• GLITTERS | பளபள

புயலைக் கிளப்பும் பெகாசஸ் செயலி விவகாரம்: எதிர்க்கட்சிகள் கேள்வி!


ஆர். அனந்தராமன்

இஸ்ரேலைத் தலைமையிடமாகக் கொண்ட என்.எஸ்.ஓ நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் செயலி இப்போது இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் இந்தியப் பத்திரிகையாளர்களை வேவு பார்த்த விவகாரம் புயலை கிளப்பியுள்ள நிலையில், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க இந்திய கம்யூ. பினாய் விஸ்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் இந்த பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் உடப்ட எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

அது என்ன பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம்?! இந்த செயலி மூலம் இந்தியாவின் சட்ட வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளீயாகி, நாடு முழுவதும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ஏற்கனவே என்எஸ்ஓ நிறுவனம் மீது வாட்ஸ் அப் நிறுவனமும் புகார் கொடுத்திருந்தது.

சமீபத்தில் `த வையர்` என்ற ஆங்கில பத்திரிகை தளம் இந்த ஸ்பைவேர் அட்டாக் தொடர்பாக ஒரு விரிவான செய்தியை வெளியிட்டது. அதில் பல திடுக்கிடும் விஷய்ங்கள் தெரிய வந்தன். அதாவது, பெகசஸ் செயலி மூலம் இந்தியாவிலுள்ள பலதுறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், சட்ட வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரின் வாட்ஸ் அப் கணக்குள் வேவு பார்க்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் 2 பேர், பாதுகாப்பு நிறுவனங்களில் பணிபுரிந்த முன்னாள் அதிகாரிகள் மற்றும் சில தொழிலதிபர்கள், தற்போது பணியில் இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் ஆகியோரின் செல்போன் நம்பர்கள் இந்த பெகசஸ் ஸ்பைவேர் அட்டாக் மூலமாக வேவு பார்க்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு இந்த பிரபலங்களை வேவு பார்ப்பதற்காக இஸ்ரேலின் என்.எஸ்.ஓ,நிறுவனத்தை அணுகியிருக்கக் கூடும் என்று எதிர்க்கட்சிகள் சந்தேகம் தெரிவிக்கின்றன. அதற்குக் காரணம் - தி வையர்’ பத்திரிகையின் ஆய்வுகளின்படி 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் அதிக பேரின் நம்பர் ஹேக் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் சமயத்தில் இந்த நம்பர்கள் அட்டாக் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த விவகாரத்தில் இந்திய அரசு, "இந்த ஸ்பைவேரை பயன்படுத்தி பிஜேபி அரசு சிலரை கண்காணித்தது என்று கூறுவதில் எந்தவித உண்மையும் இல்லை. அரசு ஒருபோதும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடவில்லை" எனத் தெரிவித்துள்ளது. .

ஆனால், இந்தியாவில் இந்த 40 பத்திரிகையாளர்கள் உட்பட முக்கிய பிரபலங்களின் செல்போன்களை தடயவியல் பரிசோதனை செய்ததில், இந்த பெகசஸ் ஸ்பைவேர் பயன்படுத்தப்பட்டது உறுதியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக பல ஐபோன்களை இது அதிகம் வேவு பார்த்துள்ளதும் தெரியவந்துள்ளது. நாட்டின் பாரம்பரிய செய்தி நிறுவனங்களில் பணிபுரிந்த 40 பத்திரிகையாளர்கள் வேவு பார்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்பு, உள்துறை அமைச்சகம், தேர்தல் ஆணையம், காஷ்மீர் குறித்த செய்திகளை வெளியிட்டவர்கள் ஆவர். இவர்களீன் செல்போன்கள் வேவு பார்க்கப்பட்டது மட்டுமல்லாமல் தீவிரமாக கண்காணிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. காரணம் - வேவு பார்க்கப்பட்டதாக கூறப்படும் பத்திரிகையாளர்களில் பெரும்பான்மையானோர் மோடி மற்றும் அமைச்சர்கள் குறித்து புலனாய்வு கட்டுரைகளை வெளியிட்டவர்கள் ஆவர்.

இச்சம்பவம் புயலை கிளப்பியுள்ள நிலையில், நாடாளுமன்ற மற்ற நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு இதுகுறித்து விவாதிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பினாய் விஸ்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், பத்திரிகையாளர்கள் வேவு பார்க்கப்பட்டதாக வெளியான செய்திக்கு மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. அப்படி குறிப்பிட்டஒருசில நபர்களை அரசு கண்காணித்ததாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த விதமான ஆதாரங்களோ உண்மையோ இல்லை என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "வாட்ஸ்அப்பில் பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் வேவு பார்த்ததாக முந்தைய காலத்திலும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. ஆனால், இதற்கு வாட்ஸ்ஆப் நிறுவனமே உச்ச நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்த பெகாசஸ் செயலி விவகாரம் இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகளவில் பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்த ஹேக்கிங் தொடர்பாக செய்தி வெளியாக முக்கிய காரணம் - பாரீஸில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம் மற்றும் அம்னெஸ்டி இண்டர்நெஷ்னல் ஆகிய இரு அமைப்புகளுக்கும் கிடைத்த தகவல்கள் தான். அவை பல்வேறு நாட்டின் ஊடகங்களுக்கு இந்த தகவலை அளித்ததால், இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்தியா தவிர அஜர்பைஜான், பஹ்ரைன்,கஜகஸ்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு ஏமிரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இந்த பெகசஸ் ஸ்பைவேர் அட்டாக் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :