• தீபம் - ஆன்மீகம்

ஆழ்வார் பாசுரங்களும் அழகிய உவமைகளும்! - 3


- லதானந்த்

குலசேகர ஆழ்வார் சேர மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர்; சந்திர குலத்தவர்; கொல்லி நகரில் பிறந்தவர்; வைணவ அடியார்கள் மேல் நாட்டம் மிகக் கொண்டவர். தமது சிந்தைக்கினிய திருமால் எழுந்தருளி யிருக்கும் திருத்தலங்களில் ஏதேனும் உயிருள்ள அல்லது உயிரற்ற பொருளாக மாறி, என்றென்றும் மாலவன் திருமேனியை தரிசிக்க வேண்டும் என்ற மாளாத விருப்பம் கொண்டிருந்தவர். ‘ஆழ்வார் பெருமாள் திருமொழி’ என்ற திவ்ய பிரபந்தப் பாசுரங்களோடு, புராண இதிகாசங்களின் சாரமாகிய, ‘முகுந்த மாலை’ என்ற நூலையும் இவர் இயற்றியுள்ளார்.

இவரது பாசுரங்களில் சரளமாக வந்து விழும் உவமைகள் எப்போதும் சிந்தித்துச் சுவைக்கத் தக்கன. இதோ அவற்றில் சில :

ஆதிசேஷன் தன்னுடைய ஆயிரம் நாவால் திருமாலை துதிக்கும் பேரழகைக் கண்டு, மனம் தடுமாறிக் கீழே விழுந்துவிடாமல் இருக்க, அரங்கனின் கருவறை வாசலில் உள்ள தூணைப் பற்றிக்கொண்டு வாயாரத் துதிக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை வெளிப்படுத்தும் பாசுரத்தில்தான் எவ்வளவு தீர்க்கமான உவமைகள்!

‘ஆதிசேஷனுடைய உடல் வெண்ணிறமான பால் போன்றிருக்கிறது’ என்கிறார். அதே பாசுரத்தில் இப்படியும் விவரிக்கிறார். அரங்கன் மேலிருக்கும் பற்றினால், அசுரர்களால் ஆபத்து எதுவும் அவருக்கு வந்துவிடக்கூடாது என்ற பக்தி சிந்தனையால், எப்போதும் வாயிலிருந்து நெருப்பை ஆதிசேஷன் உமிழ்ந்துகொண்டிருக்கிறானாம். அப்படிக் கிளம்பும் நெருப்புப் படலம், ‘திருமாலின் தலைக்கு மேல் மேல்விதானம் ஒன்று அமைக்கப்பட்டதோ’ எனத் தோன்றும்படி இருக்கிறதாம். நெருப்பே கூரையாக இருப்பதை கற்பனை செய்துதான் பாருங்களேன்! அந்தத் தீக்கூரைக்குக் கீழே பள்ளிகொண்டிருக்கும் பெருமாளுக்கும் அடுத்த உவமை சொல்கிறார். திருமாலின் திருமேனி காயாம்பூ மாலையைப் போலிருக் கிறதாம். நெருப்பின் அருகில் இருந்தால் மலர் வாடி விடுமல்லவா? ஆனால், இந்த நெருப்புக் கூரைக்கடியில் ஒரு பூமாலையல்லவா துயில் கொள்கிறது! என்னே உவமை நயம்!

இதோ அந்தப் பாசுரம் :

`வாயோரீ ரைஞ்ஞூறு துதங்க ளார்ந்த வளையுடம்பி னழல்நாகம்
உமிழ்ந்த செந்தீ
வீயாத மலர்ச்சென்னி விதான மேபோல் மேன்மேலும் மிகவெங்கும்
பரந்த தன்கீழ்
காயாம்பூ மலர்ப்பிறங்க லன்ன மாலைக் கடியரங்கத் தரவணையில்
பள்ளி கொள்ளும்
மாயோனை மணத்தூணே பற்றி நின்றென் வாயார என்றுகொலோ
வாழ்த்தும் நாளே!`

குலசேகர ஆழ்வாருக்கு ஸ்ரீரங்கநாதர் மீது அளவு கடந்த பற்று. அவரைக் கண்டு மனம் உருகிப் பாடும் நாளை பரவசத்தோடு எதிர்நோக்குகிறார் அந்த பக்தர். இறைவனை வர்ணிக்கும் அவரது வார்த்தைகளில் உவமைகள் துள்ளி விளையாடுகின்றன. இறைவன் மேனியின் வண்ணம் அவருக்கு ஆழ்கடலின் வண்ணத்தைக் கூட்டுகிறது. ஆனால், அவனது விழிகளோ, செக்கச்சிவந்த வண்ணம் கொண்ட தாமரைகளை நினைவூட்டுகிறது. முகத்தில் இருக்கும் ஒளி, அப்பப்பா... அது சந்திரனுடைய தண்மையான ஒளியையல்லவா காட்டுகிறது! இப்படி வண்ணக் கலவைகளைத் தமது பாசுரத் தூரிகையால் வரைந்து காட்டுகிறார் குலசேகர ஆழ்வார். இதோ அந்தப் பாசுரம் :

`அளி மலர்மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை அமரர்கள்தம் குழுவும்
அரம்பையரும் மற்றும்
தெளி மதி சேர் முனிவர்கள்தம் குழுவும் உந்தித் திசை திசையில் மலர்
தூவிச் சென்று சேரும்
களி மலர் சேர் பொழில்-அரங்கத்து உரகம் ஏறிக் கண்வளரும்
கடல்வண்ணர் கமலக் கண்ணும்
ஒளி மதி சேர் திருமுகமும் கண்டுகொண்டு என் உள்ளம் மிக
என்றுகொலோ உருகும் நாளே`

(உவமைகள் தொடரும்)

Comments

Mangalagowri says :

அருமை சார். "காயாம்பூ மாலை" ... ஆஹா.... என்ன மணம்... என்ன மணம்... ! அழகு என்பதற்கு பதில் மணம் என்கிறேனே என்று யோசிக்கிறீர்களா? காயாம்பூ எனும் ஏலக்காய் வாசனைக்குறிய பொருள்தானே... மணம் வருவதில் என்ன ஆச்சரியம்! நன்றி லதானந்த் சார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :