மரகதமாய் மின்னும் மாலவனே! /> மரகதமாய் மின்னும் மாலவனே! />

  • தீபம் - ஆன்மீகம்

ஆழ்வார் பாசுரங்களும் அழகிய உவமைகளும்! - 5
மரகதமாய் மின்னும் மாலவனே!


லதானந்த்

சோழ நாட்டில் இருக்கும் திருமண்டங்குடி என்ற ஊரில் அவதரித் தவர் விப்ரநாராயணர். இவரே தொண்டரடிப் பொடியாழ்வார் என பின்னாளில் அறியப்பட்டார். நந்தவனம் அமைத்து, அதிலிருந்து கிடைக்கும் பூக்களை மாலையாக்கி, அரங்கனுக்கு அணிவித்து மகிழ்வது இவரது வழக்கம். திருமாலின் திருமார்பில் திகழும், ’வைஜயந்தி’ என்னும் மாலையின் அம்சம் இவர் என்பார்கள்.

திருவரங்கனின் பெருமைகளை, ‘திருமாலை’ என்று 45 பாசுரங் களாலும், ‘திருப்பள்ளியெழுச்சி’ என்ற பத்து பாசுரங்களாலும் பாடிப் பரவசமானார். வைணவ ஆலயங்களில் இவரது திருப்பள்ளி யெழுச்சி பாடப்படுவது மரபு.

`ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர்க் களைகண் அம்மா அரங்க மாநகருளானே.’

என, பெருமாளின் பாதங்களையே பற்றி வாழ்ந்தவர் தொண்டரடிப் பொடியாழ்வார். திருமாலையின் கீழ்வரும் இவரது பாசுரம் ஒன்றில்தான் உவமை நயம் எப்படியெல்லாம் கொஞ்சுகிறது!

எடுத்த எடுப்பிலேயே இறைவனின் மேனிக்குப் பெரியதொரு பச்சை மலையை உவமையாக்குகிறார். மலையின் பச்சை வண்ணம், மாலவனின் திருமேனி வண்ணத்துக்கு இணை யாகிறது. வண்ணம் மட்டுமா? மலை என்றால் ஓங்கி உயர்ந்து இருக்கும் அல்லவா? உறுதியும் பல கானுயிர்களையும் தன்னகத்தே அடக்கியிருக்குமல்லவா? அதைப் போலவே ஓங்கி உலகளந்த உத்தமனாம் திருமாலின் கோலம், மலையை உவமை யாக்கத் தோன்றுகிறது. உலகத்தின் சகல ஜீவராசிகளையும் தன்னகத்தே அடக்கியிருக்கும் மாலவனின் தன்மைக்கும் மலையே உவமையாகிறது. மலைகளில் இருந்து பிறக்கும் ஜீவ நதிகள், கருணை நதி பெருமாளிடம் இருந்து புறப்படுவதைச் சுட்டுகிறது.

அடுத்துச் சொல்கிறார், ‘பவளவாய்’ என்று. பவளம் போன்ற செம்மையும், அழகும் அமையப்பெற்ற திருவாய் திருமாலுடை யது என்பதை இப்படி நிறுவுகிறார். அடுத்து, ‘கமலச் செங்கண்’ என்ற சொல்லாடலில், மென்மையும், இளஞ்சிவப்பு நிறத்தையும் கொண்டுள்ள இறைவனது கண்களுக்குத் தாமரையை உவமை யாக்குகிறார். இதோ அந்தப் பாசுரம் :

`பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகர் உளானே’

அடுத்து ஒரு பாசுரம். அதில், ‘சுவர்’ என்ற ஒற்றை வார்த்தையை எடுத்துக் கொண்டு பல செய்திகளுக்கும் அதை உவமையாக்குகிறார். ‘கொடிய சுபாவம் என்னும் சுவரை அரணாகக் கொண்டவர் கள் வெளிச்சுவரான உடல் இடிந்துவிழும் காலத்தை அறிய மாட்டார்கள். தருமம் என்னும் சுவராகக் காத்து நிற்கும் அரங்கனுக்குத் தொண்டு செய்யாமல் இருப்போர் காக்கை, கழுகுக்கு இரையாவார்கள்’ என்கிறார். சுவர் என்ற உவமை ஒன்றே! ஆனால், அது சொல்லும் சேதிகள் பல!

தொண்டரடிப் பொடியாழ்வார் சுவரை வைத்துத் தீட்டிய பாசுரச் சித்திரம் இதோ :

’மறம்சுவர் மதிளெ டுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு
புறம்சுவ ரோட்டை மாடம் புரளும்போ தறிய மாட்டீர்
அறம்சுவ ராகி நின்ற அரங்கனார்க் காட்செய் யாதே
புறம்சுவர் கோலஞ் செய்து புள்கவ்வக் கிடக்கின் றீரே.!’

இன்னொரு பாசுரம். இதில் திருமாலின் பச்சை வண்ண மேனிக்கு மரகதத்தை உவமையாக்குகிறார். அருள் பொங்கும் விழிகளுக்கு தூய்மை பொங்கும் தாமரை உவமையாகிறது; செக்கச் சிவந்த வாய்க்குப் பவளம் உவமையாகிறது. ஒரே பாசுரத்தில் இவ்வளவு உவமைகளா?

’பாயுநீ ரரங்கந் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட,
மாயனார் திருநன் மார்பும் மரகத வுருவும் தோளும்,
தூய தாமரைக் கண்களும் துவரிதழ்ப் பவள வாயும்,
ஆயசீர் முடியும் தேசும் அடியரோர்க் ககல லாமே?’

(உவமைகள் தொடரும்)

Comments

பொ.பாலாஜிகணேஷ் says :

அற்புதம்....

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :