• தீபம் - ஆன்மீகம்

ஆழ்வார் பாசுரங்களும் அழகிய உவமைகளும் : 7 - மதுரகவியாழ்வாரின் குரு பக்தி!


- லதானந்த்

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரியை அடுத்த திருக்கோளூரில் அவதரித்தவர் மதுரகவியாழ்வார். ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த இவர் எழுதியுள்ள பாசுரங்கள் மொத்தம் பதினொன்று. முதல் பாசுரம், ‘கண்ணிநுண் சிறுதாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன்’ எனத் தொடங்கும்.

ஆழ்வார்கள் வரிசையில் ஐந்தாவது ஆழ்வாரான இவர், முன்குடுமிச் சோழிய அந்தணர் வம்சத்தில் அவதரித்தார். இவரைத் திருமாலின் வாகனமாகிய கருடனின் அம்சம் எனக் கொண்டாடுவார்கள்.

வேதங்களையும் சாஸ்திரங்களையும் நன்கு கற்றறிந்த இவருக்கு, தமிழ் மற்றும் வடமொழியில் ஆழ்ந்த புலமை இருந்தது. தமிழில் மதுரமான பாடல்களைப் பாடியதால் இவருக்கு, ‘மதுரகவியாழ்வார்’ எனும் பெயர் உண்டாயிற்று.

ஒருசமயம் இவர் வடநாட்டில் பயணம் மேற்கொண்டிருந்தபோது வானில் ஓர் ஒளியைக் கண்டார். அதை நோக்கி தெற்கு திசையில் நடந்து, திருக்குருகூரை அடைந்தார். அங்கே நம்மாழ்வார் யோக நிலையில் இருப்பதைக் கண்டு, அவருக்குச் சீடராகி விட்டார். அதோடு, நம்மாழ்வாரையே தெய்வநிலைக்கு உயர்த்திப் பாடல்கள் புனைந்தார். ‘ஆச்சார்ய பக்தி’ என்பதற்கு மதுரகவியாழ்வாரின் பற்றே சிறந்தச் சான்றாகும்.

தமது ஆசாரியரான நம்மாழ்வாருக்கு விழாக்கள் பல எடுத்துச் சிறப்புச் செய்தார்; ஆராதனைகள் நடத்தி வழிபட்டார். இறுதியில் திருமாலின் திருவடிகளில் சென்று சேர்ந்தார்.

இவரது பாசுரங்களில் ஆங்காங்கே இயல்பாக உவமைகள் வந்து விழுகின்றன. ‘நம்மாழ்வார் என்ற ஆசாரியரின் பெயரைச் சொன்னாலே, அமுதம்போல நாவில் தித்திக்கிறது’ என்று மதுரகவியாழ்வார் சொல்வ திலிருந்து, அவரது குரு பக்தி அனைவருக்கும் எளிதில் விளங்கும். அதேசமயம், ‘அந்தப் பெயரே அமுதம் போல இருக்கிறது’ என்ற உவமை நயமும் புலப்படும்.

‘கண்ணிநுண் சிறுதாம்பினால் கட்ட்டுண்னப்
பண்ணிய பெருமாயன் என்னப்பனில்
நண்ணித் தென்குருகூர் நம்பியென்றக்கால
அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே’

ஒருவர்பால் மாபெரும் அன்பு செலுத்துபவள் தாய்தான்; அறிவூட்டுவதில் தந்தைக்கு நிகர் யாருமில்லை; தன்வயப்படுத்தி ஆளுவதில் தலைவனாம் இறைவனுக்கும் ஈடு இணையில்லை. அப்படிப்பட்ட, ‘தாயைப் போல, தந்தையைப் போல, தன்னை ஆளும் இறைவனைப் போல சடகோபர் விளங்குகிறார்’ எனத் தொண்டருக்குத் தொண்டராகத் தம்மை பாவித்துப் பாடும் பாசுரத்தில்தான் உவமைகள் எவ்வளவு அழகாக மிளிர்கின்றன!

‘நன்மையால் மிக்க நான்மறை யாளர்கள்
புன்மையாகக் கருதுவராதலின்
அன்னையாய், அத்தனாய், என்னையாண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே.’

‘தமது தலைவரான சடகோபர் அதிபராக இருக்கும் திருநகரியின் மாடங்கள், மலை போன்று இருக்கின்றன’ என உவமை சொல்லி உவப்பு கொள்கிறார் மதுரகவியாழ்வார். ‘குன்ற மாடத் திருகுருகூர் நம்பி’ என்பது அவரது வாக்கு.

இன்னொரு பாசுரத்தில், மற்றவர்களைத் திருத்தித் தொண்டராக்குகிற தமது ஆசாரியரான சடகோபரின் திருப்பாதங்களுக்குத் தாமரையை உவமையாக்குகிறார்.

‘குயில் நின்று ஆர் பொழில்சூழ் குருகூர்நம்பி!
முயல்கின்றேன் உந்தன் மொய் கழற்கன்பையே.’

(உவமைகள் தொடரும்)

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :