• GLITTERS | பளபள

மத்திய அரசின் அமைச்சரவை மாற்றத்துக்கு காரணம் என்ன?


வி.ஆர்.ஆர். ரகுராமன்.





கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் 53 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது.. இந்நிலையில் நேற்று (ஜூலை 7) மத்திய அமைச்சரவை விரிவாக்கப்பட்டு, இப்போது அமைச்சர்களின் எண்னிக்கை 77ஆக உள்ளது. மொத்தம் 15 கேபினட் அமைச்சர்கள்! அதில் 7 பேர் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்!

மத்திய அமைச்சரவையில் நடைபெற்ற இந்த திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம்?

கொரோனா 2-வது அலை குறைந்த பிறகு புதிய அமைச்சர்களை தேர்வு செய்வது தொடர்பாகவும், திறமையாக செயல்படாத அமைச்சர்களை நீக்குவது தொடர்பாகவும் பிரதமர் மோடி ஏற்கனவே ஆலோசனை நடத்தி வந்தார். மேலும் மத்திய அரசு பல்வேறு எதிர்ப்புகளையும் பிர்சினைகளையும் எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக - பணமதிப்பிழப்பு பிரச்சினையில் தொடங்கி ஜிஎஸ்டி வரிவிதிப்பு வரை பல விவகாரங்கள்.. மேலும் CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், விவசாயிகளின் போராட்டம், டெல்லியில் ஏற்பட்ட மிக மோசமான வகுப்புக் கலவரங்கள், ஜம்மு-காஷ்மீரில் நீண்டகால இணையம் தொடர்புக்குத் தடை, கொரோனா 1 மற்றும் 2-ம் அலை சீர்கேடுகள் என்று பல விஷய்ங்களை மத்திய அரசு சமாளிக்க வேண்டியுள்ளது.

அதுமட்டுமல்ல.. மத்திய அரசின் பதவிக்காலம் இன்னும் 3 ஆண்டுகளில் முடியவடைய உள்ளது. இதை மனதில் வைத்து எதிர்கால அரசியல் நோக்கங்களுக்காகவும் இந்த அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது என்றே சொல்லலாம். மேலும் பல மாநிலங்களீல் விரைவில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தல்களும் முக்கிய காரணம்! குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு, அம்மாநிலத்தைச் சேர்ந்த 8 பேருக்கு இப்போது புதிதாக அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் மேற்கு வங்காளத்திலிருந்து நான்கு புதிய அமைச்சர்களும், குஜராத்தில் இருந்து மூன்று புதிய அமைச்சர்களும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை தமிழக பிஜேபி தலைவராக இருந்த. எல். முருகன் இப்போது மத்திய இணை அமைச்சராக ஆகியிருக்கிறார். தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க நான்கு தொகுதிகளில் வென்றதற்கு எல்.முருகனுக்குப் பெரும் பங்கிருக்கிறது. அந்த வகையில் எல்.முருகனை மத்திய இணை அமைச்சராக நியமித்திருப்பதன் மூலம் தமிழகத்தில் பிஜேபி-யின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை பிஜேபி-யின் மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்படலாம் என்று அக்கட்சி வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :