• தீபம் - ஆன்மீகம்

ஆழ்வார் பாசுரங்களும் அழகிய உவமைகளும் - 8 - பரந்தாமனைத் தொழுத பரகாலன்!


- லதானந்த்

சோழநாட்டில் உள்ள திருக்குறையலூரில் பிறந்தவர் திருமங்கையாழ்வார். இவரது இயற்பெயர் நீலன். எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த இவர், முத்தரையர் குலத்தில் பிறந்தவர். போர்த்திறம் மிகக்கொண்ட இவர், சேனாதிபதியாகப் பதவி வகித்தவர். ‘பகைவர்களுக்கு எமன்’ என்னும் பொருள் தரும், ‘பரகாலன்’ என்னும் பட்டப்பெயர் இவருக்கு உண்டு. ‘திருமங்கைநாடு’ என்னும் குறுநிலத்துக்கு அரசனாக உயர்ந்த தால் இவர், ‘திருமங்கையாழ்வார்’ என அழைக்கப்பட்டார். இவர் பெரிய திருமொழியில் 390 பாசுரங்களியும், திருக்குறுந்தாண்டகத்தில் 831 பாசுரங்களையும், திருநெடுந்தாண்டகத்தில் 839 பாசுரங்களையும் பாடிப் பரவசமாகியிருக்கிறார்.

பெரிய திருமொழியின் ஒரு பாசுரத்தில், மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும் என நினைத்துத் தவறான பாதையில் போய்விட்ட தமது வாழ்நாட்கள், ‘ஊமை கண்ட கனவை விட வீணாகக் கழிந்தது’ என்கிறார். ஊமை கண்ட கனவை அவர் யாரிடம் சொல்லக்கூடும்? சொல்ல இயலாத அந்தக் கனவுக்குப் பயன்தான் என்ன? ஒன்றுமில்லையல்லவா? அப்படித்தான், தமது வாழ்நாளின் ஒரு பகுதி வீணாய்க் கழிந்தது என வேதனையுறுகிறார் திருமங்கையாழ்வார்.

‘சேமமே வேண்டித் தீவினை பெருக்கித் தெரிவைமா ருருவமே மருவி,
ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய் ஒழிந்தன கழிந்தவந் நாள்கள்,
காமனார் தாதை நம்முடை யடிகள் தம்மடைந் தார்மனத் திருப்பார்,
நாமம்நா னுய்ய நான்கண்டு கொண்டேன் நாராய ணாவென்னும் நாமம்.’

இன்னொரு பாசுரத்தில், ‘நாராயணன் தமக்குக் கைகொடுப்பவரைப் போல, தந்தையைப் போல, சகல சுற்றத்தினர் போல, தலைவனைப் போல, தம்முடைய உயிரைப் போல இருக்கிறார்’ எனப் பல உவமைகளைச் சொல்லிச் செல்கிறார் திருமங்கையாழ்வார்.

‘எம்பிரான், எந்தை, என்னுடைச் சுற்றம், எனக்கு அரசு, என்னுடை வாழ் நாள்’ என்ற பாடல் வரிகளில் உவமைகள் உலா வருவதை உணரலாம்.

‘நாராயணா’ என்னும் நாமத்தின் மீது அளவற்ற பற்றுக் கொண்டிருந்தவர் இந்த ஆழ்வார். ‘அந்த நாமத்தை உச்சரித்தாலே போதும். அது ஒன்றே நம் பாவங்களையெல்லாம் கொன்றுபோடும் விஷமாகும்’ என்கிறார். இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். நாராயண நாமத்துக்கு விஷத்தை உவமையாக்குகிறார். வியப்பாக இருக்கிறதல்லவா? ஆனால், அந்த விஷம் என்ன செய்கிறது என்றால், ‘நமது பாவங்களைக் கொன்று தீர்க்கும் விஷம் அது’ என்கிறார் ஆழ்வார்.

இறைவன் உறையும் திருப்பிரிதியை நினைக்கும்போது, அந்த மலை யிலே உலவுகின்ற யானைகளும் சிங்கங்களும் ஆழ்வாரின் நினைவிலே தோன்றுகின்றன. அந்த யானைகளின் வலிமை மலை போல இருந்த தாம். குகையிலே வசிக்கும் சிங்கங்களின் பற்கள் கத்தியைப் போல இருந்ததாம்!

‘விலங்கல் போல்வன விறலிருஞ் சினத்தன வேழங்கள் துயர்கூர
பிலங்கொள் வாளெயிற்றரியவை திரிதரு பிரிதி சென்றடை நெஞ்சே!’

நப்பின்னைப் பிராட்டியும், அவருக்காக ஏழு காளைகளை அழித்த வாசுதேவனும் வாழும் திருப்பிரிதியைப் போற்ற நினைக்கும் ஆழ்வா ருக்கு நப்பின்னையாரின் உருவத்தையும் வர்ணிக்கத் தோன்றுகிறது. பெருமாட்டியின் இடை, உடுக்கை போன்ற அமைப்பிலிருக்கிறதாம். அவருக்காக வாசுதேவனார் அழித்த காளைகளின் உறுமலோ, இடியைப் போல இருந்ததாம்!

‘துடிகொள் நுண்ணிடைச்சுரிகுழல் துளங்கெயிற் றிளங்கொடிதிறத்து ஆயர்
இடிகொள் வெங்குரலின விடையடர்த்தவன் இருந்தநல்லிமயத்து,
கடிகொள் வேங்கையின்நறு மலரமளியின்மணியறை மிசைவேழம்,
பிடியினோடு வண்டிசைசொலத்துயில் கொளும் பிரிதிசென்றடைநெஞ்சே.’

என்பது அந்தப் பாசுரம்.

இன்னொரு பாடலில், நாராயணன் எழுந்தருளும் இமயமலையின் அழகைப் பாட விழைகிறார் ஆழ்வார். அங்கே நறுமணமுள்ள குருக்கத்திக் கொடிகள் நிரம்ப இருக்கின்றன. கொடி என்றால் பற்றிப் படருவதற்குக் கொழுகொம்பு வேண்டும் அல்லவா? அந்தக் கொடிகள் சாதாரணக் கொடிகளாக இருந்தால் கழிகளைப் பற்றிப் படர்ந்து மேலேறிப் போகும். ஆனால், அவையோ இறைவனின் இருப்பிடத்தில் இருப்பனவாயிற்றே! அவற்றின் கொழுகொம்பு மேகங்கள்தான்! அவ்வளவு உயரத்தில் அந்தக் கொடிகள் மேலெழும்பிக் காட்சி தருகின்றனவாம்! இங்கே மேகங்களைக் கொழுகொம்பிற்கு உவமையாக்கி மகிழ்கிறார் அடியவர்.

‘பணங்களாயிரமுடைய நல்லவரவணைப் பள்ளிகொள் பரமாவென்று,
இணங்கி வானவர் மணிமுடி பணிதர இருந்தநல்லிமயத்து,
மணங்கொள் மாதவி நெடுங்கொடி விசும்புற நிமிர்ந்தவைமுகில்பற்றி,
பிணங்கு பூம்பொழில் நுழைந்து வண்டிசை சொலும் பிரிதிசென்றடை
நெஞ்சே.’

என்பது அந்தப் பாசுரம்.

(உவமைகள் தொடரும்)

Comments

பொ.பாலாஜிகணேஷ் says :

அற்புத தொடர் தொடருங்கள் தொடரட்டும்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :