• SPARKLES | மினுமினு

தானம் என்பது...!


நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

யாருக்கு எது தேவையோ அதை பரிசாக அளிப்பதே சிறப்பு! பசித்தவனுக்கு சோறும், ஆடையின்றிக் கிடப்பவனுக்கு ஆடையும், பொருள் வேண்டி வருபவனுக்கு பொருளும் கொடுப்பதே சிறந்த கொடையாகும்.

கோடை வெயில் கொளுத்தும் காலத்தில் வைக்கப்படும் தண்ணீர் பந்தலில் பானை இருக்கும். ஆனால், நீர்தான் இருக்காது. தாகம் மேலிட அங்கே வருபவனுக்குக் கோபம்தான் மிஞ்சும். இப்படி இருக்கிறது இந்த காலத்துத் தர்மம்.

இன்னும் சிலரது தர்மம் பிரதிபலனை எதிர்பார்த்துக் கொடுக்கப்படுகிறது. அந்தக் காலத்தில் மயிலுக்குப் போர்வை தந்த பேகனும், முல்லைக்கு தேரினை ஈந்த பாரியும் இன்று பரிகசிக்கப் படும் நிலை இருக்கிறது. கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தால் உடனே கொடுத்துவிட வேண்டும்.

ஒரு முறை கர்ணனிடம் ஒருவர் யாசகம் கேட்கச் சென்றிருந்தார். அச்சமயம் ஓர் கிண்ணத்தில் எண்ணெய் வைத்துக்கொண்டு எண்ணெய் குளியல் செய்து கொண்டிருந்தான் கர்ணன். யாசகம் என்று கேட்டதும் உடனே இடது கையால் அந்த எண்ணெய் கிண்ணத்தைத் தந்துவிட்டான் கர்ணன்.

’’இடது கையால் தருகின்றீரே! இது தகுமா?” என்றார் யாசகர்.

’’கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் கொடுத்துவிட வேண்டும். நீங்கள் கேட்டதும் இந்தத் தங்க கிண்ணத்தைத் தந்துவிட வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. இந்த எண்ணம் நான் குளித்துவிட்டு வந்த பின்னர் மாறிவிடக் கூடும். தங்கக் கிண்ணம் எதற்குத் தரவேண்டும்... வேறு ஏதாவது தரலாம் என்று எண்ணத் தோன்றும். அதைத் தவிர்க்கவே இடது கையால் தானம் செய்தேன்” என்றானாம் கர்ணன்.

இது இப்படி இருக்க, இன்னொரு மன்னன் செய்த தானம் ஒரு புலவரை என்ன பாடு படுத்துகிறது பாருங்கள். ஒரு வாய் உணவில்லாமல் தவிக்கும் அவருக்கு நான்கு வாய் உணவை தானமாகக் கொடுத்து கொல்ல நினைத்தானாம் அந்த வள்ளல். தானன் என்னும் அந்த வள்ளல் பற்றிய புலவரின் புலம்பல் இதோ!

.

‘இல்’ எனும்சொல் அறியாத சீகையில்வாழ்

தானனைப்போய் யாழ்ப்பா ணன்யான்,

பல்லைவிரித்து இரந்தக்கால், வெண்சோறும்

பழம்தூசும் பாலி யாமல்,

கொல்லநினைந் தேதனது நால்வாயைப்

பரிசென்று கொடுத்தான்; பார்க்குள்

தொல்லைஎனது ஒருவாய்க்கும் நால்வாய்க்கும்

இரையெங்கே துரப்பு வேனே?

.

பொன் விளைந்த களத்தூர் அந்தகக் கவிராயரின் பாடல் இது. கண்பார்வை அற்ற இந்தப் புலவரின் பாடல்கள் தமிழ் சுவையை நன்கு ஊட்டுவதோடு சிறு நையாண்டியையும் தன்னகத்தேக் கொண்டிருக்கும். ஒரு வாய்க்கே உணவில்லாத புலவருக்கு நால்வாயை தானமாகக் கொடுத்தான் தானன். வாயை தானமாக யாரால் கொடுக்க முடியும்? அதுவும் நான்கு வாய்களை? இதோ இவன் கொடுத்துள்ளான். எப்படி?

யாழ் வாசித்துப் பாடும் பாணன் ஆகிய புலவரானவர், இல்லை என்று சொல்லாத தானன் என்னும் வள்ளலிடம் சென்று பல்லைக் காட்டி இரந்தாராம். அவருக்கு மிகுந்த பசி. அந்தப் பசியைப் போக்க வெண்மையான சோறும், பழைய ஆடையும் தராத அவன், என்னைக் கொல்ல நினைத்து தன்னுடைய நால்வாயை பரிசாக எனக்கு அளித்தான். நால்வாய் என்பது யானை.

பரிசில் என்றதும் வள்ளல் பெருமையாக யானையைத் தந்துவிட்டார். என்னுடைய பசிக்கே உணவு இல்லாமல் தவிக்கும் நான், யானையின் பசிக்கு உணவை எங்கே தேடுவேன். இது என்னை கொல்ல நினைப்பது போல உள்ளது என்று வருந்துகின்றார் புலவர்.

நால்வாய் - நான்கு வாய்கள் என்றும் யானை என்றும் பொருள்படும். தொங்குகின்ற வாய் என்ற பொருளும் உண்டு.

மிக அருமையான பாடல் அல்லவா? படித்து ரசியுங்கள்! பழந்தமிழ் புலவர்களின் தமிழறிவு புலப்படும்...

Comments

கே ஆர் எஸ் சம்பத் says :

ஒரே வரியில் கூறுவதானால் " அருமை".

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :