• அமரர் கல்கியின் கல்வெட்டுகள்

53. என்ன சேதி?


- அமரர் கல்கி

என்ன சேதி?

திருக் கைங்கரியம்

சென்னை நகரில் ஸ்ரீ சத்தியமூர்த்தி வாரம் கொண்டாடப்பட்டபோது, ஒரு கூட்டத்தில் தேசபக்தர் ஸ்ரீ.கே. பாஷ்யம் ஓர் உண்மையைச் சொன்னார். அது என்ன என்றால், “கிருஷ்ணா நதிக்கு வடக்கே ஸ்ரீ.எஸ். சத்தியமூர்த்தி பிறந்திருந்தால் அவரையும் பண்டித ஜவாஹர்லாலைக் கொண்டாடுவதைப் போல் கொண்டாடியிருப்பார்கள்!” என்றார். முக்கியமாகத் தமிழர்களை அவ்விதம் கொண்டாடியிருப்பார்கள். ஸ்ரீ சத்தியமூர்த்தி அத்தகைய பாக்கியம் செய்யவில்லை. அது காரணத்தினால் மூத்தாள் பிள்ளையாகிய துருவன் இளையராணி சுருசியினால் எந்தவிதமாக நடத்தப்பட்டானா அந்த மாதிரி ஸ்ரீ சத்தியமூர்த்தியின் ஞாபகம் போற்றப்படுகிறது. இப்போது ஜீவியவந்தர்களாக உள்ள தமிழ்நாட்டுத் தேச பக்தர்களையும் தேசத்தொண்டர்களையும் கூடப் பிற்காலத்தில் வரும் சந்ததிகள் அவ்வாறே நடத்தக் கூடுமென்று நாம் அஞ்சுகிறோம். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை நமது தேச பக்தர்களும் தொண்டர்களுமே திவ்யமாய்ச் செய்து வருகிறார்கள். வடக்கத்தி மோகத்தை வளர்ப்பதற்கும், தமிழ்நாட்டைத் தாழ்த்துவதற்கும் உரிய திருக் கைங்கரியத்தை நன்கு செய்து வருகிறார்கள்.

இன்னும் பலர் உளர்

சில மாதங்களுக்கு முன்பு அரியலூரில் கூடிய அரசியல் மகாநாட்டுக்குப் பம்பாயிலிருந்து ஸ்ரீ.எஸ்.கே. படீல் வரவழைக்கப்பட்டார். சென்ற வாரத்தில் சென்னையில் நடந்த மூன்றாவது செர்க்கிள் அரசியல் மகாநாட்டுக்கு அதே பம்பாய் நகரிலிருந்து ஸ்ரீ நாகின்தாஸ் மாஸ்டர் தருவிக்கப்பட்டார். இன்னும் வடநாட்டில் பூனா, ஆமதாபாத், அலகாபாத், கல்கத்தா, நாக்பூர், லாகூர் முதலிய எத்தனையோ நகரங்கள் இருக்கின்றன. அந்தந்த நகரங்களில் காங்கிரஸ் பிரமுகர்களும் இருக்கிறார்கள். அவர்களெல்லாரும் இனி ஒவ்வொரு சர்க்கிள் மகாநாட்டுக்கும், ஜில்லா மகாநாட்டுக்கும், தாலுகா மகாநாட்டுக்கும் வரவழைக்கப்படுவார்கள் என்று நம்புகிறோம். அப்போதுதானே தமிழ்நாட்டு மக்கள், “தேசபக்தி, அரசியல் அறிவு எல்லாம் கிருஷ்ண நதிக்கு வடக்கேதான் இருக்கிறது; அதற்கு இப்பால் ஒன்றுமே இல்லை” என்னும் மகத்தான உண்மையை நன்கு உணர்வார்கள்!

ஆட்சேபிக்கிறோம்

பிற நாட்டாரை மரியாதை செய்வது நியாயம்; நமது வடநாட்டுச் சகோதரர்களை நாம் அன்புடன் வரவேற்பது ரொம்பவும் நியாயம். விருந்தோம்பல் குணம் தமிழ் மக்களின் பண்பாட்டுக்கு மிகவும் உகந்தது. இதையெல்லாம் நாம் ஆட்சேபிக்கவில்லை.

தேசத்துக்கே பொதுவான வடநாட்டுத் தலைவர்களிடம் பக்தி செலுத்துவதையும் நாம் ஆட்சேபிக்கவில்லை. அத்தகைய பக்தியைப் போற்றுகிறோம். ஆனால் பலவீனமான கட்சிக்குப் பலங்கொடுப்பதற்காகவும், செல்வாக்கில்லாத கொள்கைகளுக்குச் சிப்பக் கட்டுக் கட்டுவதற்காகவும் வடநாட்டினர் கொண்டு வரப்படுவதை ஆட்சேபிக்கிறோம். மிகவும் சாமான்யமான மனிதர்களை வட நாட்டிலிருந்து பிடித்துக்கொண்டு வந்து, ஓகோ! பார்த்தீர்களா! அப்பேர்ப்பட்டவரே இப்படிச் சொல்லிவிட்டார்!” என்று பொது ஜனங்களைத் திணற அடிப்பதை ரொம்பவும் ஆட்சேபிக்கிறோம். இப்படியெல்லாம் செய்வது தமிழ் நாட்டாரின் மரியாதையை அநாவசியமாகக் குறைத்துக் கொள்வதாகும் என்று வற்புறுத்துகிறோம்.

இவர்களை அழைக்கிறார்களா?

ஸ்ரீ எஸ்.கே.பாடீலும், ஸ்ரீ நாகின்தாஸ் மாஸ்டரும் அப்படி என்ன பிரமாதமான புதிய உண்மையைச் சொல்லிவிட்டார்கள்?

ஸ்ரீ. சி.என். முத்துரங்க முதலியாரும் ஸ்ரீ. எம். பக்தவத்ஸலமும் என்னத்தைச் சொல்லி வருகிறார்களோ, அதையேதான் அவர்களும் சொன்னார்கள்? இதற்காக அவர்களைப் பம்பாயிலிருந்து ரயில் சார்ஜு செலவு பண்ணி அழைத்துக் கொண்டு வருவானேன்? ஸ்ரீ சி.என். முத்துரங்க முதலியாரும் ஸ்ரீ. எம். பக்தவத்ஸலமும் மேற்படி பம்பாய்த் தலைவர்களை விட எந்த விதத்திலே குறைந்தவர்கள்? தியாகத்திலா, தேசத் தொண்டிலா, அந்தஸ்திலா, எந்த விதத்தில் குறைந்தவர்கள்? அப்படியிருக்க, ஒரு விஷயத்தை இவர்கள் சொன்னாலே போதாதா? இவர்கள் சொல்லித் தமிழ் மக்கள் ஒரு விஷயத்தை ஒப்புக் கொள்ளவில்லையென்றால், அதற்குச் சிம்பு வைத்துக் கட்டப் பம்பாயிலிருந்து சாதாரண மனிதர்களைக் கொண்டுவந்து அவர்களை ‘ஓஹோ’ என்று தூக்கி வைத்துப் பிரமாதப் படுத்த வேண்டுமா? நல்லது;

இதேமாதிரி பம்பாயில் வந்து பிரசுரம் செய்ய ஸ்ரீ சி.என். முத்துரங்க முதலியாரையும் ஸ்ரீ பக்தவத்ஸலத்தையும் யாராவது கூப்பிடுகிறார்களா? அல்லது நமது சென்னை மேயர் ஸ்ரீ ராதாகிருஷ்ணப் பிள்ளை அவர்களைத்தான் பம்பாயில் நடக்கும் மகாநாட்டைத் திறந்து வைக்க அழைக்கிறார்களா? பொதுவாக வடநாட்டார் தமிழ் மக்களை அலட்சியம் செய்கிறார்கள் என்பது வெளிப்படை. அந்த அலட்சியத்தை மேலும் மேலும் வளர்ப்பதற்குரிய காரியங்களை நாம் செய்துகொண்டு வருகிறோம். ஏன், நமக்கு அடுத்த ஆந்திர தேசத்திலேகூட இம்மாதிரி காரியம் நடைபெறுவதாகத் தெரியவில்லையே தமிழர்கள் தலையிலே மட்டுந்தானா இம்மாதிரியெல்லாம் அவமதிக்கப்பட வேண்டும் என்று எழுதியிருக்கிறது?

(22.4.1945 கல்கி தலையங்கத்திலிருந்து...)

Comments

கிரிஜாரகவன் says :

தமிழர்கள் மூளை இல்லாதவர்கள் இல்லை. ஏன்அவர்களையும் புகழலாமே. கூகுள் சிந்தர் பிச்சை தமிழ்நாட்டை சேர்ந்தவர்தனே. இந்தியாவிற்கே பெருமை தானே..இந்தியன் என்று கூறலாம் தவறில்லை.வடநாடு தென்நடு எனப் பிரித்தல் தவறு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :