• SPARKLES | மினுமினு

என்கிட்ட வராதீங்க!


-ரேவதி பாலு





சுகந்தாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அங்கே, இங்கேயென்று உலகமெல்லாம் சுற்றிய கொரோனா, கடைசியில் அவள் வீட்டுக்குள்ளேயே அல்லவா வந்துவிட்டது? பிள்ளையும் மருமகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் இருக்கிறார்கள். சுகந்தாவும் அவள் கணவர் வேலுவும் அறிகுறிகள் குறைவாக இருப்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டார்கள். அதெல்லாம் சரி.. ஐந்து வயது பேத்தி கயல்விழியை என்ன செய்வது?

இரண்டு தெரு தாண்டி இருக்கும் மருமகளின் பெற்றோர் வீட்டில் கொண்டு போய் விட்டார்கள். ரெண்டு நாட்கள் சென்றிருக்கும். சோதனையாக அந்த தாத்தா பாட்டிக்கும் கொரோனா தாக்கி ஆஸ்பத்திரியில் சேர்த்தாகி விட்டது. அதையடுத்து, கயல்விழி மீண்டும் சுகந்தா வீட்டுக்கே அனுப்பி வைக்கப் பட்டாள்.

சுகந்தா துடித்துப்போனாள். தனக்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலும் நீங்கி விட்டாலும், உடம்பு சோர்வு அசத்துகிறதே?! தன்னால் எப்படி கயலை கவனித்துக்கொள்ள முடியும்? அதுவும் தவிர குழந்தை ’’பாட்டி!‘ என்று ஓடி வந்து கட்டிக்கொள்வாளே? வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தல்லவா சாப்பாடு ஊட்ட வேண்டும்? இந்த சின்னக் குழந்தைக்கு என்ன சொல்லிப் புரிய வைப்பேன்? ’கடவுளே!’ என்று அரற்றிக்கொண்டு படுத்துக் கொண்டிருக்கும்போதுதான் கயல்விழி வீட்டுக்குள் வந்தாள்.

நேராக தன் பெற்றோரின் படுக்கையறைக்குள் சென்றாள். பின்னர் கயல்விழியிடம் சொன்னாள்;;

‘‘ஒங்களுக்கெல்லாம் கொரோனா வந்திடுச்சில்ல? அதனால நா ரெண்டு வாரம் இந்த ரூமுக்குள்ளாரயேதான் இருப்பேன். எனக்கு தட்டுல வச்சு இட்டிலி, ரசம் சாதம்லாம் குடுத்துருங்க. நானே சாப்டுக்குவேன்!‘ என்று பெரிய மனுஷி மாதிரி சொல்லிவிட்டு தன் பொம்மைகளை வைத்துக்கொண்டு விளையாட ஆரம்பிக்க, சுகந்தாவும் வேலுவும் பிரமித்துப்போய் நின்றார்கள்.

Comments

G.SWETHARANYAM says :

The unexpected reaction from the child is surprising. Very apt photo for the story.

கே.ஆர். உதயகுமார் says :

தற்காலத்து பிள்ளைகள் சூழ்நிலையைப் புரிந்துக் கொண்டு தாமாகவே முடிவெடுப்பதில் சிறந்து விளங்குகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :