• அமரர் கல்கியின் கல்வெட்டுகள்

என்ன சேதி?


அமரர் கல்கி

என்ன சேதி?

அமரர் கல்கி

கொடி பறக்கிறது!

எல்லைப்புற மாகாணத்தில், தலைநகரமான பெஷாவரில், சென்ற 22 ஞாயிற்றுக்கிழமை ஓர் அதிசய சம்பவம் நடைபெற்றது. விஸ்தாரமான மைதானத்தில் பதினாயிரக்கணக்கான ஜனங்கள் திரண்டு நின்றார்கள். சிகப்புச் சட்டை அணிந்த ஆயிரம் தேசத் தொண்டர்கள் அணிவகுத்து நின்றார்கள். இந்த மகா ஜனத்திரளுக்கு மத்தியில் ஸ்ரீ புலாபாய் தேஸாய் மூவர்ண தேசீயக் கொடியைத் தூக்கிப் பறக்க விட்டார்! ஜனங்களின் ஆரவார முழக்கம் ஆகாசத்தை அளாவியது. ஆயிரம் குரல்களிலிருந்து எழுந்த தேசீய கீதம் நாலாபுறமும் பரவியது.

இதுதான் வித்தியாசம்

சில நாளைக்கு முன்னால் இங்கே சென்னை மகாகாணத்தின் தலைநகரான சென்னை நகரிலும் ஒரு அரசியல் மகாநாடு நடந்தது. இதைத் திறந்து வைக்க பம்பாயிலிருந்து சாக்ஷாத் மேயர் நாகின்தாஸ் மாஸ்டர் வந்திருந்தார். ஆரம்பத்தில் மகாநாட்டில் நானூறு பேர் இருந்தார்கள். அந்த நானூறு பேர் போகப் போக நாற்பது பேர் ஆகிவிட்டார்கள். தேசீயக் கொடி ஏற்றத்துக்குப் போலீஸ் அநுமதி கிடைக்காதபடியால் கொடி ஏற்றம் கை நழுவ விடப்பட்டது! - இதுதான், காங்கிரஸ் மந்திரிகள் ஆட்சி செலுத்தும் மாகாணத்துக்கும், காங்கிரஸ் சங்கங்கள் நடைபெறும் மாகாணத்துக்கும் வித்தியாசம்!

அபிப்பிராய ஒற்றுமை

இந்தியா மந்திரி கர்னல் அமெரி சென்ற வாரத்தில் ஒரு அபூர்வமான உண்மையைப் பார்லிமெண்டு சபையில் எடுத்துச் சொன்னார். சென்னை, பம்பாய் முதலிய மாகாணங்களில் 93ம் பிரிவின் ஆட்சியை இன்னும் ஒரு வருஷத்துக்கு நீடிக்கச் செய்யும் மசோதாவைக் கொண்டுவந்த போதுதான் அந்த அபூர்வ உண்மையைச் சொன்னார். “இந்த மசோதா இப்போது என்னத்திற்கு? எல்லைப்புற மாகாணத்தில் ஏற்பட்டதுபோல் மற்ற மாகாணங்களிலும் ஜனங்களின் ஆட்சியை ஏற்படுத்தக் கூடாதா?” என்று ஒரு அங்கத்தினர் கேட்டாராம். அதற்குக் கர்னல் அமெரி, “இல்லை இல்லை; எல்லைப்புற மாகாணத்து நிலைமை விச்ஷ நிலைமை!” என்றாராம். நம் நாட்டிலுள்ள அதி தீவிர காங்கிரஸ் சங்கக்காரர்களுடைய மனம் குளிரக்கூடிய பதில் அல்லவா? “எல்லைப்புற மாகாணத்தில் விசேஷ நிலைமை!” என்ற பல்லவியைத்தானே இவர்களும் பாடி வருகிறார்கள்! ஆகா! எப்பேர்ப்பட்ட அபிப்பிராய ஒற்றுமை!

விசேஷ நிலைமை எது?

“எல்லைப்புற மாகாணத்தில் விசேஷ நிலைமை” என்பதை பம்பாய் மேயர்கூடச் சென்னையிலே வந்து வெளியிட்டார். அது என்ன விசேஷ நிலைமை என்று பார்க்கலாம். சென்னை முதலிய மாகாணங்களில் 93ம் பிரிவின் ஆட்சி நடைபெறுகிறது. எல்லைப்புறத்தில் முஸ்லிம் லீக் ஆட்சி நடந்தது. முஸ்லிம் லீக் ஆட்சியைக் காட்டிலும் 93ம் பிரிவின் ஆட்சி உயர்ந்தது என்று வைத்துக்கொண்டபோதிலும், அதற்காக டாக்டர் கான்சாகிப் மந்திரி சபை அமைக்கும் அவசியம் என்ன வந்தது? வங்காளத்தில் பாருங்கள்! அங்கேயும் நாஸிமுடீன்கானின் முஸ்லிம் லீக் மந்திரிசபை நடந்தது. அந்த மந்திரி சபைக்குச் சட்டசபையில் தோல்வி ஏற்பட்டது. ஏற்பட்டதும் என்ன நடந்தது? 93ம் பிரிவு ஆட்சி வந்து விட்டதா, இல்லையே? அதுபோலவே, எல்லைப் புறத்திலும், அவுரங்கஜீப் கானின் அழகான மந்திரி சபையைத் தோற்கடித்து விட்டு டாக்டர் கான்சாகிபு சும்மாயிருந்தால், தானே 93ம் பிரிவின் ஆட்சி ஏற்பட்டு விட்டுப் போகிறது? இவர் எதற்காகப் போய் மந்திரி சபை அமைக்க வேண்டும்?

“விசேஷ நிலைமை” என்று சொல்வது அர்த்தமில்லாத அபத்தம். எல்லைப்புறத்திலே நடந்துவிட்டது போல் மற்ற மாகாணங்களில் காங்கிரஸ் மந்திரி சபை ஏற்பட்டு விடுவதைக் கர்னல் அமெரி விரும்பவில்லை; அதனால் அவர் ‘விசேஷ நிலைமை’ என்று சொல்கிறார்! நம்மவர்களில் சிலரும் அதே பாடத்தைப் படிக்கிறார்கள்! அமெரியின் மனமார்ந்த விருப்பம் காங்கிரஸ் சங்கத் தீவிரவாதிகளால் நிறைவேற வேண்டுமென்று ஏற்பட்டிருக்கிறதே!

தலைவர்கள் விடுதலை

ஸ்ரீநாகின்தாஸ் மாஸ்டர் இன்னொரு விஷயம் கூறினார்: - “சிறையில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் ரொம்பப் பெரியவர்கள்; வெளியிலே உள்ள நாம் ரொம்பச் சின்னவர்கள். அவர்களை விடுதலை செய்வதற்காக நாம் மந்திரி வேலை ஒப்புக் கொள்வதாவது? சிறையிலுள்ள தலைவர்களை இது அவமானப்படுத்துவதாகும்!” என்றும், “நன்றியற்ற செய்கை!” என்றும் சொல்கிறார்கள். கான் அப்துல் கபூர்கானை டாக்டர் கான்சாகிபு விடுதலை செய்ததால், கபூர்கான் அவமானப்பட்டுத் தலை குனிந்து ஒளிந்துகொண்டிருக்கவில்லை. திவ்யமாய் வெளியில் வந்து ஊர் ஊராய்ப் பிரயாணம் செய்து கொண்டுதானிருக்கிறார்.

அதோடு, “எல்லைப்புற மாகாணத்தில் நாங்கள் அஹிம்சையுடனிருந்தோம்; அதனால் ஜயித்தோம். மற்ற மாகாணங்களில் அஹிம்சை தர்மத்தைக் கைவீட்டீர்கள். அதனால் தோற்றீர்கள்! என்றும் சொல்லிக்கொண்டு போகிறார். சிறையிலுள்ள பெரியவர்களை அப்படியே சிறையில் இருக்கட்டும் என்று விட்டு விட்டு, வெளியில் நாம் நாற்பது கோடி ஜனங்களும் உண்டு உடுத்துக் களித்தும் மேயர் உத்தியோகம் முதலிய காரியங்களைப் பார்த்துக் கொண்டும் இருப்பதுதான் கௌரவமான காரியமா? இது யாருக்குக் கொளரவமான காரியம்? சிறையிலுள்ள தலைவர்கள் பெரியவர்கள்தான்! ஆனால், அவர்கள் பெரியவர்கள் என்பதற்காக, நாம் இந்தச் சந்தர்ப்பத்தில் நமக்குச் சரியென்று தோன்றும் காரியத்தைச் செய்யாமல் கையைக் கட்டிக் கொண்டு சும்மா உட்கார்ந்திருக்க வேண்டுமென்று அந்தப் பெரியவர்கள் ஒருநாளும் சொல்ல மாட்டார்கள்!

மேலும் சிறையிலுள்ள பெரியவர்களுடைய கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காக வெளியில் உள்ள சின்னவர்களாகிய நாம் ஒன்றும் செய்யாமலிருக்க வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்க மாட்டார்கள்.

அவர்களுடைய விடுதலைக்கு நம்முடைய உதவி தேவையில்லை யென்றால் அவர்களுடைய கௌரவத்தைக் காப்பதற்கும் நம்முடைய உதவி நிச்சயமாகத் தேவையில்லையல்லவா?

கல்வி தர்மம்

பம்பாய் மாநகரில் மட்டுங்கா என்னும் பகுதிக்கு ஒருவர் புதிதாகப் போனால், மயிலாப்பூர் அல்லது தியாகராஜ நகரில் இருப்பதாக நினைத்துக் கொள்வார். பம்பாயில் தற்சமயம் தென்னிந்தியர்கள் அவ்வளவு ஆயிரக்கணக்கானவர்கள் வசிக்கிறார்கள். அவர்களுடைய குழந்தைகள் கல்வி கற்பதற்குத் தமிழ் - தெலுங்கு போதிக்கப்படும் பள்ளிக்கூடம் ஒன்று வேண்டுமல்லவா? அத்தகைய உயர்தரப் பள்ளிக்கூடம் ஒன்றைத் தென்னிந்தியரக் கல்விக் கழகத்தார் மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்கள். சுமார் 900 பிள்ளைகளும் 800 பெண்களும் படிக்கிறார்கள். இத்தகைய கல்வி ஸ்தானபனத்துக்கு மற்ற எல்லாச் சிறப்புக்களும் இருந்தும் பொருளாதாரச் சிறப்பு மட்டும் ஏற்படவில்லை. சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் வாங்கிப் பள்ளிக்கூடக் கட்டடம் கட்டியதில், கடன் இன்னும் அரை லட்சத்துக்கு மேல் பாக்கியிருக்கிறதாம். பணப் பெருக்கம் அதிகமாயிருக்கும் இந்த நாளில் மேற்படி கடனைத் தீர்க்காவிட்டால் பிறகு எப்போது தீர்க்க முடியும்? எனவே, மேற்படி கைங்கரியத்துக்கு நிதி சேர்க்கும் பொருட்டு பம்பாய்த் தென்னிந்தியர்கள் மே 5உ ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்களின் கச்சேரியை ஏற்படுத்தியிருக்கறார்கள். கச்சேரிக்குப் பிரமாத ஏற்பாடுகள் நடந்திருப்பதாக அறிகிறோம். சங்கீத ரசிகர்கள் நிறைந்த பம்பாய் - மட்டுங்காவில் எம்.எஸ்.ஸின் கச்சேரி பேஷாக அமையும் என்பதில் ஐயமில்லை. இந்தக் கச்சேரியோடு மேற்படி பள்ளிக்கூடக் கடனும் அடியோடு தீர்ந்து விட்டால் ரொம்ப ரொம்ப பேஷாயிருக்கும்!

(29.4.1945 கல்கி தலையங்கத்திலிருந்து...)

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :