• GLITTERS | பளபள

முகம் மலர வைக்கும் மலிவு விலை “மோடி இட்லி”!


நேர்காணல் : சேலம் சுபா

மாங்கனி நகரான சேலத்தின் சந்தடி மிகுந்த தொழிலாளர்கள் அதிகம் உள்ள லீ பஜார் பகுதி! காலை ஏழு மணி. சர்ரென்று அந்த வேன் வந்து நின்றதுமே, பெரும் ஆரவாரம்!

“அட வாங்கப்பா மோடி இட்லி வேன் வந்தாச்சு..” என்று, அங்கு அதற்காகவே காத்திருந்த பலரும் வந்து வேனைச் சுற்றிக் குழுமினர். அனைவருக்கும் பாக்கு மட்டை தட்டு வழங்கப்பட அதில் ஆவி பறக்கும் வெள்ளை வெளேர் இட்லிகள் நான்கும் காய்கறிகள் கலந்த நறுமணம் மிக்க சாம்பாரும் வழங்கப்பட, சந்தோஷமாகப் பெற்று கொண்டு நகர்ந்தனர். நான்கு இட்லிகள் கொண்ட ஒரு பிளேட்டுக்கான விலை – வெறும் 10 ரூபாய் மட்டுமே!

சரியாக ஒன்றரை மணி நேரம்.. பெரிய பெரிய ஹாட் பாக்ஸில் இருந்த நூற்றுக்கணக்கான இட்லிகளும் சாம்பாரும் காலியாயிற்று! இங்கு மட்டுமல்ல.. இது போல் சேலத்தில் தற்சமயம் 12 இடங்களில் மோடி இட்லிகள் விற்பனை செய்யப்படுகிறது.

‘’வெறும் 10 ரூபாய்க்கு 4 இட்லிகள் என்பது எங்களைப்போல் தொழிலாளர்களுக்கு கிடைத்த வரப்ரசாதம்” என்கிறார்கள், வயிறும் மனமும் குளிர! பசித்தவர்களுக்கும் வறியவர்களுக்கும் தேவாமிருதமாய் கிடைக்கும் இந்த மலிவு விலை மோடி இட்லிகளை யார் வழங்குகிறார்கள்?

பிரபல கட்சியொன்றின் பிரச்சார பிரிவின் மாநில துணைத் தலைவராக இருக்கும் மகேஷ் என்பவர், தனது தந்தை பெயரில் உள்ள அறக்கட்டளை மூலம் இந்த மோடி இட்லியை உருவாக்கி பலரின் பசியைப் போக்கி வருகிறார்!

கல்கி ஆன்லைன் வெப்சைட்டுக்காக பிரத்தியேகமாக அவரை பேட்டி காண சென்றோம். அதிகாலையில் கண்ணைக்கவரும் அழகான கிருஷ்ணன் படங்கள் சூழ்ந்த சுத்தமான சமையல்கூடத்தில் மகேஷை சந்தித்தோம்.

மிகவும் எளிமையான தோற்றத்தில் வேட்டியை மடித்துக் கட்டி தலைக்கும் முகத்துக்கும் மாஸ்க் அணிந்து கைகளில் உறைகளுடன் உதடுகளில் புன்சிரிப்புடன் சூடான இட்லிகளை எடுத்து ஹாட் பாக்ஸில் அடுக்கியபடி பொறுமையாகப் பேசினார் மகேஷ்.

முதலில் உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்..?

எங்கள் முன்னோர்கள் தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி மன்னரின் வம்சாவளியினர். சுமார் முன்னூறு வருடங்களுக்கு முன் தமிழகத்தில் வந்து வசித்தவர்களின் வழித்தோன்றல்கள் நாங்கள். சுதந்திரப்போராட்டங்களிலும் அவர்களின் பங்கு இருந்தது. என் அம்மாவழித் தாத்தா ஸ்ரீனிவாசமூர்த்தி ராவ் சைமன் கமிசனின் போது ஆங்கிலேய அதிகாரியை வண்டியிலிருந்து கீழே தள்ளித் தன் எதிர்ப்பைக் காண்பித்தவர். அதற்குப் பரிசாக கண்கள் நோண்டப்பட்டு பல சித்ரவதைகளை சிறையில் அனுபவித்தவர். இன்றும் தியாகிகள் வரிசையில் உள்ளவர்.

அப்பா ஸ்ரீதரனும் சேவைகளில் சளைத்தவரில்லை. அரசுக் கல்லூரியின் முதல்வராக இருந்த அவர், ரத்ததானம் ஏழை மாணவர்களுக்கு கல்வி போன்ற எண்ணற்ற சேவைகளை செய்துள்ளார். 1978 ஆம் ஆண்டு ஊட்டியில் நாங்கள் இருந்தபோது ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உடை இருப்பிடம் போன்றவைகளுடன் வெள்ளத்தில் இறந்த ஆதரவற்ற பிணங்களை அடக்கமும் செய்தார்.. இவரின் சேவையைப் பாராட்டி அன்று முதல்வராக இருந்த திரு. எம் ஜி ஆர் என் தந்தைக்கு சிறந்த சமூக சேவகர் விருதைக் கொடுத்தார். என் தந்தைக்கு ஊட்டி எம் ஜி ஆர் எனும் செல்லப்பெயரும் உண்டு.

இப்படி எனக்குள் சேவை எண்ணம் இயற்கையாகவே எழ என் தந்தையும் காரணம். சேலத்தில் உள்நாடு வெளிநாடு சேவைகளுக்கான க்ளோப் ட்ரோட்டெர்ஸ் (GLOBE TROTTERS) எனும் ட்ராவல் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். என் மனைவி பத்மஸ்ரீ, மகள் கோபிகா. மகன் கிருஷ்ண கேசவ் தாஸ்.. நாங்கள் இஸ்கான் அமைப்பில் ஈடுபாடு உடையவர்கள். கட்சிப் பொறுப்பில் இருந்தாலும் ஆத்ம திருப்தி தரும் சேவைகளுக்காக என் நாளின் பெரும்பகுதியை ஒதுக்குகிறேன்

எப்படி எழுந்தது இந்த மோடி இட்லி தயாரிக்கும் எண்ணம்?

கொரானா ஊரடங்கில் நிறைய பேர் உண்ண உணவின்றித் தவித்தனர். எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் பசி வந்து விட்டால் கடவுளே ஆனாலும் பொறுக்க முடியாது. அச்சமயம் சுமார் ஏழாயிரம் பேருக்கு உணவு தந்தோம்.. அந்த நேரத்தில் எனக்குள் விழுந்தது இந்த சேவைக்கான ஆரம்பப் புள்ளி. இந்த லாக்டவுன் சமயத்தில் வருமானமின்றி தவிப்பவர்களுக்காக மலிவு விலையில் காலை உணவைத் தந்தால் என்ன என்று சிந்தித்தேன். ஏற்கனவே என் தந்தை பி எஸ் ஸ்ரீதரன் அறக்கட்டளை மூலம் சேவைகள் செய்வதால் பெற்ற அனுபவங்கள் கை கொடுத்தன. நான் நேசிக்கும் ஹீரோ என் ரோல்மாடல் பிரதமர் மோடி என்பதால் அவரின் பெயரையே வைத்தேன். கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக பிளான் செய்து அதற்கான உபகரணங்களுடன் இந்த இடத்தில் சமையற்கூடத்தை உருவாக்கினோம்.

என்னென்ன உபகரணங்கள்? எத்தனை பேர் பணியில் உள்ளனர்?

இட்லி மாவு தயாரிப்புக்கென அரவை இயந்திரங்கள், 500 லிட்டர் நீர் கொள்ளளவு கொண்ட பிரமாண்ட ஸ்டீமர், 10 நிமிடங்களில் 900 இட்லிகளை ஒரே சமயத்தில் வேகவைக்கும் மூன்று இயந்திரங்கள், சாம்பார் வைப்பதற்கான பாத்திரங்கள், அடுப்புகள், இட்லிகளை சூடாக எடுத்து வைக்க பிரமாண்டமான ஹாட் பாக்ஸ்கள் என கோவையில் உள்ள ஒரு தரமான நிறுவனத்தில் ஆர்டர் கொடுத்து செய்து வாங்கினோம்.

அரிசி உளுந்து பருப்பு போன்ற மளிகைப் பொருள்களையும், பூசணி கேரட், வெங்காயம் போன்ற காய்கறிகளையும் முதல் தரத்தில்தான் வாங்குகிறோம். உதராணமாக சாம்பாருக்குத் தேவையான முருங்கைக்காய் கரூரில் உள்ள அரவக்குறிச்சியில் நேரடியாக விவசாயிகளிடமிருந்து வருகிறது. இப்படி எங்கு தரமாக இருக்கிறதோ அங்கிருந்து எல்லாம் தருவிக்கப்படுகிறது.

மேலும் முழுக்க முழுக்க தூயநீரில் தயாராகும் சுத்தமான சுகாதாரமான இட்லிகள் என்பதற்கான சுகாதாரத் துறையின் (fssai) தரச்சான்றிதழும் பெற்று இருக்கிறோம். இட்லிகளை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்ல வாகனமும் தயார் நிலையில் உள்ளது.

இங்கு பணிபுரிபவர்கள் கட்டாயம் தலைக்கும் வாய்க்கும் கைகளுக்கும் கவசமும் உறைகளும் அணிந்திருக்க வேண்டும். தினம் சமையல் முடித்து விட்டு கூடத்தை சுத்தமாக கழுவி விடுவோம். தற்சமயம் ஆண்களும் பெண்களுமாக முப்பது பேர் இதற்கான பணியில் உள்ளனர். முக்கியமாக வாழ்வாதாரம் தேடும் பெண்களுக்கு வேலையில் முன்னுரிமை தரப்படுகிறது. இதனால் கிடைக்கும் வருமானம் அவர்களுக்கு உதவியாய் உள்ளது.

எப்படி உங்களால் மலிவு விலையில் பத்து ரூபாய்க்கு நான்கு இட்லிகள் சாம்பாருடன் தரமுடிகிறது?

என் தந்தைக்கு சொந்தமான நிலம் ஒன்று என்னிடம் இப்போதுதான் வந்தது. அதை விற்றுக் கிடைத்த பணத்தைத்தான் இந்த சேவைக்கான முதலீடாக போட்டிருக்கிறேன். நாம் எவ்வளவு சொத்து சம்பாதித்தாலும், போகும்போது எதையும் எடுத்துச்செல்லப் போவதில்லை! அப்படியிருக்க, நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யலாமே என்றுதான்!

உங்களின் அடுத்த இலக்கு?

இப்போது சேலத்தின் முக்கியமான 12 இடங்களில் மோடி இட்லிகள் கிடைக்க வழி செய்துள்ளோம். அடுத்து வரும் சில வாரங்களுக்குள் முப்பது கிளைகளை திறந்து விடுவோம். அதே போல் விரைவில் மோடி தோசை, சப்பாத்திகளையும் தர இருக்கிறோம். எங்கள் அறக்கட்டளை மூலம் எங்களால் முடிந்த பட்ஜெட்டில் காலை உணவுகளை வழங்கி வருவதால் மேலும் பலருக்கு வேலை வாய்ப்புகளும் கிடைக்கும்.

இந்த சேவை தனியொருவனாய் என்னால் மட்டும் செய்ய முடியாது.. இது வெற்றி பெற தங்கள் உடல் உழைப்பைத் தந்து உதவும் நல்ல உள்ளங்களும் தான் காரணம்!

-புன்சிரிப்புடன் சொல்லி முடித்தார் மகேஷ்.

விடியற்காலை இரண்டு மணிக்கு சமையற்கூடத்திற்கு முதல் நபராக வரும் திரு.மகேஷ், ஆவி பறக்கும் இட்லிகளை எடுத்து அடுக்குவதுமுதல் சாம்பாரின் ருசியை சரி பார்ப்பதுவரை பணியாளர்களுடன் இணைந்து செய்கிறார். மேலும் தயாராகி விட்ட இட்லிகளையும் சாம்பாரையும் மேற்பார்வையிட்டு அனைத்து இடங்களுக்கும் அனுப்பி வைத்த பின்புதான் வீட்டுக்கு செல்கிறார்..

பணம் இருந்தாலும் கொடுக்கும் மனம் வேண்டும். மனம் இருந்தாலும் சரியான திட்டம் தீட்டி செயலில் இறங்க உழைப்பும் முயற்சியும் வேண்டும்..அதை செவ்வனே செய்கிறார் திரு.மகேஷ்.
Comments

Vani Ganapathy says :

அருமை ..சேவை மனப்பான்மை சிறந்து விளங்குகிறது. இந்த அரிய பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..

E SEKAR vedathiri says :

Super

E SEKAR vedathiri says :

Super

Sekarvedathiri says :

Sir now am coffee shop business am interested idi i concheift please co-operate tome9380916790 ihave all idi machine MODI IDILE SUPER WISHES TO HONORABLE MAHESH SIR

Ramesh says :

அருமை. வாழ்த்துக்கள்!

Gayatri says :

Just one big Thank you

கேஆர்எஸ் சம்பத். says :

பசி ஆற்றும் பணி. பாராட்ட வேண்டிய பணி. அரசியல் சாயம் இல்லாமல் அமைதியாக தொடர்ந்து இப் பணி தொடர எமது வாழ்த்துக்களும் ஆசிகளும்.

T. Rhevathi says :

Super. மக்கள் சேவையே மகேசன் சேவை. இந்த மகேஷ் சாரின் சேவையும். என்றும் தாயகத்துக்கு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.மற்றும் பிராத்தனைகள்.

கோ. மோகனவேல் says :

வாழ்த்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :