• தினம் ஒரு வெரைட்டி ரைஸ்

நாசி லெமாக் (தேங்காய்பால் சோறு).


மங்களகெளரி, மலேசியா.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி 1 கப்,

தேங்காய்பால்- ஒன்றரை கப்.

உப்பு – தேவைக்கேற்ப.

இஞ்சி – 1 சிறு துண்டு.

செய்முறை:

அரிசியைக் களைந்து கழுவி நீர் இல்லாமல் வடிகட்டி ஒன்றுக்கு ஒன்றரை கப் எனும் அளவில் தேங்காய் பால் சேர்க்க வேண்டும். மிகவும் கெட்டிப் பாலாகவும் இல்லாமல் மிகவும் தண்ணீர் பாலாகவும் இல்லாமால் மிதமாக இருந்தால் சாப்பிட சுவைக்கும். திகட்டாது. தேவையான உப்பையும் (1/2 உப்பு) போட்டு மெல்லிய குச்சிகளாக நறுக்கிய இஞ்சித் துண்டுகளையும் போடவும். கைவசம் இருந்தால் ஒரு ரம்பை இலை சேர்ந்த்துக் கொள்ளவும். அதிக நீர் சேர்த்து குழைய விட்டு விடாமல், சரியான பதத்தில் வேகவிடுவதில்தான் இதன் சுவை இருக்கிறது. ரைஸ் குக்கரில் வேகவிடவும்.

இதற்குத் தொட்டுகொள்ள சம்பால் என்கிற சைடு-டிஷ் சூப்பராக இருக்கும். அதற்கு காய்ந்த மிளகாயை (100 கிராம்) துண்டுகளாக்கி விதைகளை நீக்கி விட்டு சுடுநீரில் 10 நிமிடம் போட்டு எடுத்து, கூடவே 5-6 சின்ன வெங்காயம், 4-5 பல் பூண்டு, சின்னத் துண்டு இஞ்சி சேர்த்து அரைக்கவும். கைவசம் இருந்தால் சின்னத் துண்டு பச்சை மஞ்சள், லெமன் கிராஸ் சேர்க்கலாம். வாணலியில் எண்ணை காய்ந்ததும் ஐந்தாறூ முழு பூண்டு பல் போட்டு பொரிந்தவுடன், அரைத்த மிளகாய் சாந்து சேர்த்து அடுப்பை நிதானமாக எரியவிட்டு,வேகவிடவும். மிளகாய் நெடி போய் எண்ணெய் மேலே மிதக்கும்போது, சிறிது புளி கரைத்து ஊற்றி ஒரு கொதி விட்டு ஆறியதும் இறக்கலாம். சம்பால் ரெடி!

இந்த நாசி லெமாக் சோற்றோடு சிறிது சம்பால், எண்ணெயில் வறுத்த நிலக்கடலை, ஆய்ஸ்டர் மஷ்ரூம் ப்ரை, டோஃபு ப்ரை மற்றும் வெள்ளரிக்காயோடு சேர்த்துபரிமாறலாம். தேங்காய்பால் சோறு சாம்பாருக்கும் இதம்தான் .

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :