• தீபம் - ஆன்மீகம்

இறைவனைக் காட்டும் இல்லற வாழ்க்கை!


எ.எஸ்.கோவிந்தராஜன்

ஒருவர் இல்லறத்தில் எவ்வாறு வாழ வேண்டும் என்பது குறித்து பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் அருளிய உபதேசம்...

எல்லா கடமைகளையும் செய். ஆனால், மனத்தை இறைவனிடம் வை. மனைவி, மக்கள், தாய், தந்தை, எல்லோருடனும் சேர்ந்து வாழ். அவர்களுக்குச் சேவை செய். அதேவேளையில் அவர்கள் உன்னுடைய வர்கள் அல்ல என்பதை உள்ளத்தில் தெரிந்து வைத்துக்கொள்.

பணக்கார வீட்டு வேலைக்காரி அங்கே எல்லா வேலைகளையும் செய்கிறாள். ஆனால், அவளது மனம் கிராமத்தில் உள்ள தனது வீட்டையே சதா நினைத்துக்கொண்டிருக்கிறது. அவள் அந்தப் பணக் காரரின் குழந்தைகளைத் தன் குழந்தைகளைப் போலவே கவனிக் கிறாள். ’என் ராமன், என் ஹரி’ என்றெல்லாம் சீராட்டுகிறாள். இருந்தாலும், அந்தக் குழந்தைகள் தன்னுடையவர்கள் அல்ல என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும்.

ஆமை தண்ணீரில் இங்குமங்கும் திரிகிறது. ஆனால், அதன் மனமெல் லாம் எங்கிருக்கும் தெரியுமா? தான் கரையில் இட்ட முட்டைகளின் மீது. அதுபோல், இல்லறத்தில் உனக்குரிய எல்லா கடமைகளையும் செய். ஆனால், மனத்தை இறைவனிடம் வை.

இறைவனிடம் பக்தியை அடையாமல், இல்லறத்தில் ஈடுபட்டால் மேலும் மேலும் சிக்கலில் மாட்டிக்கொள்வாய். ஆபத்து, துன்பம், கவை இவையெல்லாம் வந்து மோதும்போது, மன உறுதியை இழப்பாய். அது மட்டுமல்ல, உலகியல் விஷயங்களில் மனம் செல்கின்ற அளவுக்கு பற்றும் அதிகரிக்கும்.

கைகளில் எண்ணெய் தடவிக்கொண்டு பலா பழத்தை வெட்ட வேண்டும். இல்லாவிட்டால் அதன் பிசின் கைகளில் ஒட்டிக்கொள்ளும். அதுபோல், பக்தி என்ற எண்ணெயைப் பூசிக்கொண்டு இல்லறத்தில் ஈடுபட வேண்டும்.

இந்த பக்தியை அடைவதற்கு தனிமை தேவை. வெண்ணெய் எடுக்க வேண்டுமானால் உறையிட்ட பாலை தனியிடத்தில் வைக்க வேண்டும். அசைத்து கொண்டிருந்தால் தயிர் தோயாது. பிறகு எல்லா வேலை களையும் ஒதுக்கி வைத்துவிட்டு தயிரைக் கடைய வேண்டும். அப்போதுதான் வெண்ணெய் திரண்டு வரும்.

இன்னும் கேள்! தனிமையில் அமர்ந்து, இறை சிந்தனையில் ஈடுபட்டால் மனத்தில் ஞானம், வைராக்கியம், பக்தி முதலியவை உண்டாகிறது. ஆனால், அதே மனத்தை உலகியல் விஷயங்களில் ஈடுபடுத்தினால் அதன் தரம் தாழ்ந்து விடுகிறது.

இல்லறம் தண்ணீர், மனமோ பால். பாலை தண்ணீரில் கலந்தால் அவை கலந்து ஒன்றாகி விடும். தூய பாலை காண முடியாது. அதே பாலை தயிராக்கி, வெண்ணெய் எடுத்து, அந்த வெண்ணெயைத் தண்ணீரில் இட்டால் அது ஒட்டாமல் மிதக்கும். எனவே, தனிமையில் சாதனைகள் செய்து, முதலில் ஞானம், பக்தி என்னும் வெண்ணெயைப் பெறு. அந்த வெண்ணெயை இல்லற வாழ்க்கை என்னும் நீரில் இட்டால் அது நீருடன் கலக்காது. மிதக்கும்.

உலகியல் வாழ்க்கையில் காமினீ-காஞ்சன சிந்தனை ஒன்றே உள்ளது. அதில் ஆராய்ச்சி மிகவும் அவசியம். காமினீ-காஞ்சனம் நிலையற்றது. இறைவன் ஒருவர் மட்டுமே நிலையானவர். பணத்தால் என்ன கிடைக்கும்? தங்க இடம் கிடைக்கும். அவ்வளவுதான். இறைவன் கிடைக்க மாட்டார். எனவே, பணம் ஒருபோதும் வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்க முடியாது. இப்படிச் சிந்திப்பதுதான் ஆராய்ச்சி.

Comments

பொ.பாலாஜிகணேஷ் says :

அருமையான பதிவு...

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :