• GLITTERS | பளபள

ஏறும் பெட்ரோல் விலை... எகிறும் விலைவாசி!


ராஜ்மோகன் சுப்ரமண்யன்





ஒரு விற்பனை பிரதிநிதி வருத்தமுடன் பகிர்ந்துகொண்ட விஷயம் இது.. என்னோட தொழிலில் நான் தினமும் குறைந்தது நூறு கிலோமீட்டர் தூரம் பயணிக்கவேண்டும். இப்பொழுது இந்த தூரத்தை பயணிக்க குறைந்தது இருநூறு அல்லது முந்நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போடவேண்டும். அதாவது என் சம்பாத்தியத்தில் 30% முதல் 50% வரை எரிபொருளுக்கு போய்விடுகிறது என்று வருத்தப் பட்டார்.

அவருக்கு மட்டுமல்ல, அனைத்து மக்களையும் தீவிரமாக பாதிக்கிறது பெட்ரோல் விலை உயர்வு! எப்போதெல்லாம் பெட்ரோல் உயர்கிறதோ அப்பொழுது எல்லாம் விலைவாசி உயரும் என்பது எழுதப்படாத விதி! இந்தியா போன்று நுகர்வு கலாச்சாரம் மிகுந்த நாட்டில் இத்தகைய விலை உயர்வு ஒரு வலைப்பின்னாலாக மக்களை சூழ்கிறது. ஏன் இந்த பெட்ரோல் உயர்வு ?

பெட்ரோலின் விலை மூன்று காரணங்கள் அடிப்படையில் நிர்ணியிக்கப்படுகின்றன

*கச்சா எண்ணெய் விலை உயர்வு

*டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட சரிவு

*மத்திய மாநில அரசுகள் விதிக்கும் அதிப்படியான வரி.

முதலில் கச்சா எண்ணெய் விலையை பார்ப்போம். 2014 ஆம் ஆண்டில் இருந்ததைவிட கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்திருக்கிறது. 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு டாலர் கச்சா எண்ணெய்யின் விலை 105 டாலர்கள். ஆனால் இன்று ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 73.54 டாலர்கள். கிட்டதட்ட முப்பது சதவீதம் வரை விலை குறைவாக இருக்கிறது .

டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு..அதே நேரம் இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் விலையை பார்ப்போம் . 2014 ஜூலையில் தோராயமாக 60 ரூபாய் என்பது ஒரு டாலர் . இன்று 74 நான்கு ரூபாய் என்பது ஒரு டாலருக்கு நிகராக விழ்ந்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக 40% வீழ்ச்சி பெற்றுள்ளது.

மத்திய மாநில அரசின் வரி விகிதம்.. 2014 ஆம் ஆண்டு ஒரு லிட்டர் பெட்ரோல் மீதான வரிகள் ரூ.9.48 ஆகும். அதுவே தற்போது ரூ.32.90 ஆக உயர்ந்துள்ளது.அதாவது முந்தைய வரிவிதிப்பை விட மூன்று மடங்கு வரியை இப்பொழுது மத்திய அரசு விதித்துள்ளது. இதனை தாண்டி இதன் மீதான கலால் வரி,டீலருக்கான சேவைத்தொகை, மாநில அரசுகளின் மதிப்புகூட்டுதல் வரி என்று மூன்றுவிதமான கட்டணங்கள் இத்துடன் சேருகின்றன.

ஜுலை மாதம் நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரத்தை பார்ப்போம். இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தியன் ஆயில் நிறுவனம் தரும் புள்ளிவிவரப்படி பார்க்கும் போது ஒரு லிட்டர் பெட்ரோல் 76 ரூபாய்க்கு மாநில அரசுக்கு வருகிறது. இதில் பெட்ரோல் விலை ரூ.39.30 க்கும், இதன் மீதான மத்திய அரசின் கலால் வரி ரூ.32.90 மற்றும் விற்பனை முகவரின் சேவைத்தொகையாக ரூ.3.82 என மொத்தம் ரூ.76.02 என்ற விலையில் மாநில அரசுக்கு வழங்குகிறது.

ஆனால் பெட்ரோல் விலை இங்கே ரூ. 100க்கு மேல் விற்கபடுகிறதே எப்படி ?

இந்த வரிகளுக்கு மேல் மாநில அரசு விதிக்கும் மதிப்புகூட்டு வரி ஏறக்குறைய 25% வரை வருகிறது. அதாவது இந்த 76 ரூபாயுடன் தமிழ்நாடு அரசு ரூ.24 என்ற அளவில் மதிப்பு கூட்டு வரியை விதித்து ரூ.100க்கு பெட்ரோல் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்த விலை உயர்வுக்கு பின்புலமாக இருப்பது மத்திய அரசும் மாநில அரசும்தான். ஒவ்வொரு முறை விலை உயரும் போதும் மத்திய அரசின் மீது கை காண்பித்து மாநில அரசுகள் ஒதுங்கிகொள்ளும். மாநில அரசை குற்றம் சாட்டி மத்திய அரசு தப்பிக்கப் பார்க்கும். ஆனால் உண்மை நிலவரம் இரண்டுமே விலை உயர காரணமாக இருக்கின்றன.தேசம் முழுவதும் ஒரே வரிவிதிப்பை கொண்டு வரவேண்டும் என்று கூக்குரல் இட்டு ஜிஎஸ்டியை கொண்டு வந்த மத்திய அரசு இந்த பெட்ரோல் விவகாரத்தில் மட்டும் மழுப்பிகோண்டேயிருக்கிறது. அதே போன்று மாநில அரசு பெட்ரோல் உயர்வுக்கு மத்திய அரசின் மீது குற்றம் சுமத்தி மதிப்புகூட்டு வரி விதித்து பொதுமக்களை வாட்டுகிறது. காரணம் பெட்ரோல் மட்டுமே மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் பிரதான வருவாய்.

எனினும் பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழ்நாட்டின் மதிப்புகூட்டுதல் வரி மிக மிக குறைவே. உதாரணமாக மணிப்பூர் 36.05% ஒடிசா 32% ராஜஸ்தான் 36% சிக்கிம், திரிபுரா, உத்திரகண்ட் ஆகிய மாநிலங்கள் 25% முதல்25.25% வரையிலும் உத்திரபிரதேசம் 26.80% வரையிலும் வரிவிதிக்கின்றன. நமது பக்கத்து மாநிலமான புதுச்சேரி கூட 26% மதிப்புகூட்டுதல் வரி விதிக்கிறது. ஆனால் இந்த மாநிலங்களுக்கு எல்லாம் மத்திய அரசு தரும் பங்குதொகையான தமிழ்நாட்டைவிட அதிகம். ஆனால் தமிழ்நாட்டிற்கு ரூ.1.20 காசு என்ற அளவில் மட்டுமே வழங்கப்படுவதால் விலையை குறைக்க தமிழ்நாடு தயங்குகிறது.

விலை குறைய வாய்ப்புள்ளதா ?

மத்திய அரசின் மிகப்பெரிய வருவாய் பெட்ரோல் மூலம் வருகிறது. அதாவது மத்திய அரசுக்கு பெட்ரோல் கலால் வரிமூலம் கூடுதலா 2.25 கோடி வருவாய் ஆண்டுதோறும் கிடைக்கிறது. சரி ! மத்திய அரசின் மீது குறை சொல்லும் மாநில அரசு தனது மதிப்புகூட்டு வரியை குறைக்க கூடாதா ? இன்றைய தேதியில் மாநில அரசுக்கு இருக்கும் கடன் சுமைக்கு புதிய வரிகளை போடாமல் இருந்தாலே அது மிகப்பெரிய அதிசயமும் மக்களுக்கான ஆதாயமுமாக இருக்கும். ஏனெனில் 5.25 லட்சம் வரை கடன் சுமையில் இருப்பதாக சொல்லும் தமிழ்நாடு, நிதித்துறை வருவாயில் பெரும்பகுதியை வட்டியாக கட்டுகிறது. எனவே வாட் வரியை குறைத்தால் இந்த கடன் சுமை மேலும் அதிகரிக்கம்.

தேர்தல் அறிக்கை நிறைவேறுமா ?

பெட்ரோல் மற்றும் டீசலில் ரூ.1 முதல் ரூ.3 வரை குறைக்கப்படும் என்ற உறுதிமொழியை நிறைவேற்ற முடியாது நிலையில்தான் இருக்கிறது நிதி நிலைமை. எனினும் சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த மாநில நிதியமைச்சர் “ இந்த உறுதிமொழி வருவாய் சரி செய்தவுடன் நிறைவேற்றப்படும்” என்று கூறியுள்ளார். எனினும் இந்த மதிப்புகூட்டு வரி விஷயத்தில் ஏனைய மாநிலங்களைவிட குறைவாகவே தமிழ்நாடு வசூலிக்கிறது. தவிர இந்த மதிப்புகூட்டு வரியை அதிகம் வசூலிக்கும் மாநிலங்கள் சில மத்திய அரசின் பங்கை கூடுதலாக பெறுகிறது. இதன் மூலம் வாட் வரியில் சிறிதாக குறைத்து இந்த விலை உயர்வு காலத்தில் பெட்ரோல் விலையில் இரண்டு ரூபாய் வரை குறைத்து விற்கின்றன.

பெட்ரோல் விலை குறையுமா என்று கேட்டால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெளிச்சம் புலப்படவில்லை என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். எனினும் தேர்தல் நேரத்தில் மக்களை கவர எதுவும் நடக்கலாம். அதுவரை மக்கள் பெட்ரோல் விலை சுமையை சுமந்தே ஆக வேண்டும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :