• தீபம் - ஆன்மீகம்

ஆழ்வார் பாசுரங்களும் அழகிய உவமைகளும்! - 4


- லதானந்த்

தொண்டை நாட்டில் உள்ள திருமழிசை எனும் ஊரில் பிறந்த ஆழ்வார், திருமழிசை ஆழ்வார் என்றே அறியப்படுகிறார். இவருக்கு, ‘பக்திசாரர், மழிசைபிரான்’ என்னும் பெயர்களும் உண்டு. பெருமாளை குறிக்கும், ‘பிரான்’ என்ற சொல் இவரையும் குறிக்கிறது. இது, வேறு எவருக்கும் கிட்டாத பெரும் பேறு ஆகும்.

இவர் பிறந்தபோது கை, கால்கள் இல்லாமல் பிறந்தார் எனவும், அதனால் ஒரு பிரம்புப் புதருக்கடியில் இவரைப் பெற்றோர் விட்டுச் சென்றனர் எனவும், பின்னர் பெருமாளின் அனுக்கிரஹத்தால் குறைவில்லா முழு உரு பெற்றார் எனவும் வரலாறு சொல்கிறது. இவர் திருமாலின் சுதர்ஸன சக்கரத்தின் அம்சம் எனப் போற்றப்படுபவர்.

பல்வேறு சமயங்களையும் ஆராய்ந்து இறுதியில் வைணவத்தை பின்பற்றிய அடியார் இவர். ‘நான்முகன் திருவந்தாதி’ மற்றும் ‘திருச்சந்த விருத்தம்’ என்னும் இரு பிரிவுகளில் பாசுரங்களை இயற்றி இருக்கிறார்.

இவரது பாசுரங்கள் ஆழ்ந்த பொருளுடையன; அழகிய நயம் உடையன; உவமைகளால் ஒளியேற்றப்படுவன. திருச்சந்த விருத்தத்தில் ஒரு பாசுரத்தில் இவர் சொல்லும் உவமையைப் பாருங்கள்!

சமுத்திரத்திலே அலைகள் வீசுவதற்குக் காற்றே காரணம்; அந்தக் காற்று நின்றுவிட்டால் அலைகளிலும் ஆர்ப்பரிப்பு இராது; அவை அடங்கி ஒடுங்கிப் போயிருக்கும். அதேபோல, திருமாலின் வடிவத்துக்குள் அசையாப் பொருட்களாகிய மலை முதலியனவும், பறவை, மிருகங்கள், மானிடர் போன்ற அசையும் உயிர்கள் எல்லாமே அடங்கிவிடும். இது, அற்புதத்திலும் அற்புதம் என்கிறார் திருமழிசை ஆழ்வார். இதோ அந்தப் பாசுரம் :

‘தன்னுளே திரைத் தெழும் தரங்க வெண் தடங்கடல்
தன்னுளே திரைத் தெழுந்து அடங்குகின்ற தன்மை போல
இன்னுளே பிறந்திறந்து நிற்பவும் திரிபவும்
இன்னுளே அடங்குகின்ற நீர்மைநின்கண் நின்றதே.’

இன்னொரு பாசுரத்தில் ஆதிசேஷன் மீது சயனித்திருக்கும் திருமாலின் கோலத்தை அற்புதமாய் விவரிக்கிறார். முதலில் ஆதிசேஷனை பற்றிச் சொல்லி விடுகிறார். அவன் ஆயிரம் வாய்களை உடையவன்; அந்த ஆயிரம் வாயிலிருந்தும் விஷம் வெளியாகிறது; இரண்டாயிரம் கண்களில் இருந்தும் ஜுவாலை கிளம்புகிறது; பேரொளி கொண்டவனாக அவன் திகழ்கிறான்; அவனது திரண்ட அழகுடைய படங்களே மேல் விதானமாக இருக்கின்றன. அவனே ஒரு வெள்ளைப் பாற்கடல் போல இருக்கிறான்.

‘ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டவனே! கடலைப் போன்ற நீல நிறம் கொண்டவனே! ஆதிசேஷன் மீது படுத்திருக்கும் உனது திருக்கோலம் வெள்ளைப் பாற்கடல் மேல், ஒரு நீலக் கடல் சயனித்திருப்பது போலல்லவா இருக்கிறது!’

அந்தப் பாசுரம் இதோ :

‘விடத்தவாய் ஓராயிரம் இராயிரங்கண் வெந்தழல்
விடுத்து வீழ்விலாத போகம் மிக்க சோதி தொக்கசீர்
தொடுத்து மேல் விதானமாய் பௌவநீர் அராவணைப்
படுத்தபாயல் பள்ளிகொள்வது என்கொல் வேலை வண்ணனே!’

(உவமைகள் தொடரும்)

Comments

Mangalagowri says :

தொடர்ந்து இந்த பேரானந்த கடலில் நீந்த காத்திருக்கிறோம். தொடர்ந்து எழுத வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். நன்றி சார்

G Srikanth says :

தொடர்க நற்பணி

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :