• GLITTERS | பளபள

தனிநபர் பொருளாதாரம் உயர்ந்தால், மாநிலம் உயரும்!


ராஜ்மோகன் சுப்ரமண்யன்

ஒரு மாநிலத்தின் வளம் என்பது அங்கு நிறைந்துள்ள மனிதவளத்தை முழுமையாக பயன்படுத்துதல்தான்! அந்தவகையில், தமிழ்நாடு அதிர்ஷடவசமாக பல விஷயங்களில் முன்னணியில் இருக்கிறது.

இந்தியாவின் ஆக சிறந்த கல்விகூடங்களும் ஆராய்ச்சி மையங்களும் நிறைந்த மாநிலம் இது. இதன் மூலம் மிகவும் சிறந்த மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் வெளியேறுகின்றனர். கேரளா நூறு சதவீதம் கல்வி அறிவு பெற்ற மாநிலமாக அறியபட்டாலும் திறன்மிகு கல்வியறிவில் தமிழகம்தான் முதலிடம் வகிக்கிறது.

அடுத்து - இயற்கை வளம்! வேளாண்மைக்கு உகந்த நிலம் தமிழகத்தில் நிறையவே இருக்கிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களுக்கு உட்பட்ட தஞ்சை, திருச்சி, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டத்தின் ஒரு பகுதி என இந்த ஒன்பது மாவட்டங்கள் ஆசியாவின் நெற்களஞ்சியமாக போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 35 லட்சம் மெட்ரிக் டன்னுக்குமேல் நெல் உற்பத்தி இங்கு நடைபெறுகிறது. இதுதவிர தானியங்கள் , எண்ணெய்வித்துக்கள், காய்கறிகள் என பல்வேறு பகுதிகள் செழிப்புடன் இருக்கின்றன. ஆனால் விவசாயத்தின் மீதான கவனம் எல்லா அரசுகளுக்கும் குறைவாகவே இருக்கிறது. இதனை சரி செய்யவேண்டும்.

அடுத்து – சுற்றுலா! உலகின் அதிபுராதன சுற்றுலா மையங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. மருத்துவ சுற்றுலா எனப்படும் (மெடிக்கல் டூரிஸம்) துறையில் இந்தியாவிலேயே முதன்மையான மாநிலம் தமிழ்நாடு.

தொழில்வளத்திற்கு என்று சிட்கோ, சிப்காட், எல்காட், டிட்கோ, டிக் என ஏராளமான அரசு அமைப்புகள் செயல்படுகின்றன. பார்சூன்- 500 நிறுவனங்களின் நம்பிக்கை களமாக இருக்கிறது தமிழ்நாடு.

திரைப்படத்துறையிலும் நாட்டின் முதன்மையான மாநிலம் தமிழ்நாடு. ஆனால் இந்த திரைப்பட வர்த்தகம் முறைப்படுத்தப்படாத காரணத்தால் ஒருசாரார் கடும் நஷ்டங்களை சந்திக்க , இன்னொரு குறிப்பிட்ட குழுக்கள் பெரும் லாபத்தை எடுக்கின்றன. கேரளாவில் இருப்பது போன்று தியேட்டர்களை அரசே ஏற்று நடத்தினால் வேலைவாய்ப்பும் வருவாயும் வர வழி உண்டு. அதே போன்று கேபிள் டிவி மற்றும் டிஷ் இணைப்புகள் வழங்குவதில் தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் எடுக்கின்றன. இதனை அரசு தனக்கானதாக்கி கொள்ளவேண்டும்.

இப்படி தமிழ்நாடு எல்லா முகங்களிலும் வளம் நிரம்பிய மாநிலமாக இருந்தபோதும் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் கொஞ்சம் தடுமாற்றம் கண்டது என்பதை தற்போதையை நிதி நிலைமைகள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்நிலையில் இரண்டு கட்ட நடவடிக்கைகள் அவசியமாகிறது.

முதல்கட்டம்- தமிழ்நாடு அளவில் மக்களின் நிலையை ஆராயவேண்டும். கடைநிலை மனிதர்கள் முதல் உயர்நிலை மனிதர்கள் வரை அவர்களின் தேவைகளை பட்டியலிடவேண்டும். உயர்நிலை மனிதர்களுக்கு என்ன கஷ்டம் எற்பட்டிருக்க போகிறது என்று கேள்விக்கேட்கலாம். கடந்த நான்கு ஆண்டுகளில் ஏராளமான தொழில்முனைவோர் தமிழ்நாட்டை காலி செய்துகொண்டு ஆந்திராவின் ஶ்ரீசிட்டி மற்றும் பங்களாதேசம் போன்ற நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். குறிப்பாக ஜிஎஸ்டி குளறுபடிகளால் சிறுகுறு நடுத்தர தொழில்கள் முற்றிலும் சிதைந்துள்ளன . இவற்றை சரிபடுத்தினால் மட்டுமே இங்கே வேலைவாய்ப்புகளை பெருக்க முடியும்.

ஒரு மாநிலத்திற்குள் தேவைப்படும் கல்வி, சுகாதாரம், பொருளாதார நிலைகளை ஆராய பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் தலமையிலான மாநில வளர்ச்சிக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இவருடன் இணைந்து பல்துறை நிபுணர்கள் முழு நேரமாகவும் பகுதி நேர உறுப்பினர்களுமாக மொத்தம் பத்து பேர் இடம் பெற்றுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டின் தேவைகள் ஆராயப்படும்.

அதே போன்று அந்நிய முதலீடுகள் குவியவேண்டும் எனில் அந்த மாநிலத்திற்கு என்று ஒரு வலிமையான முகம் வேண்டும். கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அந்த ஈர்ப்பு குறைந்துள்ளது. அந்த வகையில் மாநில அளவில் பொருளாதார கொள்கையை வகுக்க, முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படுள்ளது. இந்த குழுவில் அமெரிக்காவின் நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டாப்லோ என்ற பொருளாதார நிபுணரும், இந்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், பொருளாதார நிபுணர் ஜீன் டிரேசல், ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் டாக்டர் எஸ் நாராயண் ஆகியோர் உள்ளனர்.

பேராசிரியர் ஜெயரஞ்சன் தலைமையிலான குழு சமூகநீதியுடன் கூரிய பொருளாதார மேம்பாட்டுக்கு வழிகாட்டும். ரகுராம் ராஜன் தலைமையிலான குழு உட்கட்ட பொருளாதார சீர்திருத்தத்துடன் வெளிநாட்டு முதலீடுகளுக்கு உதவும்.

இந்த இரண்டு குழுக்களுடன் இணைந்து தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செயல்படுவார். இந்த தேர்வுகளும் குழுவும் பிடிஆரின் ஆலோசனைகளின் படியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு ஒரு சரியான கட்டமைப்பு உருவாக வாய்ப்புள்ளதாகவே இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன.

இப்பொழுது தமிழ்நாட்டின் முதல் பணி . அதிகரித்து வரும் கடன் சுமையை குறைத்து நிதி ஆதாரத்தை நிலைநிறுத்துவது, சாமனிய மனிதர்களுக்கு அடிப்படை வசதிகளை பெருக்குவது, தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை நிறைவேற்றுவது, உட்கட்டமைப்புகளை வலிமைப்படுத்தி தொழில் வளங்களை பெருக்கி வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவையே! இதன் மூலம் தனிநபரின் வருவாயை உயரும்.. அதன்மூலம் மாநிலத்தின் பொருளாதாரமும் நாட்டின் பொருளாதாரமும் மேம்படும். தமிழ்நாடு தலைநிமிர நம்பிக்கையுடன் இருப்போம்!

Comments

அனுராதா சேகர் says :

மனசுக்கு த் தெம்பும் கரங்களுக்கு வலுவும் தரும் விதத்தில் மிக சரியான நேரத்தில் எழுதப்பட்ட கட்டுரை.. நிதி வளம் குறித்து அலசி ஆராய்ந்து எழுதி இருக்கிறார் ராஜ் மோகன்..விரைவில் தலை நிமிரும் தமிழகம்..

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :