியா - சீனா எல்லையில் மீண்டும் பதட்டம் ஆரம்பமாகியுள்ளது. இந்தியாவின் லடாக் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சீனாவின் ஷியாங்ஜிங் மகாணத்தில் சீனா தனது விமானப்படை கட்டமைப்பை கூடுதல் வலிமைப்படுத்தத் துவங்கியுள்ளதாக உளவுத்துறை மூலம் இந்திய அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் இந்தியா அந்த பகுதியில் தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சுமார் 3440 கிலோ மீட்டர் நீளம் எல்லைப் பகுதி விரிவடைந்து கிடக்கிறது. இந்த பகுதிகளில் இந்திய எல்லைக்குள் ஊடுருவி தங்களின் கொடிகளை நிறுத்தி அதனை தங்கள் பகுதி என்று வம்பிழுப்பது சீனாவின் வாடிக்கையாகவே மாறி வருகிறது. இதனால் சமீபகாலமாக இந்திய சீன உறவுகள் மிகவும் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றன.

1962 ஆம் ஆண்டு நிகழ்ந்த பெரும் போருக்கு பின்னர் இந்தியாவிற்கு சீனாவிற்கும் நேரடியான போர் எதுவும் நடைபெறவில்லை. அன்று செய்துகொண்ட ஒப்பந்தங்களின் படி எந்த சூழலிலும் இரண்டு நாடுகளும் ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்ற உறுதிமொழியை கடைபிடித்து வந்தன. பல கடுமையான சூழல்களில் கூட இது தீவிரமாக பின்பற்றப்பட்டது.

இருப்பினும் சீனா இந்திய எல்லைக்குள் நுழைவதும் பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் பின்வாங்குவதும் என 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆடுபுலியாட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த ஆட்டத்தின் ஒரு மோசமான நிகழ்வு கடந்த ஆண்டு ஜூனில் கல்வான் பள்ளதாக்கில் நிகழ்ந்தது. லடாக் பகுதியில் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன துருப்புகளை பின்வாங்கச் செய்ய பேச்சுவார்த்தைக்கு சென்ற இந்திய வீரர்கள் பேச்சுவார்த்தைக்கு சென்ரனர். அவர்களுடன் மோதலில் ஈடுபட்டது சீன ராணுவம். முந்தைய ஒப்பந்தங்களின் படி ஆயுதங்களை பயன்படுத்தகூடாது என்ற விதி இருந்ததினால் இரு தரப்பினரும் கைகளாலும், கம்பிகள், கட்டைகளாலும் மோதிக் கொண்டனர். இதில் 20 க்கும் அதிகமான இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தமது இழப்பை இந்தியா வெளிப்படைத் தன்மையுடன் அறிவித்தது. ஆனால் சீன தரப்பில் இழப்புகள் பற்றி எதுவும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இருப்பினும் சீனதரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கும் என்று உலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்த நிகழ்வுக்கு பிறகு சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே போர் சூழல் அதிகரித்தது. அதேசமயம் கொரோனாவின் தீவிரம் அதிகரித்தது.. இந்தியாவில் சீன பொருட்களுக்கு எதிரான அலை அதிகரிக்க தொடங்கியது போன்றவை காரணமாக சீனா மெல்ல படிய தொடங்கியது. இருதரப்பு ராணுவ அதிகாரிகளும் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னர் இந்திய எல்லை ஆக்கிரமிப்பை விலக்கி பின்வாங்கியது சீனா.

இப்போது இந்திய எல்லைப் பகுதியில் சீனா புதிதாய் உருவாக்க தொடங்கியிருக்கும் விமானப்படை தளங்களால் மீண்டும் பதட்ட நிலையை நோக்கி நகரத்தொடங்கியுள்ளது.

லடாக்கின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள சீனாவின் ஷியாங்ஜிங் மகாணத்தில் தனது விமானப் படைத் தளத்தை நிறுவத் தொடங்கியுள்ளது சீனா. ஏற்கனவே சீன ஆக்ரமிப்புக்கு உள்ளாகியுள்ள திபெத், மற்றும் இந்திய எல்லையான லடாக், உத்திரகண்ட் ஆகிய பகுதிகளில் ஏழு விமான தளங்களை வைத்துள்ளது சீனா. ஹட்டன் பேஸ், நிகாரி குன்சா விமானப்படை தளம்,ஷிகேட்சி விமானப்படைத்தளம், நியௌன்சி விமானப்படை தளம், சாம்டோ பங்க்டா விமாப்படைத் தளம் என இந்த ஏழு இடங்களை எளிதில் இந்தியாவினால் மடக்கி அடிக்க முடியும். ஒருவேளை போர் நிகழ்தால் இந்தியாவின் விமானப் படை இந்த இடங்களை எளிதில் முடக்க முடியும்.

காரணம் - இந்தியாவும் தனது ராணுவ கட்டமைப்பை அதிகரிக்க தொடங்கிவிட்டது. ஏற்கனவே அம்பாலாவில் இருந்து ரபேல் வகை போர் விமானங்களை சீன எல்லைக்கும் பாகிஸ்தான் எல்லைக்கும் குறிவைத்தார் போல் நிறுத்தியுள்ளது. இந்நிலையில்தான் சீனா புதிதாக மேலும் ஏழு விமானப் படை தளங்களை அமைக்க தொடங்கியுள்ளது. அதாவது ஏற்கனவே உள்ள ஏழு தளங்கள் ஒருவேளை தாக்கப்பட்டால், இந்த புதிய படைதளங்கள் உடனே செயல்பட தொடங்கும் வகையில் அமைக்கப் பட்டு வருகின்றன. அதுவும் - இந்திய விமானப்படையின் குறியில் இருந்து மறைக்கும் இலகுவோடு இவை அமைப்பட்டு வருவதாக இந்திய அதிகாரிகள் தகவல் சேகரித்து வருகின்றனர்.

சீனாவின் ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாக கவனித்து வரும் இந்தியா பதிலுக்கு தனது படைகளை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே அம்பாலா, ஹசிர்புரா ஆகிய இடங்களில் ரபேல் வகை விமானங்கள் கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றன.தவிர திபெத்தில் மலைகளில் பயிற்சி பெற்ற அதிவிரைவு கமாண்டோ படையினர் குழுவையும் இந்தியா சில ரகசிய இடங்களில் வைத்து பயிற்சி அளித்து வருகிறது.

சீனாவின் இன்றைய நிலைக்கு அது போர் தொடுக்கும் நிலையில் இல்லை என்பதே உண்மை! அங்கு வரலாறு காணாத அளவு மழை, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அணைகள் உடைந்து சீனா வெள்ளகாடாக மாறிவிட்டது. கொரோனா பரவல் காரணமாக பல உலக நாடுகளும் சீனாவினை வெறுக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் அது போர் தொடுத்தால் அது சீனாவுக்கு பெரும் பின்னடைவாக மாறும். எனவே போருக்கான சூழல் இருக்காது என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆனால் இந்தியா மெத்தனமாக இருந்து விடக்கூடாது என்பதே தேர்ந்த அரசியல் வல்லுனர்களின் கருத்து! சீனா ஏற்கனவே இலங்கையில் ஹம்பந்தொட்டா பகுதியில் ஊடுருவி தென்பிராந்தியத்தில் வலைபின்னலை ரகசியமாக உருவாக்க தொடங்கிவிட்டது. வட பிராந்தியத்தில் பாகிஸ்தானுடன் கூட்டணி, கிழக்கே வங்கதேசத்தின் கூட்டணி என இந்தியாவை சுற்றி வலைப் பின்னல் அமைத்து வரும் சீனாவின் முயற்சிகளை அலட்சியம் செய்துவிட முடியாது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா தனது ராஜதந்திர முயற்சிகளை வேகப்படுத்த வேண்டும் என்பது அர்சியல் ஆய்வாளர்களின் கருத்து! பொறுத்திருந்து பார்ப்போம்!

Comments

கே.ஆர். உதயகுமார் says :

சீனாவின் அடாவடித்தனத்துக்கு தக்க பதிலடியும் சீனாவின் வால் ஒட்ட நறுக்கப்படவும் வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :