அழகிய உவமைகளும்! - 2 /> அழகிய உவமைகளும்! - 2 />

  • தீபம் - ஆன்மீகம்

ஆழ்வார் பாசுரங்களும்
அழகிய உவமைகளும்! - 2


- லதானந்த்

பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆண்டாள். நந்தவனத்திலே இவரைக் கண்டெடுத்தார் பெரியாழ்வார். ஆழ்வாரின் வளர்ப்பு மகளாகவும் ஆனார். கோதை எனப் பெயர் சூட்டப்பட்டார். தான் சூடிய மலர் மாலையை ஆண்டவனுக்குச் சூடி அழகு பார்த்த பெருமாட்டி இவர். அதனால், ‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடி’ என்றும், ‘நாச்சியார்’ என்றும் அழைக்கப்படுகிறார். கண்ணனை நாயகனாகவும் தம்மை நாயகியாகவும் உணர்ந்து திருப்பாவை யில் பாடல்கள் புனைந்தவர். மானிடனை மணக்கப்போவதில்லை என்ற உறுதியுடன் இருந்தவர் ஆண்டாள்.

அவரது திருப்பாவை பாசுரங்களில் எண்ணற்ற உவமைகள்; எல்லாமே இனியவை; ஏற்றமுடையவை; எழில் வாய்ந்தவை. இங்கே சில உங்களுக்காக :

மார்கழி திங்களில் - மதி நிறைந்த நன்னாளில் - தோழியரை அதிகாலை யில் விழித்தெழச்செய்து ஆயர்பாடி கிருஷ்ணனின் கல்யாண குணங்களை விவரிக்கிறார் ஆண்டாள். கண்ணன் கூர் வேல் போலும் கண் கொண்டவன்; நம் உள்ளங்களைக் கொள்ளையிடும் கொடுந்தொழிலன். அவன் முகம் எப்படி இருக்கிறது தெரியுமா? பிரகாசத்தால் சூரியனைப் போல ஜொலிக்கிறது. ஆனால், அதேசமயம் சந்திரனைப் போல தண்ணொளியும் பாய்ச்சுகிறது. அந்தத் திருமுகத்துக்குச் சொந்தக்காரன் நமக்கு வேண்டிய வரம் தருவான் என்கிறார்.

சூரியனும் சந்திரனும் ஒன்றாக இருக்க முடியுமா? ‘முடியும்’ என்கிறார் ஆண்டாள்! ஒளியிலே சூரியன்; குளிர்சியிலே சந்திரன்! இரண்டும் ஒருசேர இருப்பதுதான் எந்தன் நாயகன் கண்ணனின் திருமுகம்! இப்படி இல்பொருள் உவமையாக எம்பெருமானின் எழிலை எடுத்தியம்புகிறார் அந்த சூடிக் கொடுத்த சுடர்க்கொடி!

இதோ அந்தப் பாடல் :

‘மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.’

எல்லா உயிர்களும் வையகத்தில் வாழ அடிப்படையானது தண்ணீர். அதைத் தருவது மழை. மழையே இறைவனின் பெரும் கொடை. அந்த மழையை கண்ணன் தர வேண்டும்; மாநிலம் குளிர வேண்டும்; மகத்துவம் பெருக வேண்டும் எனப் பாட விழையும் ஆண்டாள், அந்த மழையும் எப்படிப் பொழிய வேண்டும் எனச் சொல்லி, உவமைச் சாரலில் நம்மை நனைய வைத்துச் சிலிர்க்க வைக்கிறார்; சிந்திக்க வைக்கிறார்!

‘நீயே சமுத்திரம் போன்ற பிரமாண்டமான மழைக்கு அதிபதி’ என்கிறார். இங்கே சமுத்திரத்தின் பரப்பு, மழையின் தீவிரத்துக்கு உவமையாகிறது.

நீ கடல் ஆழம் வரை சென்று, முகந்து வரும் நீர் ஆகாயத்தில் கருத்த மேகமாக இருக்கிறது. கருப்பு என்றால் எப்படிப்பட்ட கருப்பு? காணற்கரிய திருமாலின் கருமேனி போலக் கருப்பு! மேகம் மட்டும் போதுமா? மின்னல் வேண்டாமா? அது பார் புகழும் பத்மநாபனின் வலக்கையில் திகழும் சக்கரத்தைப் போல மின்னுகிறது. மேகம், மின்னல் சரி. இடி? அதற்கும் உவமை இருக்கிறது. திருமாலின் இடக்கையிலிருக்கும் சங்கின் நாதம்தான் இடிக்கு உவமை.

இதெல்லாம் சரி. மழை எப்படிப் பொழிகிறதாம்? ராமாவதாரத்தில் ஸ்ரீராம பிரானுடைய சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து வீரியமாய்ப் புறப்பட்ட அம்பு மழைபோல இருக்கிறதாம் அந்த மழை! அதுபோல மழை பெய்து அகிலம் உய்ய வேண்டும் என்கிறார் ஆண்டாள்!

‘ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீகைவரவேல்
ஆழியுள் புக்கு, முகந்து கொடுஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கருத்து,
பாழியந்த் தோளுடைய பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் செய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.’

(உவமைகள் தொடரும்)

Comments

Mangalagowri says :

எளிமையான இனிமையான வரிகளில் உவமைகளை உளமாறத் தருகிறீர்கள் சார். என்னைப் போன்ற பாமரர்களுக்கு எளிதில் விளங்கும் வண்ணம் இருப்பதுதான் உங்களின் எழுத்தின் சிறப்பு. நன்றி

G Srikanth says :

ஆழிமழை கண்ணா பாடலை அர்த்தமுள்ள இந்துமதம் ஒலிநாடா உரையில் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் குரலிலியே கேட்டது என் செவிகளில் இன்னமும் ரீங்கரிக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :