கொண்டல் வண்ணக் கோவலன்! /> கொண்டல் வண்ணக் கோவலன்! />

  • தீபம் - ஆன்மீகம்

ஆழ்வார் பாசுரங்களும் அழகிய உவமைகளும்! - 6
கொண்டல் வண்ணக் கோவலன்!


லதானந்த்

கி.பி.8ஆம் நூற்றாண்டில் சோழர்களது தலைநகரமாக விளங்கியது உறையூர். அந்த உறையூரில் இசை மீட்டிப் பாடல்கள் பாடுவதையே குலத் தொழிலாகக் கொண்ட பாணன் ஒருவர் வாழ்ந்து வந்தார்.

ஒரு நாள் உச்சி வெய்யில் நேரம். அந்தப் பாணன் நெற்பயிர் விளைந்த இடம் ஒன்றின் அருகே வந்தபோது, ஒரு குழந்தையின் அழுகுரலைக் கேட்டார். அங்குச் சென்று பார்த்தபோது, பச்சிளம் குழந்தையொன்றைக் கண்டார். நீண்ட நாள் குழந்தைப்பேறு இல்லாமல் வாடிய பாணன், அந்தக் குழந்தையை எடுத்துப் பிரியத்துடன் வளர்த்து வந்தார்.

அந்தக் குழந்தையும் வளர்ந்து வாலிபனாகியது. பாணர்களுக்கே உரிய சிறப்பு அம்சமான யாழ் மீட்டுவதிலும் பாடுவதிலும் தேர்ச்சியுற்ற அவரை அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் அந்தக் குலப் பெயரிலேயே அழைக்கத் தொடங்கினர். கூடவே, ‘திரு’ என்ற அடைமொழியும் சேர்த்து, ‘திருப்பாணன்’ என்று அழைக்க லாயினர்.

திருப்பாணாழ்வாரை திருமாலின் ஸ்ரீவத்ஸ அம்சமாகவே போற்று வர். இவர் திருவரங்கனின் உச்சி முதல் பாதம் வரை திருமேனி யழகைப் பற்றிப் பரவசத்தோடு பாடிய பாசுரங்கள் மொத்தம் பத்து. அவற்றுள் முதல் பாசுரம், ‘அமலனாதி பிரான்’ எனத் தொடங்கும். அந்த முதல் அடியையே தலைப்பாக்கி, வைணவ ஆலயங்களில் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது.

பாடல் பெற்ற பாசுரங்கள் பத்தேயெனினும் பலவற்றிலும் உவமை கள் துள்ளுகின்றன; உள்ளத்தை அள்ளுகின்றன. முதல் பாசுரத் திலேயே, திருமாலின் செக்கச்சிவந்த பாதத்தைத் தாமரைக்கு இணையாக்குகிறார். ‘கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே’ என்பது அவர் திருவாக்கு!

இன்னொரு பாசுரத்தில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருக்கும் திருவரங்கன் இடையில் அணிந்திருக்கும் சிவப்புப் பட்டாடைக்கு உவமையாக அந்தி நேர வானச் செம்மையைச் சொல்கிறார். வெறுமனே வானத்தின் செம்மை என்று சொல்லியிருந்தால் ஒருவேளை அது உதயகாலத்துப் பகலவனின் செம்மையையும் அதனுடன் சேர்த்து வெம்மையையும் குறித்து விடுமோ என்ற அச்சத்தில், ‘அந்தி நேர நிறம்’ என்கிறார். அது செம்மையும் குளிர்ச்சியும் ஒருங்கே கொண்டதன்றோ! அந்தப் பாசப்பாசுர வரிகள் இதோ :

`அந்திபோல் நிறத்தாடையும் அதன் மேலயனை படைததொரெழில
உந்திமேலதன்றோ அடியேன்னுள்ளதினுயிரே.’

இன்னொரு பாசுரத்தில், ‘ராவணனின் தலைகளை வெட்டிய திருமாலின் மேனி நிறம், கடல் (ஓதம்) போன்றிருக்கிறது’ என்கிறார்.

`சதுரமாமதில்சூழ் இலங்கைக்கு இறைவன் தலைபத்து
உதிர ஓட்டி ஓர் வெங்கணை உய்த்தவன் ஓதவண்ணன்
மதுரமா வண்டு பாட மாம்யில் ஆட அரங்கத்து அம்மான்
திருவயிற்று
உதரபந்தம் என் உள்ளத்தில் நின்று உலாகின்றதே!’

இது திருப்பாணாழ்வாரின் திவ்ய உவமை!

திருமாலின் திருமேனி நீண்டதொரு மலை (வரை) போலத் தோன்றுகிறது திருப்பாணாழ்வாருக்கு. மலையின் உறுதியும் அது கொண்ட பல்லுயிர்ப் பெருக்கமும், அது தந்தருளும் ஜீவ நதி களும்தான், ‘நீள்வரைபோல் மெய்யனார்’ என்று இறைவனைத் துதிக்கச் செய்ததோ!

கண்ணனின் நிறம் கருப்பு என்பது தெரியும். அந்தக் கரு நிறத் துக்குக் கார்மேகத்தை உவமையாக்குகிறார் திருப்பாணாழ்வார். உலகம் வாழத் தண்ணீர் தேவை. அந்தத் தண்ணீரைத் தருவது கருத்த, மழை பொதிந்த, கார்மேகங்கள்தானே! அதனால்தானோ என்னவோ திருவரங்கனை ‘கொண்டல் (கார்மேக) வண்ணன் என்று கொண்டாடுகிறார். மேலும் சொல்கையில், ‘என் அமுது’ என்று இறைவனைப் போற்றுகிறார். இறவா வரம் தருவது அமுதம்தானே!

இதோ அந்தப் பாசுரம் :

`கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்டவாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினை
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாதே!’

(உவமைகள் தொடரும்)

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :